தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை மொத்தமாக 41 நாட்களில் 89 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ளார். இதன்படி, இன்றைய தினம், சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஓட்டப்பிடாரம், ஆலங்குளம் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முதலமைச்சரிடம் தனது தந்தையின் கட்சிப் பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, எங்க அப்பா 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பொழுதும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டு இருக்கிறாா். உங்க கூட போட்டோ எடுக்க அழைத்து வரலாமா? என்று கேட்டார்.

அப்போது முதலமைச்சர் உடனடியாக அப்பாக்கு போன் செய்யுங்கள். நானே பேசி வரச் சொல்லுகிறேன் என்று கூற உடனடியாக அவருடைய அப்பா முத்து வேலிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அப்போது நீண்ட ஆண்டு காலமாக கட்சியில் உறுப்பினராகவும், மூத்த தொண்டராகவும் உள்ள முத்து வேலை உடனடியாக நாளை அறிவாலயம் வந்து என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தனது, அப்பாவுடன் முதலமைச்சர் பேசுவதைக் கண்டு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முதலமைச்சர் முன்னிலையில் கண் கலங்கினார்.
ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!


