சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை, அது அவரவர் விருப்பம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சாதியை வைத்துக்கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர், அதற்கு சட்ட போராட்டம் நடத்தினோம். சாதி அடிப்படையின்றி அனைத்து தரப்பினரையும் முன்பு கோயிலில் அனுமதித்து கொண்டிருந்தீர்களா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, அதையும் மீறி உரிமை பெற்று தந்தோம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அன்று கூறியதை விட, இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன். சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை, அது அவரவர் விருப்பம்.
நான் பேசியது யூடியூபில் உள்ளது, எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியே திமுக. மதத்திற்கு எதிராக நான் பேசவில்லை, மதத்தின் உள் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தான் பேசினேன்” என்றார்.