தமிழக அரசியலில் நீல நட்சத்திரமாக ஜொலித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அமைதியாக இருக்கிறார். தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் ஆதவ் அர்ஜூன் குழப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமாவளவன் வேறு வழி இல்லாமல் அவருக்கு நோட்டீஸ் அளித்து ஆறு மாதம் சஸ்பெண்ட் எனும் முடிவை கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தின் பெயரில் எடுத்தார். பிறகு ஆதவ் அர்ஜுன் கொடுத்த தன்நிலை விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திருமாவளவன் அறிவிப்பு செய்த நிலையில் ஆதவ் அர்ஜூன் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆதவ் அர்ஜூன் இந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகிவிட்டார். பொதுவாக ஆதவ் அர்ஜூன் யார் என்று பத்திரிகையாளர்கள் கட்சியினரில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மட்டுமே அறிந்திருந்த நிலையில், அவரது பேட்டிகள் திமுகவுக்கு எதிரான அவர் வைத்த விமர்சனங்கள், தேர்தல் வெற்றிகள் குறித்த அவரது ஆழமான பார்வை பொதுமக்களிடையே மிகப் பிரபலமானது. குறுகிய காலத்தில் ஆதவ் அர்ஜுன் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறிந்திட்ட நபராக மாறினார்.
இந்த வெளிச்சத்தை ஆதவ் அர்ஜுன் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவர் தாமதிக்காமல் உடனடியாக தனக்கான ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லிவரும் நிலையில், அவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் அவர் மதிப்பை குலைக்கும் வகையில் ஊடகங்கள் மூலம் பேட்டி எடுத்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தை செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.
பருவத்தே பயிர் செய் என்பார்கள் எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்ய தவறினால் பின்னர் அந்த வாய்ப்பு கிடைக்காது. இது ரஜினிகாந்துக்கு நடந்தது… பலருக்கும் நடந்துள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆதவ் அர்ஜுன் முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர் தனியாக அமைப்பை தொடங்கி திமுகவுக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைப்பது. இரண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது. மூன்று தவெகவில் தன்னை இணைத்துக் கொள்வது. இதில் ஆதவ் அர்ஜுன் தனியான அமைப்பை தொடங்கினால் அது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதும், அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் எந்த அளவுக்கு முயலும் என்பதும் கேள்விக்குறியே.

அதேபோன்று அதிமுகவில் ஆதவ் அர்ஜூன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பினால், வரவேற்பு இருந்தாலும் அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியில் பல தலைவர்கள் இருக்கும் நிலையில் ஆதவ்அர்ஜுன் அங்கு தன்னை வளர்த்துக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியே.. காரணம் திமுகவில் இதே அனுபவம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதிமுகவிலும் அதே அனுபவம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் தவெகவில் அர்ஜுன் தன்னை இணைத்துக் கொண்டால் அவருக்கான வளர்ச்சியும் இருக்கும் கட்சிக்கான வளர்ச்சியும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காரணம் தவெகவில் விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.
புஸ்ஸி ஆனந்த் தமிழக அரசியலில் ஆளுமை செலுத்துகின்ற அளவுக்கு அரசியல் அறிவு உள்ளவராக இல்லை. மற்ற நிர்வாகிகளுக்கும் அனுபவ அறிவு அந்த அளவுக்கு இல்லை. ஆதவ் அர்ஜுன் தவெகவில் இணைவதன் மூலம் திமுகவில் அவரது அனுபவ அறிவு தவெகவுக்கு பயன்படும். ஆதவ் அர்ஜுனும் தனித்துவ தலைவராக உயர வாய்ப்புள்ளது. ஆகவே உரிய நேரத்தில் உரிய முடிவை ஆதவ் அர்ஜுன் எடுக்க வேண்டும்.


