5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.
காற்று மாசுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த டெல்லியில், இவ்வாண்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் மீண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி, அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை டெல்லி மக்களுக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்ற பட்டாசு கடைகளில் மட்டுமே இப்பட்டாசுகள் விற்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தை கட்டுப்பாட்டுடன் அனுமதிக்க, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசை குறைக்கும் வகையில் “பசுமை பட்டாசுகள்” தயாரிப்பு மற்றும் விற்பனை மீது கண்காணிப்பு குழு கடுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மத்திய அரசு ஆதரித்த நிலையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் டெல்லி அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிப்பது, விற்பனை செய்வது, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடும் வகையில் தடையை தளர்த்தி உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த அனுமதி டெல்லி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரில் தீபாவளி பண்டிகை மீண்டும் பிரகாசம் பெறவுள்ள நிலையில், பசுமை பட்டாசுகள் வழியாக மாசில்லா கொண்டாட்டம் நடத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.


