சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


பீகார் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மெகா வெற்றியை பெற்றுள்ளது. என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முதலில் நிதிஷ்குமாரை அறிவிக்கவில்லை. பின்னர் மோடி ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது, நிதிஷ்குமார் தலைமையில் அரசு தொடர்ந்து இயங்கும் என்று சொன்னார். அப்படி அவர் சொல்லாவிட்டால், பீகாரில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை என்டிஏ கூட்டணி பெற்றிருக்காது. தமிழ்நாட்டிலும் அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமி, தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சொல்வார். பீகார் தேர்தல் வெற்றி இல்லாமலே, எடப்பாடி பழனிசாமியால் பாஜகவுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது. காரணம் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது.
அதேநேரம் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே இம்முறை பாஜகவுக்கு 40 இடங்கள் வரை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், என்டிஏவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மற்றொருபுறம் ஓபிஎஸ்-ஐ அதிமுகவுக்குள் கொண்டு வருவதற்காக ஏற்கனவே பாஜக அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக தற்போது ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்கள் அமைதி ஆகிவிட்டனர்.

பீகார் தேர்தல் முடிந்த கையுடன், டெல்லி பாஜக தமிழ்நாட்டில் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர். அதிமுக ஒன்றுபட்டால் தான் பாமக, தேமுதிக போன்ற மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டெல்லி பாஜக நினைக்கிறது. அதன் காரணமாக தான் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் சேர்த்துக்கொள்வோம் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு நாம் ஏன் பலவீனமாக இருக்கிறோம் என்றே தெரியவில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டிருப்பது போல அவர் மூடிக் கொண்டிருக்கிறார். மேலும், இம்முறை சட்டப்பேரவை தேர்தல் செலவுக்கு பாஜகவிடம் நிதியை எதிர்பார்க்கிறார். அதற்கு கைமாறாக தொகுதிகள் ஒதுக்குவதில் சில இடங்களை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள் 50 சதவீதம் பேருக்காவது தேர்தல் செலவுகளை பாஜக பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொகுதிக்கு 25 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்கிறார். திமுக சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள். அப்போது, அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜகவிடம் தேர்தல் செலவுக்கு பணம் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே அதிமுக, பாஜக இடையே பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்று கேள்வி எழலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதுதான் முக்கியமானதாகும். பாஜக நினைத்தால் அதிமுகவை எந்த வகையிலும் கார்னர் செய்திட முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தாமகவே அந்த முடிவை எடுப்பார் என்று நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அதை ஏற்க மறுக்கிறபட்சத்தில், அமித்ஷா தனது குரலை உயர்த்தி பேச வாய்ப்பு உள்ளது. அண்ணாமலை , தினகரன் ஆகியோரை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பலம் பெற்றுவிடக்கூடாது என்பதாகும். அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் இருவரும் வேலை பார்ப்பார்கள். ஒருவேளை அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி விஜயுடன் சேர்கிறபட்சத்தில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் எடுத்துவிடுவார். அதிமுக ஆதரவு வாக்குகளை தினகரன் தூக்கிவிடுவார். அதன் மூலமாக அதிமுகவை காலி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை விஜய், என்டிஏ கூட்டணியில் சேர்கிறார் என்றால், இவர்கள் பாஜகவிலே தொடர்வார்கள். ஆனால் எடப்பாடி தரப்பினரை எதிர்த்து தினகரன் தரப்பில் வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக உடன் விஜய் இணைந்தால் தினகரன் தரப்புக்கு அரசியல் செய்ய வாய்ப்பு கிடையாது. எனவே தான் தினகரன் விஜய் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று சொல்கிறார். ஒருவேளை விஜயும், தினகரனும் சேர்ந்தார்கள் என்றால், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். அதற்காக தான் அவர்கள் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை தினகரன், அண்ணாமலை பாஜக கூட்டணியில் தொடர்ந்தார்கள் என்றால், அவர்களை எடப்பாடி பழனிசாமியால் பலவீனப்படுத்த முடியாது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட தினகரன் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் அவரை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் என்ன நிபந்தனை அடிப்படையில் கொண்டுவருவார்கள் என்று தெரிய வில்லை. அதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தினகரன் தனித்து போட்டியிட்டால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எடப்பாடிக்கு தெரிந்துள்ளது. எனவே அவரை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டால் பிரச்சினை இல்லை என்று அவர் நினைக்கிறார்.
எதிர்வரும் 2 மாதங்கள் தமிழ்நாடு அரசியலில் மிகவும் முக்கியமான கால கட்டமாகும். பாஜக எப்படி தங்களுக்கு ஏற்ற மாதிரி அதிமுகவை மாற்றிக்கொள்ள போகிறார்கள். பிரிந்துள்ள நபர்களை எப்படி அதிமுகவுக்குள் கொண்டுவரப் போகிறார்கள்? யார் யார்? என்ன என்ன ரோல் எடுக்கப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். தினகரன், அண்ணாமலையின் நகர்வுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதிமுகவை சேதப்படுத்துவதை தங்களுடைய கொள்கையாக வைத்திருக்கும் அவர்கள், அதை எப்படி சாத்தியப்படுத்துவார்கள் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


