சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் நீக்கப்படுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி மற்றும் அதனால் ஏற்பட போகும் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- சசிகலா சிறைக்கு சென்ற போது அவருடைய பரிந்துரை அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பொறுப்பை செங்கோட்டையன் தான் மேற்கொண்டார். செங்கோட்டையன் மூத்த தலைவர் என்பதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்து வாங்கும் பொறுப்பு அவரிடம் அளிக்கப்பட்டது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விசுவாசமான நபராக செங்கோட்டையன் இருந்துள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பது, அந்த கட்சி ஒரு உண்மையான தொண்டனை இழந்திருக்கிறது. தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அது தவறான முடிவு ஆகும். ஓபிஎஸ் பிரச்சினை என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சினை. அதற்கு சட்டரீதியான தீர்வை எதிர்பார்த்தார். அதன் காரணமாக அவர் தோற்று போனார். அவருடைய நிலைமை செங்கோட்டையனுக்கு ஏற்படக்கூடாது. எனவே இந்த பிரச்சினைக்கு அவர் அரசியல் தீர்வை காண வேண்டும். மக்கள் மன்றத்தில் சென்று எடப்பாடியை எதிர்த்து போராட வேண்டும்.

செங்கோட்டையன் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் 4.5 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றிய பாஜகவை, 2024 மக்களவை தேர்தலின்போது கைவிட்டது சரியா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது பாஜகவிடம் இருந்து அவர் உதவியை நாடுவதையே காட்டுகிறது. காரணம் 4.5 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை, பாஜக தான் காப்பாற்றியது என்கிற செங்கோட்டையன் கருத்தை சுயமரியாதை உள்ள எந்த அதிமுககாரர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்று யார் சொன்னாலும் தவறுதான். அதிமுக ஆட்சி என்பது மக்கள் கொடுத்த தீர்ப்பாகும்.
அப்படி இருக்கிறபோது அதிமுக ஆட்சியை பாஜக தான் காப்பாற்றியது என்று சொல்வது, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகமாகும். வாக்களித்த கோடிக்கணக்கான மக்களுக்கு செய்கிற மோசடியாகும். 2016ல் அதிமுக மீண்டும் ஒரு முறை ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கினார்கள். ஆனால், அந்த ஆட்சியை கொண்டுபோய் பாஜகவின் காலடியில் வைப்பது என்பது அப்பட்டமான மோசடியாகும். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக செங்கோட்டையன் அப்படி சொல்வது அவருக்கு பலவீனம்தான்.

எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தாலும், கட்சிக்குள் இருந்து போராடுவது வேறு. ஆனால் கட்சி தலைமை உங்களை நீக்கிவிட்டால் உங்களுடைய 90 சதவீத பலம் போய்விடும். கலைஞர் கட்சிக்குள் தன்னை எதிர்ப்பவர்களுக்கும் அதற்கான இடத்தை தருவார். சேலத்தில் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை எதிர்த்து வீரபாண்டி ஆறுமுகம் நிறுத்திய ஆட்கள் வெற்றிபெற்றனர். கலைஞரை எதிர்த்து பேசலாம். போராடலாம். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக செங்கோட்டையன் அரசியல் ரீதியாக போராடுவது தான் சரியான முடிவாக இருக்கும்.
செங்கோட்டையனை பொறுத்தவரை அவர் ஒரு போராட்டக்காரர்கள் அல்ல. கடைசி வரை கட்சியின் விசுவாசியாக தான் இருந்தார். ஜெயலலிதா செங்கோட்டையனை ஓரங்கட்டிய கால கட்டத்தில் கூட, தன்னுடைய பிரச்சார திட்டங்களை வகுக்க அவரை அழைத்தார். செங்கோட்டையன் 15 நாள் பிரச்சார திட்டத்தை சிறப்பாக வகுத்து கொடுத்தார். இன்றைய சூழலில் அதிமுக மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்றால் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி அதிமுகவின் கதையே முடிந்துவிடும். இந்த நேரத்தில் எல்லோரையும் நீக்குவது சரியா என்பது தெரியவில்லை.

செங்கோட்டையன், எடப்பாடிக்கு எதிராக கருத்து தெரிவித்தபோது அவரை அழைத்து பாஜக தலைவர்கள் பேசினார்கள். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது பாஜகவுக்கான பதிலடியா? என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் பாஜகவை பொருத்தவரை எடப்பாடியா? செங்கோட்டையனா? என்று வருகிறபோது எடப்பாடியை தான் ஆதரிப்பார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவுக்குள் பிரச்சினை வருவதை பாஜக விரும்பாது. அப்படி பிரச்சினை ஏற்பட்ட நிலையில், ஓரளவுக்கு மேல் சென்று எடப்பாடியை கையை முறுக்கி மிரட்ட முடியாது என்பது தெரிந்துவிட்டது.
செங்கோட்டையனா? எடப்பாடி பழனிசாமியா? என்று வந்தால் அவர்கள் எடப்பாடியை தான் ஆதரிப்பார்கள். செங்கோட்டையனிடம் பெரிய அளவில் பொருளாதார வசதியும் கிடையாது. அவரால் ஒரு அணியை வழிநடத்த முடியாது. செங்கோட்டையனால் அதிகபட்சமாக கோபி தொகுதியில் மட்டுமே இழப்பு ஏற்படும். அதை பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


