விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு அரசியலில் தங்களது எதிரிகள் யார் என்பதை தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
‘‘அரசியலில் மக்கள் சேவையாற்ற யார் வந்தாலும் அந்த எண்ணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . விஜயின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? தேசிய பாதையில் போகப் போகிறாரா? அல்லது மாநில வாதம் பேசப்போகிறாரா? என அவர் கொள்கையை அறிவித்த பிறகு தான் தெரியவரும். பெரியாரின் படத்தை வைத்திருப்பதால் அங்கு தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் இடம் இல்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை. அவர் கொள்கை ரீதியாக குழப்பத்தில் உள்ளார். இவர் தேசியவாதியா? பிரிவினைவாதியா எனத் தெளிவுபடுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.