தமிழக ஆளுநர், கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போட நினைப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லத்தில் இன்று மருத்துவர் அமுதகுமார் எழுதிய ‘நல்ல உணவு நலமான வாழ்வு’ என்ற புத்தகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேட்டி, நலமான வாழ்வுக்கு அனைவரும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தோம். மூன்று மாதங்கள் கடந்தும் தற்போது வரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் தானும் மற்ற அதிகாரிகளும் பலமுறை முயன்றும் ஆளுநர் மாளிகையில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இதற்கு மேலும் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தினால், மீண்டும் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு, தமிழ், கலைஞர் என்று சொன்னாலே கசக்கிறது என்று தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!