spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

-

- Advertisement -

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் பெங்களூருவில் வேலூர் போலீசார் மீட்டனர். கடத்தலில் தொடர்புடைய மத போதகர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூரில் பிறந்த ஆண் குழந்தையை கடத்தி பெங்களூருவில் 7 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல் சிக்கியது எப்படி?

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள புறநோயாளிகளாக, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர்.

we-r-hiring

இங்கு இரண்டு கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இதில் சுமார் 350 படுக்கைகள் உள்ளன. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு நாளொன்றுக்கு 40 முதல் 50 பிரசவங்கள் வரை இங்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி சின்னு(20). கடந்த 27ம் தேதி பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு அன்றிரவே ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் குழந்தை நல வார்டுக்கு தாய் சின்னுடன் குழந்தையையும் மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (31) காலை 7 மணியளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தை அழுததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வார்டில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சின்னியிடம் பேச்சுக் கொடுத்து குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவை சாப்பிடச் சொல்லிவிட்டு குழந்தையை தாலாட்டுவது போல் தாலாட்டிகொண்டு வார்டுக்கு வெளியே வந்து மாயமாகியுள்ளார்.பின்னர் சாப்பிட்டுவிட்டு வந்த பார்த்தபோது குழந்தை வைத்திருந்த பெண்ணும் குழந்தையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

அக்கம்பக்கத்தில் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையும், அந்த பெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை.பின்னர் அந்த பெண் தனது குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வார்டு நர்சிடம் கூறியதை அடுத்து அவர் உடனடியாக வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் வேலூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுபா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மருத்துவமனையின் பிரசவ வார்டு மற்றும் வெளி வளாகத்தில் முக்கிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் பிரசவ வார்டில் புகுந்த பெண், கட்டைப் பையுடன் ஒரு சிறுவனுடன் வெளியே செல்வது பதிவாகியிருந்தது. அந்த பையில் குழந்தையை வைத்து அவர் கடத்தி சென்றிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

குழந்தையை கடத்திச் சென்ற அந்த பெண்ணை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன், வேலூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுபா, உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சிசிடிவி கேமராவில் பதிவான பெண் வேலூர் இடையன்சாத்து பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா(38) என்பது தெரியவந்துள்ளது.

இடையன்சாத்து பகுதியில் இருந்த அவரை நேற்று(31) இரவு காவல் ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

போலீஸார் விசாரணையில் மருத்துவமனையில், கடத்திய குழந்தையை பெங்களூரை சேர்ந்தவர்களுக்கு கொடுத்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்தனர். அதனை அடுத்து இன்று அதிகாலை குழந்தையை கடத்திய 7 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் குழந்தையையும் போலீசார் மீட்டனர். பின்னர் அங்கு உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து மருத்துவபரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின்னர் தனிப்படை போலீசார் இன்று மாலை குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட குழந்தையையும், கடத்தியவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த அஜய்குமார் ஐஸ்வர்யா என்ற தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட காலமாகவே குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான லீலாவதி என்பவரிடம் ரூ.7 லட்சத்தை கொடுத்து தங்களுக்கு ஏதேனும் ஒரு குழந்தையை வாங்கித்தருமாறு கூறியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான லீலாவதியும் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பணத்தை பெங்களூருவைச் சேர்ந்த அம்மு (எ) ஞானமணி மற்றும் அவரது கணவர் வேலூர் மாவட்டம் இடையஞ்சாத்து கிராமத்தைச் சேர்ந்த மதபோதகர் சாலமன் செல்லதுரை ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் குழந்தையை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் லீலாவதி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இடையஞ்சாத்து கிராமத்தில் தனது வீட்டு பணிகளை கவனித்து வரும் மாலா என்ற ஜெயந்திமாலா விடம் மதபோதகர் சாலமன் செல்லத்துரை ஏதேனும் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்துதரும்படி கேட்டுள்ளார்.

இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவார்டில் தனியாக உள்ள தாய்மார்களை நோட்டமிட்டு வந்த வைஜயந்திமாலா சமயம் பார்த்து சின்னியின் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறக்கும்போது குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் ஒரே பதிவில் கொண்ட பாதுகாப்பு கவசம் (Tag) பொருத்தப்படும். இது மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்எப்டி சென்சார் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அதாவது இந்த ஆர்எப்டி (ரேடியோ ப்ரீகுவன்சி டெக்னாலஜி அல்லது ரேடியோ ப்ரீக்வன்சி ஐடென்டிபை) பாதுகாப்பு கவசம் (டேக்) பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது குழந்தையின் தாய் கட்டிடத்தை விட்டு வெளியேறினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன்மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ, அல்லது குழந்தையை கடத்தி செல்லும் சம்பவங்கள் தடுக்கப்படும்.

ஆனால் கடந்த ஜூலை 31 அன்று குழந்தையின் கையில் இருந்த பாதுகாப்பு கவசத்தை (டேக்கை) குழந்தை கடத்த வந்து  வைஜயந்தி மாலா குழந்தையின் படுக்கையிலேயே கழற்றி வைத்துள்ளனர்.

இதனால் குழந்தையை கடத்திச் செல்லும்போது எச்சரிக்கை மணி (அலாரம்) ஒலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குழந்தையை நேற்று ஜூலை 31 காலை 7 மணியளவில் கடத்தி கொண்டு அரசு மருத்துவமனை அமைந்துள்ள அடுக்கம்பாறையில் இருந்து பாகாயம் வரை ஆட்டோவிலும், அங்கிருந்து மற்றொரு ஆட்டோவில் தொரப்பாடி வரை சென்றுள்ளார்.

பின்னர் அங்கு காரில் தயார் நிலையில் இருந்த பெங்களூர் சிக்பல்லபூரை சேர்ந்த 3 பேரிடம் குழந்தையை வைஜெயந்திமாலா கொடுத்துள்ளார்.

அவர்கள் குழந்தையுடன் பெங்களூருக்கு காரில் சென்றுள்ளனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் வேலூர் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா(38), மத போதகர் சாலமன் செல்லதுரை(55), அம்மு என்கிற ஞானமனி(43), கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரவின்செல்வன்(26), சிக்பல்லபூரை சேர்ந்த லீலாவதி(35), அஜய்குமார்(37), ஐஸ்வர்யா(33) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையை ₹7 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் இதேபோல் வேறு குழந்தை கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் பணியின்போது கவனக்குறைவாக இருந்த தனியார் நிறுவன காவலாளி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

மேலும் பிரசவ வார்டில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தை கடத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோரான சின்னி- கோவிந்தசாமியிடம் வேலூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது

10 மாதம் சுமந்து தவமிருந்து பெற்ற ஆண் குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் சின்னு, குழந்தையை கொஞ்சி ஆனந்த கண்ணீர் விட்டார். விரைந்து குழந்தையை கண்டுபிடித்த வேலூர் காவல் துறைக்கு சின்ன கோவிந்தசாமி தம்பதியினர் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.

24 மணி நேரத்திற்குள் குழந்தையை தாயிடம் ஒப்படைத்த வேலூர் காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகமும் பொது மக்களும் பொதுமக்கள் நன்றி பாராட்டினர்.

MUST READ