கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.
கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், சமூக வலைதளங்களில் கரூர் சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், அதனைத் தடுக்கவும் உண்மையை வெளிப்படுத்தவும் தான் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார். “முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட அதிகாரிகளே ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தனர்,” என ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த நிகழ்வுக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என கூறினார். இதற்கு பதிலளித்த முதல்வர், விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியுள்ளாா். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது எனச் சொல்வது எவ்வாறு நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கம் அல்ல”
கரூர் துயரம் குறித்து எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது அரசின் கடமை. இதேபோல் இனி இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அரசு வகுத்து வருகிறது. உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என கூறியுள்ளாா்.
“வேதனைக்குரியது” — CBI கண்காணிப்பு குறித்து
கரூர் வழக்கில் CBI விசாரிக்கவுள்ளதை கண்காணிக்கும் குழுவில் தமிழக IPS அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. மேலும், இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக உச்சநீதி மன்றத்தை அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
உடற்கூராய்வு நடவடிக்கைகள்,
துயரமான நிகழ்வில் 13 ஆண்கள், 18 பெண்கள், 10 குழந்தைகள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்ததாக முதல்வர் தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் போதிய குளிர்சாதன வசதி இல்லாததால், கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று இரவோடு இரவாக உடற்கூராய்வு நடத்தப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். செப்டம்பர் 28 மதியம் 1.10 மணிக்கு 39 உடல்களின் உடற்கூராய்வு முடிந்ததாகவும் கூறினார்.
அரசின் நடவடிக்கைகள்
கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்துள்ள மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் பேரவையில் விரிவாக விளக்கமளித்தார். உயிரிழந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவித்த அவர், இதுகுறித்து பல கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறினார்.
மொத்தத்தில், கரூர் துயர சம்பவம் குறித்து அரசின் பொறுப்பு, நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு முயற்சிகளை தெளிவுபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த இந்த விளக்கம், சட்டப்பேரவையின் முக்கிய நிகழ்வாக அமைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராதாரவி தரப்பு சொன்னது அத்தனையும் பொய்… நிரூபிக்க தயார் – சங்கீதா பேட்டி!


