spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

-

- Advertisement -

திமுக ஆட்சியில் தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறையும் புதிய முதலீடுகள் வரும் போதோ, அதனை அறிவிக்கும் போதோ ஒரு சில அரசியல்வாதிகள் அவதூறுகளை அள்ளி வீசுவதும், சதிக்கோட்பாடுகளை உருவாக்குவதையுமே வேலையாக வைத்துள்ளனர்.

we-r-hiring

அவர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ்  தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை கொச்சைப்படுத்தி, தமிழ்நாட்டின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளன.

2021-ல் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.4 இலட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதோடு இதன்மூலம் 34 இலட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டமன்றத்தில் நான் அறிவித்த 77%த்தை தாண்டி இன்று கிட்டத்தட்ட 80% அதாவது 809 திட்டங்கள் நிலம் ஒதுக்கீடு, கட்டுமானம், சோதனை உற்பத்தி, வணிகரீதியான உற்பத்தி என பல்வேறு நிலையான செயல்பாடுகளில் உள்ளன. திட்டங்களின் செயலாக்கத்தில் நமது அரசு மிகவும் தெளிவாக உள்ளது. மேற்சொன்ன முறையில் அது திட்டத்தின் ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

MoU என்பது முதலீட்டு “உறுதிமொழிகள்” தான் (commitments) என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். அனைத்து புரிந்துணர்வு ஒப்பங்களில் உள்ள மொத்தத் தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது. முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளபடி முதலீடுகள் பல கட்டங்களாக வருவதற்கு ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதைக் கூட அறியாமல் உலரித் தள்ளுவது நகைப்புக்குரியது.

ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றுவது குறித்து தமிழ்நாடு தொழில்துறை அளித்த விகிதத்தைவிட குறைவான அளவிலேயே முதலீடாக மாற்றப்பட்டுள்ளது என்கிற ஒட்டுமொத்த அறியாமையின் காரணமாக வைக்கப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறோம்.அத்துடன், இத்தகைய குற்றச்சாட்டுகள்  தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடனும், குறுகிய கால அரசியல் நாடகத்துக்காகவும் முன்வைக்கப்படுகின்றன என்றே தெரிகிறது.

வணிக உற்பத்தித் தரவுகளின்படி பார்த்தாலும், சில அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை – 2021 முதல் கையெழுத்தான 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23%, உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) ஒப்பந்தங்களில் 16% வணிக உற்பத்தியையே  எட்டியுள்ளன.

இதில் மிகவும் துரதிர்ஷ்டமானது என்னவென்றால், இத்தகைய குற்றச்சாட்டுக் குரல் எழுப்புவோர், அவர்கள் போற்றிப் புகழும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டிற்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுக்கும்போது கள்ள மவுனம் காப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் துறைக்கான நல்ல சூழல் இருந்தபோதும் கூட முக்கியமான செமிகண்டக்டர் (semiconductor) திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குத் திருப்பிவிடப்படும் போதும் இவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவதில்லை.

இவர்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் தொழிற்பேட்டைகளுக்கான நிலம் கையகப்படுத்துதலை எதிர்ப்பதும், விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிக்கானக் கட்டமைப்புகளை எதிர்ப்பதும் பெரும் முரண்பாடாக உள்ளது.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இத்தகைய அறியாமை நிறைந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களே போலிச் செய்திகளின் வலையில் விழுந்து அதனடிப்படையில் விமர்சனங்களை வைக்கிறார்கள் என்பதுதான்.  எடுத்துக்காட்டாக தெலுங்கானாவில் ரூ. 85,000 கோடி மதிப்பிலான BYD ஆலை அமைப்பதாக வந்த உண்மைக்கு மாறான செய்தியை BYD நிறுவனமே மறுத்துள்ளது.

ஒன்றிய அரசின் தரவுகளின் படி, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இரட்டை இலக்க பொருளாதார (11.19%) வளர்சிக்கு உற்பத்தித் துறையே முக்கிய காரணம் என்கிற ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களையும்கூட இவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த வளர்ச்சியின் அஸ்திவாரமே தொழில் உற்பத்தியில் வேரூன்றி இருக்கும்போது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடுகளாக மாறவில்லை என்று கூறுவது நியாயமற்றது.

உலகப் புகழ்பெற்ற The Economist  நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவான Economist Intelligence Unit (EIU), தனது அறிக்கையில், தமிழ்நாட்டினை, “இந்தியாவிலேயே தொழில் புரிந்திடுவதற்கான சிறந்த மாநிலம் (2025-29)” என மதிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகம் புரிவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உகந்த, எளிதான, வெளிப்படையான  சூழலை உருவாக்குவதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதற்காக “சிறந்த சாதனையாளர்” மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்துள்ளது ஒன்றிய அரசு (Business Reforms Action Plan (BRAP) 2024)

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், (20-21 ல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் எண்ணிக்கை 46,899 ஆக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் 52,614 ஆக உயர்ந்துள்ளது)

அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள்,  தொழிற்சாலைகளில் அதிகளவில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் என தொழில் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு குறியீட்டிலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை ஒன்றிய பா.ஜ.க அரசின் புள்ளி விபரங்களே உறுதி செய்கின்றன.

ஒன்றிய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகளின் படி, 2020-21ல் 54 லட்சமாக இருந்த பணியாட்களின் எண்ணிக்கை, 2025-26ல், கிட்டத்தட்ட 84 லட்சமாக உயர்ந்துள்ளது. 30 இலட்சம் வேலைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருப்பது வேலைவாய்ப்பில் முக்கியத்துவமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

சேவைத் துறையில், 2021 ஆம் ஆண்டில் சுமார் 3.8 மில்லியன் சதுர அடியில் இருந்த (Office Space Absorption) அலுவலக இட பயன்பாடு, 2024 ஆம் ஆண்டில் 8.7 மில்லியன் சதுர அடியாகவும் உயர்ந்துள்ளது.  இது 230% வளர்ச்சியாகும்.  2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே 7.5 மில்லியன் சதுர அடி பதிவாகியுள்ளதால், இந்த உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் சேவைத் துறை வளர்ச்சியை அளவிட முக்கியமான ஒரு குறியீடாகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியானது பிற மாநிலங்களைப் போல ஒரு சில நகரங்களை மட்டுமே மையபடுத்தி இல்லாமல், பரவலான வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளதோடு கோவை, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முக்கிய பொருளாதார மையங்களாக உயர்ந்துள்ளன.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 2020-21-ல் 1.66 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாடு தற்போது 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் என்கிற 9 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது.

மின் வாகனம், செமிகண்டக்டர், பசுமை ஆற்றல், ஏரோஸ்பேஸ், உலக திறன் மையங்கள் போன்ற துறைகள் அதிவேகமாக வளர்ச்சி  அடைந்து வருகின்றன. மின்னணுவியல் துறையில், Kaynes, TATA Electronics, Corning (US), YES (US) ஆகிய திட்டங்கள், மோட்டார் வாகனத் துறையில், Vinfast (Vietnam), Tata JLR (UK), Ford (US) ஆகிய திட்டங்கள், உற்பத்தித் துறையில் Festo (Germany), Knorr Bremse (Germany). நுகர்வோர் பொருட்கள் துறையில், Godrej, Dabur, Pepsico ஆகிய நிறுவனங்கள்,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் TP Solar, Vikram Solar, Sembcorp (Singapore) போன்ற மிகப் பெரும் நிறுவனங்கள்,

உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centre) துறையில், UPS (US), Hitachi (Japan), Astra Zeneca (UK) என்று பல்வேறு நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டுகளில், தங்களின் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன.

தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான-ஆதாரப்பூர்வமான வளர்ச்சி யாருக்கு பாதிப்பாக இருக்கும் என்றால், தங்களின் சாதனையாக எதையும் காட்ட முடியாதவர்களுக்குத்தான். எதிர்க்கட்சி வரிசையிலே உள்ள பலருக்கும் தங்களால் நிகழ்ந்த எந்த சாதனையையும் சொல்லிக் கொள்ள முடியவில்லை என்பதால் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்து வரும் உன்னத வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்

 

MUST READ