பயங்கர நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கியில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள அங்காரா மாகாணத்தில் உள்ள மத்திய அனடோலியா பகுதியில் அதிகாலை 3.13 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோல்பாசி நகருக்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை காசியான்டெப் அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, சிரியாவிலும், துருக்கியிலும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள்போல சரிந்துவிழுந்தன. இதில் சிக்கி 4,300 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவின் பெரும்பகுதி முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.