லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த போரில் லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், ஹமாசுக்கு ஆதரவு அளித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், லெபனானில் அண்மையில் பேஜர் கருவிகள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலின் உள்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவினர். இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று 300-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.