தனக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்கினால், 75ஆனதும் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக தயார் என்று மோடி தெரிவித்துள்ளார். இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

75 வயதானதும் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் மோடியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடிக்கு இன்னும் 2 மாதங்களில் 75 வயது நிறைவடைகிறது. இது பாஜக மூத்த தலைவர்கள் மத்தியிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு மத்தியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 75 வயது முடிந்த உடன் மோடியை வீட்டிற்கு அனுப்புவதற்காக ஆர்எஸ்எஸ் கடுமையாக போராடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத், 75 வயது ஆனால் எந்த தலைவராக இருந்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்று சொன்னது பரபரப்பை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், 75 வயதாகினால் அரசியலில் இருந்து விலகிவிட வேண்டும் என்பது பாஜகவில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் கட்சியின் சட்ட விதிகளில் அது குறித்து எங்கும் குறிப்பிடப் படவில்லை. இதன் காரணமாக பிரதமர் மோடி கவலையின்றி உள்ளார். ஒரு வேலை பாஜகவின் சட்ட விதிகளில் அவ்வாறு இருந்தால், அதனை மோடி மீறுவதாக இருக்கும். ஆனால் இந்த விதி வாய்மொழி உத்தரவாகவே இருக்கிறது. ஆர்எஸ்எஸ் – பாஜகவினருக்கே தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை கிடையாது. ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இடையில் வாஜ்பாய் மத்தியில் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இரண்டாவது முறை கூட்டணி ஆட்சியாக வந்தது. அப்போது ஜெயலலிதா வாஜ்பாய் அரசை கவிழ்த்து விட்டார்.
அதன் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர தொடர்ந்து 3-வது முறையா ஆட்சியை பிடிக்கும் என்று அவர்கள் எண்ணியது கிடையாது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று பாஜக தரப்பில் சொல்வார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பாஜக 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தாங்களே காரணம் என்றும், தாங்கள் இல்லாவிட்டால் மோடியே கிடையாது என்றும் சொல்கிறது. இன்னும் 2 மாத காலத்தில் மோடி பதவியில் இருந்து விலகிட வேண்டும் என்று சொல்கிறபோது, அடுத்த பிரதமராக யாரை கொண்டு வருவது என பாஜக – ஆர்எஸ்எஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமித்ஷாவை அடுத்த பிரதமராக கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. மற்றொரு தரப்பில் மோடியே நலமுடன் உள்ளார். அவரே ஆட்சியை தொடர வேண்டும் என்றும் சொல்கிறார்கள். எனினும் அதற்கு ஆர்எஸ்எஸ் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மோடிக்கு பதிலாக யோகி ஆதித்யநாத்தை பிரதமராக ஆக்கப் போகிறோம் என்றும் சொல்கிறது. அதேவேளையில் பாஜகவின் தேசிய தலைவரை நியமிக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பு திணறி வருகிறது. ஆர்எஸ்எஸ் தரப்பில் மோடியை யார் எதிர்ப்பார்களோ, யார் அவரை கட்டுப்படுத்துவார்களோ அதுபோன்ற நபரை தான் தலைவராக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் தான் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் எம்.எல் கட்டாரை சொன்னார்கள். ஏனென்றால் கட்டார், மோடியை விட சீனியர் ஆவார். மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானையும் கொண்டுவர முயற்சித்தார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தரப்பில் இருந்து, தமக்கு குடியரசுத் தலைவர் பதவியை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 75 வயதானால் தான் குடியரசுத் தலைவராகி விடுகிறேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புளியை கரைக்க தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களாக ஆர்எஸ்எஸ் – பாஜக வட்டாரத்தில் இது பேசு பொருளாக மாறியுள்ளது. அதன்படி மோடியை, குடியரசுத் தலைவராக ஆக்க போகிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்டால் ஆர்எஸ்எஸ் நினைப்பவர்கள் பிரதமர் ஆகலாம். ஒப்புக் கொள்ளாவிட்டால் ஆர்எஸ்எஸ் விரும்பும் நபர் பிரதமராக முடியாது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஏன் அமித்ஷாவை தேர்வு செய்யக்கூடாது? என்றும் மோடி தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ஏனெனில் குஜராத்திகளின் கைகளில் இருந்து அதிகாரம் போய்விட்டது என்றால்? அம்பானி, அதானி மற்றும் குஜராத் வைர வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் குஜராத்கார்களை அடியோடு அகற்றிவிட்டு, மராத்தியர்களையோ, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரையோ உள்ளே கொண்டுவர வேண்டும். அல்லது பலவீனமாக இருக்கின்ற சிறிய மாநிலத்துக்கார்களையோ உள்ளே கொண்டுவர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வருகிறது.
மோடி ஒன்று தனக்கு பிரதமர் பதவியை தர வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் பதவியை தர வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். ஆனால் ஆர்எஸ்எஸ் தரப்பில் குடியரசுத் தலைவராக மாற்றினால், அவர் சட்டத்தை மாற்றி ஆட்சியை கைப்பற்றிவிடுவார். ஒரு சர்வாதிகார ஆட்சியை மோடி கொண்டுவந்து விடுவார் என்று அச்சப்படுகிறார்கள். அதனால் என்ன செய்து என்று தெரியாமல் ஆர்எஸ்எஸ் திணறி வருகிறது. பாஜகவுக்கு தலைவரையும் அவர்களால் நியமிக்க முடியவில்லை. 75 வயது ஆனாலும் ஆட்சி முடியும் வரை நான் தான் இருப்பேன் என்று மோடி தரப்பில் உறுதியாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், குடியரசு தலைவராக மோடியை ஆக்கினால், அவர் சர்வாதிகாரியாக மாறி ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது. அதன் பிறகு ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் இருக்காது. எனவே மோடியின், குடியரசு தலைவர் பதவிக்கான கனவை ஆர்எஸ்எஸ் நிச்சயம் நிறைவேற விடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்