நீங்க பில் தான கேட்டீங்க… சீரியல் நம்பர் கேட்டீங்களா? – வானதி சீனிவாசன்
ரபேல் வாட்ச் பில்லில் முரண்பாடு இருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், நீங்க பில் தான கேட்டீங்க… சீரியல் நம்பர் கேட்டீங்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதற்கு முன்னதாக, பெரும் விமர்சனத்துக்குள்ளான தனது ரஃபேல் வாட்ச் தொடர்பான ரசீதையும் இன்று அவர் வெளியிட்டார். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்ச்சை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கோவையைச் சேர்ந்த எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன் என்று அண்ணாமலை கூறினார். அவரிடமிருந்து ரொக்கமாக 3 லட்ச ரூபாய் கொடுத்து அண்ணாமலை ரஃபேல் வாட்சை வாங்கிக்கொண்டதாக கையெழுத்து போடப்பட்ட ரசீதையும் வெளியிட்டார். இந்த இரண்டு ரசீதுகளிலும் இருக்கும் சீரியல் நம்பர் வேறுபட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “ரபேல் வாட்ச் பில் கேட்டீங்க… பில் வந்ததா? இல்லையா? அவ்வளவுதான். நீங்க பில் தான் கேட்டீங்க… சீரியல் நம்பர் கேட்கவில்லையே. 149க்கும் 147க்கும் இடையில் ஒரு நம்பர் தானே வித்தியாசம், ஏதோ பெரிய வித்தியாசம் இருப்பதை போல சொல்கிறீர்கள்” என பதில் அளித்தார்.