spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபதவி பறிப்பு மசோதா: நீதிமன்றம் சொன்னது வேறு, பாஜக அரசு செய்வது வேறு! ஓய்வுபெற்ற நீதிபதி...

பதவி பறிப்பு மசோதா: நீதிமன்றம் சொன்னது வேறு, பாஜக அரசு செய்வது வேறு! ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி!

-

- Advertisement -

பதவி பறிப்பு சட்டம் என்பது எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கருவி என்று முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

மத்திய அரசின் பதவி பறிப்பு சட்டத்தின் பின்னணி மற்றும் அதன் கொடிய விளைவுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கொண்டுவந்துள்ள பதவி பறிப்பு மசோதாவில் அச்சப்படுகிற விஷயங்கள் நிச்சயமாக இருக்கின்றன. அதனால்தான் இந்தியா கூட்டணியை சேர்ந்த மம்தா, ஸ்டாலின், ஓமர் அப்துல்லா போன்றவர்களும்,  இந்தியா கூட்டணியில் இடம்பெறாத மாயாவதி போன்ற அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த சட்டத் திருத்தத்தை  ஒருமனதாக எதிர்க்கிறார்கள். இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசை மேலும் ஆயுதபாணியாக மாற்றுகிறார்கள். ஏற்கனவே அமலாக்கத்துறை, உபா போன்றவற்றின் மூலம் தங்களுடைய எதிரிகளை பிடித்தார்கள். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா போன்றவர்களை கைதுசெய்ய சட்டம் தடையாக இருந்தது. தற்போது மத்திய அரசுக்கு எந்தவித தடையும் கிடையாது. இதில் கேள்வி என்ன என்றால்? ஊழல் புகார்களில் இதுவரை பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மீது எதாவது நடவடிக்கை எடுத்துள்ளனரா? எந்த ஆளுங்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதனால் தான் இதுபோன்ற சட்டங்களை, கருப்பு சட்டங்களாக இருக்கும்.

பதவி பறிப்பு சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா? அல்லது பிரதமர் மீதோ, உள்துறை அமைச்சர் மீதோ நடவடிக்கை எடுப்பதற்கு சாத்தியம் உள்ளதா? நீதிமன்றங்கள் மத்திய அரசுடன் சார்புடையவை இல்லை என்றாலும், நடைமுறையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவை மத்திய அரசுடன் நெருக்கமாக உள்ளன. தற்போது உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. நீதிபதி ராகரெத்தினா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஜராத் என்பது சிறிய மாநிலம். ஆனால் அந்த மாநிலத்திற்கு மூன்று நீதிபதிகள் உள்ளனர். ஆனால் பெரிய நீதிமன்றமான தமிழ்நாட்டிற்கு இருவர் தான் உள்ளனர். இதில் அவர்கள் தலைமை நீதிபதியாக வருவார். குஜராத்தை சேர்ந்த ஒருவர் 2028 – 2030 வரை இருப்பார். தற்போது நியமிக்கப்பட்ட புதிய நபர் அடுத்த 2031ல் தலைமை நீதிபதியாக இருப்பார். அனைத்து அரசு நிறுவனங்களையும் தங்கள் கையில் எடுப்பது போல உச்சநீதிமன்றத்தையும் கையில் எடுப்பது தான்.

உச்சநீதிமன்றம்

வழக்கில் கைது செய்யப்படும் முதல்வர்கள், அமைச்சர்கள் 10 நாட்களில் சிறையில் இருந்து வெளிவந்துவிட்டால் பிரச்சினை இல்லை. அதேபோல் ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டு, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆகினாலும் பிரச்சினை இல்லை என்கிறார்கள். 2020ல் பீகார் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. 2004ல் நாடாளுமன்றத்தில் 24 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருந்தனர். 2009ல் அது 30 சதவீதமாக உயர்கிறது. 2014 நாடாளுமன்றத்தில் 34 சதவீதம், 2019ல் 43 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சொல்கிறார்கள். தற்போதைய 2024 நாடாளுமன்றத்தில் இது 46 ஆக அதிகரித்துள்ளது. கொலை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற தீவிர குற்றங்களை செய்தவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர்.  பீகாரில் 2020 தேர்தலின்போது மொத்தமுள்ள 241 பேரில் 163 பேர் குற்றப் பின்னணி  கொண்டவர்களாக இருந்தனர்.

இந்த திருத்தத்தை கொண்டுவந்தது உச்சநீதிமன்றம் தான். இதில் எந்த கட்சிக்கும் எந்தவிதமான பங்கும் கிடையாது. பல்வேறு தொண்டு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் காரணமாகவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2020ல் வந்த உத்தரவில் ஒரு அரசியல் கட்சி வேட்பாளரை அறிவித்த உடன் 48 மணி நேரத்தில் அவர் மீது உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை இணையதளம்,  பத்திரிகை, மின்னணு ஊடகங்களில் போன்றவற்றில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். தீவிர குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க தடை செய்வதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. மத்திய அரசு அந்த திருத்தத்தை கொண்டு வந்தால் அதை ஆதரிக்கலாம். தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ஏ.பி.ஷா, குற்றவழக்கில் தொடர்புடைய ஒருவர் மீது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, குற்றாச்சாட்டை புனைவதற்கு முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லும்பட்சத்தில் அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்று சொன்னார். ஆனால் மத்திய அரசு அதை செய்ய தயாராக இல்லை.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

கடந்த 23ஆம் தேதி அன்று பதவி பறிப்பு மசோதா தொடர்பாக தமிழக எம்.பி. ராஜா கூறியதாக இந்து ஆங்கில நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடியின் கேபினட்டில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாது. மத்திய அரசு முதல்வர்களையும், மாநில அமைச்சர்களையும் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த மத்திய அமைச்சரையோ, பிரதமரையோ நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறதா? அவர்கள் மன்னர்களை போன்றவர்கள். அவர்களை யாராவது கேள்வி கேட்டிருக்கிறார்களா? இது  மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்டுவதற்கான ஒரு கருவியாக, இந்த பதவி பறிப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. எப்படி அமலாக்கத்துறையை கையாளுகிறார்களோ, உபா சட்டதை கையாளுகிறார்களோ, அதேபோல் இந்த பதவி பறிப்பு சட்டத்தையும் கையாளுவார்கள்.

சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தலாமா? சிறையில் இருந்து முதல்வர்களோ, அமைச்சர்களோ பிறப்பிக்கின்ற உத்தரவுகளை, உயர் அதிகாரிகள் ஏற்று செயல்படுத்தலாமா? இது ஜனநாயகத்திற்கு விரோதமானது இல்லையா? என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் நாங்கள் சொல்கிறோம், குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலிலேயே போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று. மத்திய அரசு இந்த தடையை ஏன் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு வைக்கவில்லை? 46 சதவீதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சட்ட ஆணையமும், உச்சநீதிமன்றமும் பரிந்துரைத்துள்ளபோது ஏன் செய்யவில்லை. தற்போது முதல்வர்களையும், மாநில அமைச்சர்களை மட்டும் குறிவைக்கிறார்கள். பதவி பறிப்பு சட்டம் என்பது பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என்று அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ