போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு நீதி வேண்டும்- டிடிவி தினகரன்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும்.அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.