விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்குள் இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியவர் அமித்ஷா தான் என்றும், பீகார் தேர்தலுக்கு பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க காரணம் இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கை வெளிப்படுத்துவது மற்றொன்று அவர்களுடன் கூட்டணிக்கு வழி ஏற்படுத்துவதாகும். விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு வருவார் என்றால் அதிமுக, பாஜக என அனைவரது பார்வையிலும் இது ஒரு வெல்லக்கூடிய கூட்டணியாக இருக்கிறது. விஜய், எடப்பாடியின் கூட்டணிக்கு வரவில்லை என்றால்? அவர் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிப்பதற்கு விஜய் துருப்புச்சீட்டாக இருக்கிறார். விஜய் கூட்டணி அல்லது இந்த சூழ்நிலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருப்பதாக தோன்றுகிறது. விஜய் கூட்டணிக்கு வந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று மாநில பாஜக நினைக்கிறது. ஆனால் அமித்ஷா, விஜய் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் வரை சிறுபான்மை மக்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். பிளஸ் 13 சதவீதத்தில் இருந்து தான் திமுக கூட்டணி கணக்கை தொடங்குகிறது. அதிமுக – பாஜக பூஜியத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வாக்கு வங்கியை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கம் தான் பாஜக மேலிடத்திற்கு இருக்கிறது. அவர்களின் கணக்குப்படி விஜய் சிறிது தலித் வாக்குகளையும், சிறுபான்மை வாக்குகளையும் எடுத்துச்செல்வார். ஆசாதுதீன் ஓவைசியை வைத்து வட மாவட்டங்களில் உருது பேசும் இஸ்லாமியர்களின் வாக்குகளை எடுத்துக்கொள்ளலாம்.
தென் மாவட்டங்களில் எஸ்டிபிஐ கட்சியை தனியாக நிற்க வைத்து, சிறுபான்மையினரின் வாக்குகளை எடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள். இதில் குறைகிற வாக்கு சதவீதம் 2 சதவீதம் இருக்கும். அரசுக்கு எதிரான ஆன்டி இன்கம்பன்சி 3 சதவீதம் இருந்தால் கூட, அது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவுதான். விஜய், அதிமுக கூட்டணிக்கு செல்கிறபோது இந்த 3 சதவீத வாக்குகள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கும். அப்படி கூட்டணி இல்லாவிட்டால் இருவருக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
கரூர் விவகாரத்தில், காங்கிரஸ் விஜய் மீது மென்மையான போக்குடன் தான் அணுகி வருகிறது. விஜயிடம் காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளனர். காங்கிரஸ், விஜய் கூட்டணி வர வேண்டும் என்பது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலின் விருப்பமாக இருக்கிறது. அவரை பொருத்தவரை கேரளாவின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது அவருடைய முதன்மையான விருப்பமாகும். அதற்கு இது முதற்படி என்று சொல்லலாம். ஆனால் அது பாதுகாப்பான கூட்டணி கிடையாது. காரணம் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், 2029 நாடாளுமன்றத் தேர்தல் காலியாகிவிடும். திமுக கூட இருந்தால் 2029ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ராகுல்காந்தி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் அதுபோன்ற ஒரு தவறான முடிவை இதுவரை எடுத்தது கிடையாது.
மோடி என்பவர் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரானவராக மாறி விடுகிறார். அதனால் மோடியை தோற்கடிக்க கூடியவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் முழுமையாக செல்கிறது. திமுக எதிர்ப்பு அணி ஒரே அணியாக இருந்தால், அந்த வாக்குகள் எல்லாம் ஒரே அணிக்கு சென்றுவிடும். அதிமுக, விஜய், சீமான் என்று போட்டியிட்டால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் சிதறி விடும். இன்றை நிலைமையில் திமுகவுக்கு சாதமான சூழ்நிலைதான் உள்ளது.
விஜய், அதிமுக – பாஜக சேர்ந்து போட்டியிடும்போது திமுக எதிரான அதிருப்தி வாக்குகள் எல்லாம் இந்த அணிக்கு வரும். அப்போதும் விஜய்க்கு வரக்கூடிய சிறுபான்மையினரின் வாக்குகள் அவரிடம் இருந்து நழுவக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் போய் சேர்ந்தார் என்றால்? அடுத்த தேர்தலில் அவர் செல்லாக்காசு ஆகிவிடுவார். விஜய் தனது கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய பாஜக இல்லாவிட்டால், இன்றைக்கு அவரை சிபிஐ தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள். அதெல்லாம் முடியாது என்று அவர்களிடம் போய் சரணடைந்ததால்தான் சிபிஐ சிபிஐ என்று சொல்கிறார்கள். அதன் பிறகு சிபிஐ வந்துவிட்டது. அமித்ஷா தான் நீங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவு செய்ய வேண்டும். பீகார் தேர்தலுக்கு பிறகு தான் அதில் முடிவு வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.