
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த மகாயுதி கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி விட்டது. காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 தொகுதிகளிலும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டே தலைமையில் ஆட்சி என்றதும் பெருந்தன்மையுடன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவர் தேவேந்திர பட்னாவிஸ். மேலும் அப்போது உருவான பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் தேவேந்திர பட்னாவிஸ். தற்போது தனிப்பெரும் கட்சியாக பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக ஆசைப்படுகிறார். இந்த மாபெரும் வெற்றிக்கு என்னுடைய ஆட்சியில் கொண்டு வந்த “லாட்கி பகின்” திட்டத்தின் மூலம் தகுதியான ஏழை பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம்தான் இந்த தேர்தலில் “பெரிய கேம் சேஞ்சர்” . அதுதான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே டெல்லியில் யார் முதல்வர் என்பதை முடிவு செய்ய உள்துறை அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ரேசில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவர் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதனிடையே தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சர் என்றும் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷிண்டேவிற்கு பதிலாக சிவசேனாவில் அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மும்பையில் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்க ஷிண்டேவை அழைத்தபோது அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும், தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவர் மட்டும் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஷிண்டேவிற்கு சளி பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் அமைச்சர்கள் தேர்வு செய்யும் போது அவர் வரவில்லை என்று சிவசேனா தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் மாதம் 5ம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஷிண்டேவும் கலந்துக் கொள்வார். மற்றபடி கூட்டணிக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சிவசேனா தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் முதலமைச்சர் யார் என்பதை ரகசியமாக வைத்திருப்பது மகாராஷ்டிரா அரசியல் பிரமுகர்கள் மத்தியில் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.