தாய்க்கு சிலை வடித்த மகன்!
நாமக்கல் லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (30) வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தாயார் மணி (50). உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோயில் கட்ட வேண்டும் என்பது பிரபு வுக்கு சிறுவயது முதலே ஆசையாம்.

பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது தாயாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தனது வீட்டிற்கு அருகே 1200 சதுர அடி நிலம் வாங்கி கோயில் கட்டி அதில் 3 அடி உயரத்தில் சிலை வைத்துள்ளார். ரூ.1.50 லட்சம் மதிப்பில் இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் வெள்ளை நிறத்தில் உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வடிப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலைவடித்து கோயில் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரபு கூறுகையில், “இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட உயிருடன் இருக்கும் தனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவ படுத்த வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது” என்றார்.


