குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்ய காரணம் என்ன? தங்கர் ராஜினமாவுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், இத்தகைய விமர்சனங்கள் வரும் என்பதை மத்திய அரசு முன்பே அறிந்திருக்காதா? என்ன நடக்கிறது டெல்லியில் என்ற கேள்வி எழுந்துள்ளது.நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜெகதீப் தங்கர் வெற்றியும் பெற்றார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக மட்டுமில்லாமல் மாநிலங்களவை தலைவராகவும் இரு இருக்கைகளை அலங்கரித்து வந்த ஜெகதீப் தங்கர் நேற்று திடீரென்று தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். நேற்று இரவு 9.25 மணி அளவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் தங்கர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை சமூக வலைதங்களில் வெளியிட்டது.
ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு வழங்கும் சில மணி நேரத்திற்கு முன்பே நாடாளுமன்ற மாநிலங்களவையை தலைவராக தங்கர் வழிநடத்திய சூழலில் ஏன்? இந்த திடீர் ராஜினாமா முடிவு என அனைவராலும் பரபரப்பாக முனுமுனுக்கப்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தங்கர் தனது கருத்தாக கூறியிருந்தாலும், அதை யாரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை. காரணம், ஜூலை மாதம் தொடக்கத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தங்கர், தன்னுடைய பதவி காலம் நிறைவடியும் 2027ம் ஆண்டு வரை தானே இப் பதவியில் நீடிப்பேன் என்று பேசியிருந்தார்.

அன்று அவர் சூழலை அறியவில்லையோ என்னவோ அடுத்த நாட்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தங்கர் ராஜினாமாவை தொடர்புபடுத்தி பழைய வீடியோக்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மனதில் தோன்றிய கருத்துக்களை சமுகவலைத்தல வாசிகள் பகிர்ந்தாலும், இந்த செயலே தங்கர் ராஜினமாவுக்கு காரணம் என அவிழ்க்க முடியாத முடிச்சுகளாக உள்ளன.
காரணம் 1 :
நாடாளுமன்ற மாநிலங்களவை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்தில் அனைவரும் காத்திருந்த போது, மாநிலங்களவை குழு தலைவர் (பா.ஜா.க) ஜே.பி நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் தரப்பில் மாலை இக்கூட்டத்தை வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அதன்படி மாலை 4.30 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜான் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் காத்திருந்தனர். ஜெ.பி நட்டாவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்ற தகவலும் ஜகதீப் தங்கருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த தங்கர், நாளை (இன்று) 1 மணிக்கு கூடுவோம். அப்போதாவது வருவார்களா என பார்க்கலாம் என கூறியுள்ளார். இதில் ஜே.பி நட்டா , கிரண் ரிஜிஜு இடையே தங்கருக்கு மனதளவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
காரணம் 2 :
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் கட்டு கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், நீதித்துறை மீதான கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கையெப்பமிட்டு தங்கரிடம் வழங்கிய நிலையில் அவற்றை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கும்படி தங்கர் அவரது செயலாளரை அறிவுறுத்தியதாகவும், இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்
காரணம் 3 :
தங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கொண்டு வந்த பிறகு, தங்கரின் நடவடிக்கை எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததாக பாஜக தலைமை கருதியுள்ளது. தனிப்பட்ட முறையில் தலைவர்களை சந்திப்பது, அவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு முன்னுரிமை அளிப்பது என தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதாக கூறுகிறார்கள்
காரணம் 4 :
கடந்த ஆண்டு நடையற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் இருந்து பணம் எடுக்கப்பட்ட விவராகத்தில் ஆளும் கட்சியின் பேச்சிற்கு தங்கர் மதிப்பளிக்கவில்லை. இதனால் தங்கருக்கும் பாஜக மேலிடத்திற்கு இடையே மோதல் இருந்ததாக சொல்கிறார்கள்.
காரணம் 5 :
இது மட்டுமில்லாமல் ஜெகதீப் தங்கரின் அண்மை கால செயல்பாடுகளில் ஆளும் கட்சி எம்பிக்கள் ஏராளமானோர் தங்களது அதிர்ப்தியை கட்சியின் தலைமையிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திடீர் ராஜினாவிற்கு இப்படி பல காரணங்கள் கூறினாலும் இதன் உண்மை தன்மையை ஆராய்வது சற்றே கடினமான ஒன்று தான். என்ன நடந்தது என்பது தங்கர் சொன்னால் மட்டுமே தெரியவரும். ஆனால் அதற்கு துளி அளவும் வாய்ப்பில்லை. 2027 வரை பதவியில் இருப்பேன் என்று மாற் தட்டிக் கொண்டு உறுதியாக சில நாட்களுக்கு முன்பு பேசிய தங்கர் திடீரென மருத்துவ காரணங்களை சொல்லி பதவி விலகுகிறார் என்றால் இது தங்கரின் தனிப்பட்ட முடிவு அல்ல என்றும் இது அழுத்தத்தின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவே என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும் கூட உண்மையில் தங்கரின் ராஜினாமா பிண்ணனியில் யார் இருந்தார்கள் என்பது போக போக தான் தெரியும்.