திமுக முப்பெரும் விழாவில் மாஜி மந்திரியை, முதலமைச்சர் உச்சிமேல தூக்கி வைச்சு மெச்சியதாகவும், இதே சி.எம். கரூருக்கு எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது, அதே மாஜி மந்திரியை என்னவெல்லாம் கேட்டாரு? என்று பாருங்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.


தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், தனது சுற்று பயணத்தின் இரண்டாம் கட்டமாக கரூர் சென்றடைந்தார். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கரூர் அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஊர். கரூர் குறித்து சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. தற்போது கரூர் என்றால் இந்தியா முழுவதும் எது பிரபலம் என்று உங்களுக்கே தெரியும். கரூர் மாவட்டத்தில் பேரீட்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும் என்றார்கள். பேரீட்சை மரம் அல்ல. விதையாவது கண்களில் காட்டினார்களா? கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். உங்கள் ஆட்சியே முடிய போகிறது. இப்போது போய் ஒன்றிய அரசு கிட்ட அமைச்சர் விமான நிலையத்திற்கு கோரிக்கை வைக்கிறார். ஐயா அமைச்சரே இதுதான் உங்களுடைய டக்கா?

மணல்கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டது. அத்தோடு சட்டவிரோத கல்குவாரிகள் கரூரின் கனிமவளத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார் சிஎம் சார்? 11 மணிக்கு பதிவி ஏற்றால் 11.05 மணிக்கு மணல் கொள்ளை அடிக்கலாம்னு ஓப்பனாக சொன்னவங்க தான உங்க ஆளுங்க. தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய ஏரி கரூரில் இருக்கும் பஞ்சப்பட்டி ஏரி. அதன் பரப்பளவு ஆயிரம் ஏக்கருக்கு மேல். ஆனால் அதை பல வருடங்களாக சீரமைக்காமல் வைத்துள்ளனர். தவெக ஆட்சி வரும். அன்று பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும். உங்கள் முகத்தில் நிம்மதி சந்தோஷம் எல்லாம் சேர்ந்து வரும்.
கரூர் மாவட்டத்தில் மந்திரி, மந்திரினு ஒருத்தர் இருந்தார்ல. இப்போது அவர் மந்திரி இல்லை. ஆனால் மந்திரி மாதிரி. அவர் யாருன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா? ஒரு க்ளு ஒன்னு கொடுக்கலாமா? பாட்டிலுக்கு 10 ரூபாய்… பாட்டிலுக்கு 10 ரூபாய்… சமீபத்தில் கரூரில் விழா ஓண்ணு நடத்துனாங்களே… அதென்ன முப்பது பேரு விழாவா..? சாரி முப்பெரும் விழா…! கன்பியூஸ் ஆகிட்டேன். அந்த விழாவில் மாண்புமிகு சி.எம்., மாஜி மந்திரியை உச்சிமேல தூக்கி வைச்சு மெச்சுனதை நாம் காதால கேட்டோம்ல. இதே சி.எம். அவர்கள் கரூருக்கு எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது, அதே மாஜி மந்திரியை என்னவெல்லாம் கேட்டாரு? யூடியூபை திறந்து பாருங்க. மிரண்டு போய்ருவீங்க. அந்த மாஜி மந்திரி இப்போ என்னவாக இருக்கிறாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க தெரியுமா? திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ற பணத்தையெல்லாம் 24*7 டெலிவரி பண்ற ஏடிஎம் ஆக இருக்காறாம். இதை நான் சொல்லல. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

கரூரில் போலீஸ் பாதுகாப்பு எல்லாம் இருக்குதா? இல்லையா? போலீஸ் கைகள் எல்லாம் கட்டப்பட்டு இருக்குன்னு நினைக்கிறேன். போலீஸ் சார், மக்கள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு தான் பயப்படனும். வேறு யாருக்கும் பயப்பட தேவை இல்லை. இன்னும் 6 மாதங்கள் தான். ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும். அப்போது உண்மையான மக்களாட்சி அமையும். அப்போது எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் 100 சதவீதம் அமையும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


