பிரபல மளிகை பொருட்கள் டெலிவரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மளிகை பொருட்கள் எரிந்து சேதமாயின.
மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி சாலை, புதுநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் பிரபல நிறுவனம்(செப்ட்டோ) செயல்பட்டு வருகிறது.
இந்த டெலிவரி நிறுவனத்தில் இன்று காலை ஒரு மணி அளவில் திடீர் என தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீ, கண் இமைக்கும் நேரத்தில் கிடங்கு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் பள்ளிகரண காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மேடவாக்கம், துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு டேங்கர் வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை மற்றும் உணவு பொருட்கள், மின்னணு சாதனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் அறையில் உள்ள ஏசி கேஸ் லீகேஜ் ஆகி திடீரென தீப்பற்றியது தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக செயலாளர் சுகுமாருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை – வீடியோ வைரல்


