வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்
அமெரிக்காவும், அதன் கைப்பாவையாக செயல்படும் தென்கொரியா மீதும் உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரியா எச்சரித்துள்ளது
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தை பதற்றத்துடன் வைத்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரியாவும், அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானமான பி-52 ரக விமானத்துடன் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க படைகள் மற்றும் அதன் கைப்பாவை தென்கொரிய ராணுவத்தின் அமைதியற்ற ராணுவ நகர்வுகளை தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.