spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமித் ஷா-வை 'அப்படி' சொல்லக் கூடாதா? ஆ.ராசா எம்.பி. நேர்காணல்!

அமித் ஷா-வை ‘அப்படி’ சொல்லக் கூடாதா? ஆ.ராசா எம்.பி. நேர்காணல்!

-

- Advertisement -

டெல்லி, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை பிடிக்க காரணம் அந்த மாநிலங்களில் தத்துவமோ, கொள்கையோ கிடையாது என்பதுதான். அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற அமித்ஷாவின் ஒப்பீடு தவறானது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக மீது நடிகர் விஜய் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்தும், அமித்ஷா குறித்த தனது கருத்து தொடர்பாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நடிகர் ஒருவர் திடீரென பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்று எல்லோரையும் சொல்கிறார். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பாக என்றைக்காவது சமூக தளத்தில் என்றைக்காவது இது குறித்து பேசி இருக்கிறீர்களா? அரசியல் வேண்டாம். சாதிய கொடுமைகள் எங்காவது நடந்தால் கண்டித்துள்ளீர்களா? பெண்ணுரிமைகளுக்காக போராடி இருக்கிறீர்களா?

ஒரு கட்சி திடீரென வந்து திமுகவுக்கு மாற்று. நாங்களும்  பெரியார், அண்ணா என்றால், அதற்கு முன்னதாக உங்களின் வரலாறு என்ன? உங்கள் கட்சிக்கான தேவை என்ன உள்ளது? ஒரு கிராமத்தில் ஒரு கடை உள்ளது. அந்த கடை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அந்த கடையில் சரியான விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்கள் புதிதாக ஒரு கடை வைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அப்போது நீங்கள் ஏதாவது புதிதாக கொடுங்கள். இதைவிட தரமாக இருக்கும் என்று சொல்லுங்கள். என்னுடைய பிராண்டே வேறு என்று சொல்லுங்கள்.  ஆனால் நீங்கள் எதையும் சொல்லவில்லையே. அதே பெரியார், அண்ணா, கலைஞர். ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார். இது என்ன அரசியல்?

துப்பாக்கியை தொடர்ந்து விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் போக்கிரி!

அதிகாரம் வேண்டாம் என பெரியார் நினைத்தார். ஆனால் சமூக மாறுதலுக்கு அதிகாரம் தேவை. அதற்காக தேர்தலுக்கு வந்தோம். அது மாறுதல். அப்படி மாறிய போதும் எங்களுக்கு தலைவர் பெரியார் தான். நாற்காலி அவருக்காக காலியாகவே இருக்கும் என்று அண்ணா சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் போய் அவரிடம் காணிக்கை என்று சொன்னார். ஒரு வேறுபாடு மாறுபாடு தெரிந்தது. அது தலைவனோடும், தத்துவத்தோடும் முரண்படவில்லை. அதுதான் அண்ணா. இப்போது நீங்கள் வேறுபடுகிறீர்கள், மாறுபடுகிறீர்கள். உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் தத்துவம் என்ன என்று சொல்லுங்கள். திமுகவிடம் கொள்கை உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்று விஜய் சொல்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரைவிட தைரியமாக செயல்படுகிறார். அதை சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளை அனைத்து சாதியினரையும் சமத்துவ நாளாக கொண்டாட வைத்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள் என்று இருந்த நிலையில், இன்றைக்கு எல்லாவற்றையும் சமூகநீதி விடுதிகளாக மாற்றிவிட்டார். ஒரு மாறுதல் தான். அதை மற்றவர்கள் ஏன் செய்யவில்லை. மாறுதல் மட்டுமே மாறாது என்பதை திமுக மட்டும்தான் நிறைவேற்றி கொண்டிருக்கிறது. கிராமங்களில் சாதி அடிப்படையில் தெருக்கள் உள்ளதை மாற்றுவதற்காக கலைஞர் சமத்துவபுரங்களை கொண்டுவந்தார். அதையும் தாண்டி காலனிகள் இருந்தன. அவற்றை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். அதற்கு பிறகு ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி என்று இருந்தது. அவற்றை எடுத்துவிட்டு சமூகநீதி விடுதிகளாக மாற்றியுள்ளார். தேக்கம் இல்லாத ஒரு ஓட்டம் திராவிட இயக்கத்தில் உள்ளது என்றால் அது திமுகவில் தானே இருக்கிறது. நீங்கள் என்ன புதிதாக மாற்றிவிடுவீர்கள். உங்களிடம் என்ன புதிதாக உள்ளது?  எதற்கு போலியான பொருளை விற்க ஒரு கடை?

அமித்ஷா குறித்து முட்டாள் என்று சொன்னேன். அதற்கு காரணம் டெல்லி, மகாராஷ்டிராவை முடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா சொல்கிறார். ஒரு உள்துறை அமைச்சருக்கு அந்த மாநிலத்தின் தட்பவெப்பம் தெரியவேண்டும் அல்லவா? காரணம் உள்ளதால் தான் அப்படி சொன்னேன். டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு என்ன அரசியல் தத்துவம் உள்ளது? அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நான் நேடியாகவே கேட்டுள்ளேன். ஊழல் ஒழிப்பு என்பது அரசியல் தத்துவமா? ஊழல் ஒழிப்பு என்பதை ஒரு தேர்தலில் ஒரு முன்னெடுப்பாக எடுக்கலாம்.

2ஜிக்கு எதிராக போராடியவர்தான் கெஜ்ரிவால். இன்றைக்கு அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கெஜ்ரிவால் என்கிற தனி மனிதர் அன்றைக்கு இருந்த எமோஷன்ஸ்-ஐ பயன்படுத்தி,  ஊழல், 2ஜி, நான்தான் நேர்மையானவன் என்று வந்தார். கடைசியில் அவரே ஊழலில் சிக்கிக்கொண்டார். அவருக்கு நோக்கமோ, கொள்கையோ கிடையாது. அதேபோல் அரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் நோக்கம், தத்துவம் கிடையாது. ஆனால் எங்களுக்கு நோக்கமும், தத்துவம், இலக்கு உள்ளது. எங்களை அதுபோன்று மாற்றிவிடுவேன் என்று அமித்ஷா சொன்னால்? அவரது ஒப்பீடு தவறானது என்று சொல்லத்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

பாஜக எதிர்ப்பு, இந்த வியூகம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கட்டாயம் பலன் அளிக்கும். ஜெயலலிதாவுக்கு கூட்டணி வைத்தாலும், தன்னுடைய தனித்தன்மையை இழக்காதவர் என்கிற பெயர் உண்டு. கலைஞருக்கே ஜெயலலிதாவிடம் பிடித்தது அவருடைய துணிச்சல்தான். அப்படி பட்ட துணிச்சல் உள்ளவரா எடப்பாடி பழனிசாமி?  எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்துள்ளது குறித்த கணக்குகளுக்கு நாங்கள் போகவில்லை. ஒரு நல்லாட்சியை வழங்கி இருக்கிறோம். திமுக அரசின் சாதனைகளை நம்புகிறோம். அதை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் தனித் தத்துவமான திராவிட தத்துவம். தமிழ்மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றை எப்போதும் விட்டுத்தர மாட்டோம். அதன் அடிநாதமாக உள்ள திராவிட இயக்க சிந்தனைகளுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போம் என்று சொல்கிற களம் எங்களிடம் இருப்பதால், அதோடு சேர்ந்து  மீண்டும் ஆட்சி அமைப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ