அதானி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பியதே பிரச்சனைக்கு காரணம்- ராகுல்காந்தி
எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசிய அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியது. பிரதமர் மோடியை நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன். அதானி குழுமத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சுகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை.இந்திய ஜனநாயகத்தில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று நான் அழைத்ததக பொய்யான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. பாஜக அமைச்சரின் குற்றச்சாட்டு பதில் அளிக்கும்படி, மக்களவை சபாநாயகரை நான் வலியுறுத்தினேன். தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை” எனக் கூறினார்.
