விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கும் கிதியோன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்து நிகிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக கிதியோன் நித்யாவை விட்டு பிரிந்து, விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண் குழந்தையுடன் தனிமையில் இருந்த நித்யா தனது தாயார் பராமரிப்பில் வேலைக்கு சென்று குழந்தையை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடன் இன்ஸ்ட்டா மூலம் நித்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பேசிய சுரேஷ்குமார்,நித்யாவின் குடும்ப கஷ்டங்களுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.நாளடைவில் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும்,உன்னையும் உனது மகள் நிகிஷாவையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறினார். ஆசை வார்த்தையை நம்பிய நித்யா அவரை நம்பி திருமணம் செய்து கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.இதனிடையே நித்யா கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் சுரேஷ்குமார் செல்போனை எதிர்பாராத விதமாக நித்யா பார்த்துள்ளார்.

அப்போது அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுரேஷ்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கதறி அழுதுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நித்யா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அப்போது போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நித்யாவுடன் வாழ முடிவுசெய்துள்ளதாக சுரேஷ் குமார் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பி அவருடன் மீண்டும் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளார் நித்யா. சுரேஷ்குமாரை காதலிக்கும் போதும் திருமணமாகி கணவன் மனைவியாக ஒன்றாக வாழும் போதும் பல தவணைகளாக வங்கி கடன், நகை கடன் என சுமார் ரூ.15,00,000/- வரை கொடுத்துள்ளார் நித்யா.
இந்நிலையில் நித்யாவிற்கு கடந்த 03.11.2025 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு சுரேஷ்குமாரின் செல்போன்-ஐ மீண்டும் எதேர்ச்சையாக நித்யா பார்க்கும் போது, புதிதாக Insta ID உருவாக்கி அவர் நித்யாவை போன்று திருமணமாகி விவாகரத்தான பல பெண்களை குறி வைத்து காதல் வசைபாடுவது தெரிய வந்தது. இது குறித்து நித்யா கேட்டதற்கு சுரேஷ்குமாரும், அவரது தாயாரும் ஆபாச வார்த்தைகளால் பேசி, அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். மேலும் இக்குழந்தை அவருக்கு பிறக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலும், வேதனையும் அடைந்த நித்யா தனக்கு நீதி கிடைக்க வேண்டி கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இன்று புகார் மனு அளித்துள்ளார்.
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…


