’மனவேதனையில் இருக்கிறேன்’ – திருச்சி சிவா எம்.பி.
எனக்கு தனி மனிதனை விட இயக்கம் தான் பெரிது என திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.
திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை சென்றபோது திருச்சி சிவாவை திருச்சி மாவட்ட திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கருப்பு கொடி காட்டினர்.
இது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை செசன்ஸ் கோர்ட் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென காவல் நிலையத்திற்குச் சென்ற திமுகவை சேர்ந்த காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் துரைராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கருப்புக் கொடி காட்டியவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கினார்.
இது தொடர்பாக அவர்கள் 5 பேர் மீதும் கலவரம் ஏற்படுத்த முயற்சித்தம், பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 9 பிரிவுகளிப் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் திருப்பதியை போலீசார் கைது செய்தனர். மற்ற நான்கு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “நான் இயக்கத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்து வந்தவன். அழுத்தமான திமுக காரன். எனக்கு தனி மனிதனை விட இயக்கம் தான் பெரிது. நேற்று நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. என் வீட்டில் உள்ள வயதான உதவியாளர்கள், பணியாளர்கள் அனைவரும் மிகுந்த பதட்டம் அடைந்துள்ளனர். அவர்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் மனசோர்வு ஏற்படுகிறது. நான் இது குறித்து தற்போது எதையும் பேசும் மனநிலையில் இல்லை” என்றார்.