வாங்கிய கடனை திரும்ப கேட்ட பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனா்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காமராஜ் சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54), இவர் பக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (48), இவர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் அவரது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்ற போது பழனிவேலன் என்பவர் அறிமுகமாகி தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், பாஜகவில் பீர்க்கன்காரணை – இரும்பூலியூர் பகுதி பொறுப்பாளராக பதவி வகித்து வருவதாகவும் கூறி பழகி உள்ளார்.
பின்னர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்பிரமணியன் மீண்டும் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணியனை செல்போனில் தொடர்பு கொண்ட பழனிவேலன் தனது மனைவி தேவகிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே மருத்துவ தேவைக்கு பணம் தேவை என கூறி, முதலில் ரூபாய் 25 ஆயிரம், அதன் பிறகு ரூபாய் 2 லட்சம் என இரு முறை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பும்படி கேட்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தொடர்ந்து தேவகி வங்கி கணக்கு மூலமாக ரூபாய் 20 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின் பழனிவேலன் கூறியதின் பேரில் அவரது நண்பர் அமல்ராஜ் என்பவருக்கு ரூபாய் 3 லட்சம், விஜயலட்சுமி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 8 லட்சம், கணேசன் என்பவருக்கு ரூபாய் 4.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரூபாய் 80 லட்சம் வரை பழனிவேலனுக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது தொடர்ந்து தராமல் ஏமாற்றி வந்த நிலையில் ரம்யா, பழனிவேலனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளார். அப்போது பழனிவேலன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை பதிவு செய்து தருவதாக கூறி மணிமங்கலம் அருகே ஒரு இடத்தை காட்டியுள்ளார். ஆனால் அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பணத்தைக் கேட்டபோது பழனிவேலன் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரம்யா அவரது கணவர் சுப்பிரமணியனை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று பழனிவேலனை சந்தித்து பணத்தைக் கேட்டபோது அவர்களை தகாத வார்த்தையால் பேசிய பழனிவேலன், ரவுடிகள் பெயர்களை பயன்படுத்தி அவர்களுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் ரம்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேலன் மீது பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஆனால் வழக்கு பதிவு செய்தும் பா ஜ க பிரமுகர் பழனிவேலனை போலீசார் கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ரம்யா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தான் தனியாக இருப்பதால் பழனிவேலனின் ஆதரவாளர்கள் தான் இருக்கும் இடத்தை நோட்டமிட்டு வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழனிவேலனை கைது செய்ய வேண்டும் என ரம்யா தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசார் பா ஜ க பிரமுகர் பழனிவேலனை தேடி வருவதாக கூறிவரும் நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பழனிவேலன் சுதந்திரமாக வந்து தேசிய கொடியை ஏற்றியதாக ரம்யா குற்றம் சாட்டியுள்ளார்.