Homeசெய்திகள்உலகம்கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

-

சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் ‘பிஎப்.7’ வகை முக்கிய பங்கு வகிக்கிறது.

அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங் தென் மேற்கு பகுதி மற்றும் சிறிய நகரங்களில் வார்டுகள் நிரம்பி வழிகின்றன.

சீனாவின் தொழில்துறை மாகாணமான ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜூஜவ் நகரில் உள்ள நெரிசலான வார்டுகளில் ஆபத்தான நிலையில் உள்ள டஜன் கணக்கான வயதான நோயாளிகள் சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்படுவதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனாவால் உயிர்ப்பலிகள் பெருகி வந்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளாக அவை காட்டப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகளால் உயிரிழப்புகள் நேரிடுவதாகத்தான் சீனா பதிவு செய்கிறது. ஆனால் தகன மையங்கள், உடல்களால் நிரம்பி வழிவதாகவும், உடல்களை தகனம் செய்து விட்டு, அஸ்தியைப் பெறுவதற்காக மக்கள் கார்களில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

‘ஜீரோ கோவிட்’ கொள்கை என்ற பெயரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சீனா கொண்டு வந்த தீவிர கட்டுப்பாட்டுக்கொள்கை மக்களை விரக்தியில் ஆழ்த்தி, போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. பலர் தங்கள் வீடுகளிலேயே சோதனை செய்து கொள்கின்றனர். அதன்பிறகுதான் இப்போதைய கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

MUST READ