அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது – திருமா
அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் பிரதமர் மோடி அரசு முடக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய அரசமைப்பு அவையில், அண்ணல் B.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை எனும் நூல் வெளியீட்டு விழா, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், “அமித் ஷாவும் மோடியும் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடியவர்கள் அல்ல, அம்பானிக்கும் அதானிக்கும் தொண்டு செய்யக் கூடியதே ஒன்றிய மோடி அரசு. அதானி குறித்து விவாதிக்க மறுத்து, 5 நாட்களாக நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி முடக்கி விட்டார். அதானியை பாதுகாப்பதற்காக அரசாங்கமா? அல்லது மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கமா?
எட்டு ஆண்டுகளில் ஒருவர் எப்படி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரன் ஆக முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கு துணை போகிறது, இது காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து என்பதை விட, மக்களுக்கு ஆபத்து, சமூக நீதிக்கு ஆபத்து. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து.அரசமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.