கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை அக்கரை – மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகித்து வருகிறது.
இவ்வழி தடத்தில் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். மக்களவைத் தேர்தல் நடந்ததால், கட்டணம் உயர்த்தப்படாமல் முந்தைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த நிலையில், தற்போது கட்டணத்தை உயர்த்தி, இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு முறை பயணிக்க, ஒரு முறை சென்று திரும்பி வர, ஒரு நாளில் பலமுறை பயணிக்க, 90 நாட்களில் 50 முறை சென்று வர, மாதந்திர அட்டை என்று அனைத்து வகைகளில் சேர்த்து கார், ஜீப், மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் முதல் 68 ரூபாய் வரையிலும், இல குரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் 110 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, கார், ஜீப், மூன்று சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.72, ஒரு முறை சென்று திரும்பி வர ரூ.72, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.131, 90 நாட்களில் 50 முறை சென்று வர ரூ.1589, மாதந்திர அட்டைக்கு ரூ.2789 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் வணிக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணத்தை பொறுத்த வரையில் சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், மூன்று சக்கர வாகனங்களுக்கு 245 ரூபாயாகவும், இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு 310 ரூபாயாகவும், டிரக்ஸ், பல அச்சு வாகனங்களுக்கு 970 ரூபாயாகவும், பள்ளி பேருந்துகளுக்கு 1,940 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.