பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில், ஜாக்டோ–ஜியோ அமைப்பினரும் அரசு ஆசிரியர் மற்றும் பணியாளர் அமைப்பினரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய அம்ச கோரிக்கைகளாக அரசு பல்வேறு துறையில் 30 சதவீதத்திற்கும் மேல் காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகைகளை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் போன்ற பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு. பாஸ்கரன், “அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய முதலமைச்சர் கலந்து கொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்”என்று கூறியதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலம் கடந்த பிறகும், பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி, செவிலியர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளின் சிறப்பு ஊதியமும், மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அரசாணைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓய்வூதியத்திற்காக 10% பிடித்தம் செய்யப்பட்டதையும்,அதிமுக–திமுக மாறி மாறி ஆட்சி செய்த 23 ஆண்டுகளிலும் அந்த தொகை திருப்பி வழங்கப்படவில்லை எனவும் சாடினார். பிடித்தம் செய்யப்பட்ட 84,000 கோடி ரூபாய், 42,000 கோடி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட வேண்டும்,மீதமுள்ள 42,000 கோடி எல்ஐசி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இதன்மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியும்.“எங்களது நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையெனில் ஜாக்டோ–ஜியோ மாபெரும் குழுவை அமைத்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை அறிவிப்போம்”என்று பாஸ்கரன் எச்சரித்தார்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்
வரும் 21 ஆம் தேதி மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் அந்த காலத்திற்குள் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தால் கூட்டத்தில் நிரந்தர வேலை நிறுத்தம் போன்ற கடுமையான போராட்டங்களில் ஈடுபட முடிவு எடுக்கப்படும் என்றார்.


