கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில், ”கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.