சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா தாக்கல் செய்த இந்த மனு உச்ச நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.வி.நாகரத்தினா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை பரிசீலித்தது.
விசாரணையில் மனுதாரர் தரப்பில், தனது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதலளித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை என்பது மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது என்பது மத்திய அரசுக்கே உட்பட்டதாகும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில், , மாநில அரசு சுங்க கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையில் விசாரிக்கத்தக்க காரணம் எதுவும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
