இன்று நம் தமிழ்நாட்டின் வரலாற்றில், கல்வியையும் சமூக நீதியையும் இணைக்கும் ஒரு மிகப் பெரிய நலத்திட்ட சாதனையை நாம் கண்டு மகிழ்கிறோம். அது தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரிவாக்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், “நம் குழந்தைகள் தான் நாளைய தமிழகம். அவர்கள் பசியால் பாடம் கற்க முடியாமல் தவிக்கும் நிலை ஒருபோதும் நிகழக்கூடாது என்பதையே காலை உணவுத் திட்டம் உறுதி செய்கிறது. இன்று 2,429 பள்ளிகளில், 3.6 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கப்படுவது, சாதாரண அறிவிப்பல்ல ஒரு சமூகப் புரட்சி. கல்வியில் சமத்துவம் வேண்டும் என்றால் முதலில் பசி நீங்க வேண்டும். பசியால் தலையைத் தூக்க முடியாத ஒரு சிறுவன், பாடப்புத்தகம் படிக்க முடியுமா? இல்லை அதனால் தான் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அதை விரிவாக்கினார். அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நம் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி அதனை விரிவாக்கி, ஒவ்வொரு குழந்தையின் வயிற்றிலும் பசியையும், மனதிலும் நம்பிக்கையையும் நிரப்பி வருகிறார்.
இது ஒரு சாதாரண அரசு திட்டமல்ல. இது ஒரு அன்னையின் பாசம் போல, ஒரு தந்தையின் பொறுப்பு போல குழந்தைகளுக்கான உணவு. இது ஒரு தலைமுறை ஆரோக்கியமாக வளரும் விதை. இது சமத்துவ சமுதாயத்திற்கான வலுவான அடித்தளம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்த மகத்தான முயற்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நான் இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நம் குழந்தைகள் பசியின்றி பள்ளிக்குச் சென்று கல்வி கற்கின்றார்கள் என்றால், நாளை அவர்கள் அறிவால் சமூகத்தை ஒளிரச் செய்வார்கள். இந்தச் சிறிய வயிற்றுகள் நிறைந்தால் தான், நம் தமிழகம் முழுவதும் சமத்துவம், கல்வி, முன்னேற்றம் நிறைந்த நிலமாக மாறும்.

அதனால், இந்தத் திட்டம் ஒரு அரசு அறிவிப்பு அல்ல இது நம் தமிழகத்தின் எதிர்கால அறிவுக் கொடி பறக்கும் நாள்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
திருவள்ளூரில் சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு