பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: ”ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். முறையாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்து பட்டயம் (D.T.Ed), பட்டம் (B.Ed) பெறக் கூடியவர்களுக்கு, வேலைக்குச் செல்வதற்கான போட்டித் தேர்வு (Competitive Exam) நடத்துவதற்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே மீண்டும் தகுதித் தேர்வு (Eligibility Test) நடத்துவதற்கும் வேறுபாடு உள்ளது என்பதைப் பலமுறை நாம் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கான தகுதித் தேர்வு (அதில் தேறினாலும் வேலை உறுதியில்லை; அதன் பிறகு போட்டித் தேர்வு தனியாக ஏன் எழுத வேண்டும்) என்று தொடங்கியதுதான், இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பல்லாண்டுகளாகப் பணியில் உள்ளவர்களுக்கும் அத்தகைய தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

நெருக்கடி ஏற்படுத்தும் பல்வேறு தேர்வுகள்
கல்வி கற்றவர்களின் துறை சார் அறிவை அளவிடுவதற்கான ஒரு சிறிய கருவியே தேர்வு ஆகும். தேர்வே அனைத்திற்கும் அடிப்படையானது அல்ல; தேர்வை நோக்கிய கல்வி முறை என்பதே அறிவார்ந்த சமூகத்திற்கு முழுமையாக ஏற்புடையது அல்ல என்னும் நிலையில், மீண்டும் மீண்டும் பல்வேறு பெயர்களில் தேர்வுகளை மாணவர்கள், ஆசிரியர்கள் என கல்வித் துறையின் அனைத்துத் தரப்பின் மீதும் திணித்து, நெருக்கடியை ஏற்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.
பணியில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும், அவர்களின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு அளவுகோல்களும், வழிமுறைகளும், பயிற்சிகளும் தொடர்ந்து கல்வித்துறையால் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தகுதித் தேர்வு கொண்டு வரப்படுவதற்கு (2011ஆம் ஆண்டுக்கு) முன்பு பணியில் சேர்ந்து நெடுங்காலம் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தகுதித் தேர்வைக் கட்டாயமாக்கி, அதில் வெற்றி பெற்றால் தான் பணியில் தொடர முடியும், வேலை நிரந்தரம் என்று கட்டாயப்படுத்துவது சரியான தீர்வு ஆகாது.
இனி, மருத்துவர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு, நீதிபதிகளுக்கு, பொறியாளர்களுக்கு என்று அடுத்தடுத்து தகுதி தேர்வுகள் கொண்டுவரப்படுமா? இப்படி தகுதித் தேர்வு வைக்கும் நடைமுறை எல்லா துறைகளுக்கும் விரிவாக்கப்படுமானால் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே, மருத்துவப் படிப்பில் சேர்வதற்குத் தகுதித் தேர்வு (NEET), பிறகு பாடம் படித்துப் பல்கலைக் கழகத் தேர்வெழுதித் (Semesters) தேறியபின்னும், மேல் படிப்புக்கு மீண்டும் தகுதித் தேர்வு (PG-NEET) அல்லது மருத்துவத் தொழில் செய்ய நெக்ஸ்ட் (NEXT) தேர்வு என்று நாட்டையே தேர்வு ரேஸுக்காக ஓடும் குதிரைகளாக்குவது அறிவார்ந்த செயல் ஆகாது. அப்படிப்பட்ட சூழல் தான் அடுத்து கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் ஏற்படவிருக்கிறது.
தேர்வு, தேர்வு என்று அனைவரையும் தேர்வுக்குள் தள்ளுவது, நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு பயிற்சி மய்யங்களின் வருவாய்க்கு வழிகாட்டுமே தவிர, இந்தியாவின் கல்விச் சூழலை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த, கல்வித் தரத்தை மேம்படுத்த, கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த ஒருபோதும் உதவாது.
தமிழ்நாடு அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது
தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதும், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுசீராய்வுக்கு உட்படுத்தி, ஆசிரியர்களுக்குத் திணிக்கப்படும் நெருக்கடியைத் தவிர்க்க முன்வருவதும் அவசியமாகும். என்றாலும் எதையும் எதிர் நோக்கி, நெடுங்காலமாக ஆசிரியர் பணியில் தொண்டாற்றும் ஆசிரியர் பெருமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய மாற்று வழிகளும், பரிகாரங்களும் உடனடித் தேவையாகும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் தரப்பினர் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கிறோம்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளாா்.
நிர்மலா முதல்வர் வேட்பாளர்! ஆப்படித்த அண்ணாமலை! வெளியேறிய டிடிவி தினகரன்! உமாபதி பேட்டி!