தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போதைய நிலைமை குறித்து சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளாா்.அதிமுக ஆட்சியின் போது நஷ்டத்தில் இருந்த மின்சாரத் துறையின் கடன்களுக்கான வட்டிகளை செலுத்தி அவர்கள் ஏற்படுத்திய இழப்பீட்டை சரி செய்து மின்வாரியத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப் பேரவையில் 2025-2026-ம் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. 2025 -26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்ச் 15-ந் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் நடைபெற்றது.
பட்ஜெட் மீதான இன்றைய விவாதத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , “மின்சாரத் துறைக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் 40 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 68,406 கோடி ரூபாய் மின் கட்டண மானியம் வழங்கப்படுகிறது.
மின்சார வாரிய மேம்பாட்டுக்காக முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் அது 68 ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி என்ற வகையில் மட்டும் 16,500 கோடி ரூபாய் மாதந்தோறும் மின்சாரத் துறை செலுத்துகிறது. இதை சமாளிக்க தற்போதைய தமிழக அரசு மின்சார துறையில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சார துறை நஷ்டத்தில் இருந்தது. கடனுக்கான வட்டி செலுத்தி இழப்பீடையும் சமாளித்து தற்போது மின்சார துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என விளக்கமளித்துள்ளாா்.