Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

-

- Advertisement -

கரண் கார்க்கி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

ஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.

we-r-hiring

என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை அதன்வழியே எனக்குண்டான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான பார்வையைச் சொல்ல முயல்கிறேன்.

தி.மு.க. என்கிற ஒரு பிம்பம், என் அரசியல் புரிதல்,விமர்சனம், அதன் மீதான வரலாற்றுப் பார்வையென அது என்னோடு பல விதங்களில் உறவாடியபடியே இருப்பதற்கான காரணங்கள், அது என்னால் தவிர்க்கவே முடியாதபடியான ஒரு தனித்த சமூக நீதிக்கான நீரோட்டத்தைக் கொண்டிருக்கிறது என்பதால்தான்.

என் பதின்வயது நாட்களில், முதல் தலைமுறையினராக என் உறவினர்கள், என் தந்தையின் நண்பர்கள், அரசுப் பணிகளுக்குப் போன காலம், அது குறித்த வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் பலவற்றைக் கேட்டபடியே என் காலை உறக்கம் கலைந்திருக்கிறது. என் அப்பாவும் மாமா உறவுமுறையுள்ளவரும் அதிகாலையிலேயே கோயில் நுழைவு, சாதிய அடக்குமுறைக்கு எதிராகக் கிராமங்களில் நடைபெறும் போராட்டங்கள் பற்றியெல்லாம் விவாதிப்பார்கள்.

என் பக்கத்து வீட்டில் சஞ்சீவி என்ற தீவிர தி.மு.க.காரர் வட்டச் செயலாளராக இருந்தார். அவரை மாமா என்று உறவு முறையோடு அழைக்கும் அளவுக்கு என் குடும்பத்திற்கும் அவருக்கும் நெருங்கிய உறவு இருந்தது. என் அப்பாவும் அவரும் நெருங்கிய அண்ணன்-தம்பி உறவோடு பழகக்கூடியவர்கள்.

ஆரம்பகாலத்தில் பேசின் அனல் மின்நிலையம் பக்கத்தில் இருந்த சுந்தரபுரம், சிவராஜபுரம், ஜெகநாதபுரம், கரிமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1950 காலகட்டத்தில் தி.மு.க. கட்சி வளர பாடுபட்டவர்களில் அப்பாவும் ஒருவர். அங்கே சி.கே.வேணு, எத்திராஜ் என்கிற தி.மு.க்.காரர்கள் நடத்திய ‘பன்னீர்செல்வம் மன்றம்’ புகழ்பெற்ற ஒன்று. அங்கு அறிஞர் அண்ணா, சத்தியவாணி முத்து, கலைஞர், நாவலர், பேராசிரியர் அன்பழகன் எல்லாம் வந்து பேசியிருக்கிறார்கள். அந்த இரவுப் பாடசாலையில் பயின்று பலனடைந்தவர்கள், அந்தப் பகுதியெங்கும் இப்போதும் இருக்கிறார்கள், அங்கே, கட்சிக்கு நிதி திரட்ட பணம் வசூல் நடைபெறும். கலைநிகழ்ச்சியில் என் அப்பாவும் நடனமாடியதாகச் சொல்வார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

என் பாட்டனார் மற்றும் அவரது சகோதரர்கள் தீவிர தி.மு.க. பற்றாளர்கள். என் பாட்டனாரின் பங்காளிகளில் ஒருவர், எம்எல்ஏ சு.பாலன் அவர்கள். ‘கட்சிக்காக போஸ்டர் ஒட்டுகிற சச்சரவுகளில் போலீஸ் கேஸாகும்போது பல முறை அக்காதான் வெளியே அழைத்துவருவார்’ என்று என் அப்பா சொல்வார். அந்த அக்கா, சத்தியவாணி முத்து அவர்கள்தான். அந்த நாட்களில் கட்சிக்காரர்கள் எந்த வேற்றுமையுமற்று உறவினர்களைப் போல லட்சியத்துடன் உழைத்திருக்கிறார்கள். ஜெயராமன் என்ற பெயருக்கு மாற்றாக செழியன் என்று என் அப்பாவுக்கு பெயர் சூட்டியது கலைஞர்தான். சைக்கிள் பேரணிகளில் தி.மு.க. கொடிகளைக் கட்டிக்கொண்டு முன்னோக்கி ஓட்டுவதை அன்றைய இளைஞர்கள் பெருமிதமாகக் கருதுவார்கள் என்று என் அப்பாவும் மாமாவும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அந்த காலகட்டத்தில் தி.சு.நல்லதம்பி, சி.கே.வேணு, உத்தண்டி கன்னியப்பன் என்ற பல தி.மு.க.காரர்கள் இருந்தார்கள். தி.மு.க மன்றம் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. என் தெருவின் முனையிலேயே ஆரோக்கியசாமி மன்றம் முதலில் குடிசையாக இருந்து, பிறகு அது ஓடுவேய்ந்த ஒற்றை அறை சங்கமாக மாறியது. அதில் இளைஞர்கள் எப்போதும் கூடுவார்கள். அந்த நாட்களில் மாலை நேரத்தில், ரொட்டியும் பாலும் கட்சி சார்பாக வழங்கப்படும். மிசாவுக்கு எதிரான பேரணிகள் அங்கிருந்து தொடங்கிய நாட்கள் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. பேசின் பிரிட்ஜ்ரோடில் மிசாவுக்கு எதிரான மிகப்பெரிய கண்டனப் பேரணி நடந்ததுகூட என் நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் இளைஞர்கள் பெரும்பாலும் தி.மு.க.காரர்களாகவே இருப்பார்கள்.

எங்கள் பகுதியில் சஞ்சீவி மாமாதான் ஒட்டுமொத்த தி.மு.க. காரர்களின் தலைவர் என்று அந்த வயதில் நான் கருதிக்கொண்டிருந்தேன். அந்தளவு அவர்கள் பற்றோடு எப்போதும் பரபரப்பாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஒருமுறை அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு செய்தி, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, அவரது இறுதிச்சடங்கிற்குச் சென்ற பலர், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கதைகளைச் சொல்வார்கள். அதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர் சஞ்சீவி மாமாவும், அவர் மனைவி மாரியம்மாள் மாமியும். ஒரு வாரகாலத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அந்த நாட்களில் குடிசைப் பகுதியாக இருந்த எங்கள் வீதிகள் மண் சாலைகளாக இருந்தது முதல் முறையாக அங்கு சதுர சிமென்ட் பலகைகளால் ஆன தரையை அமைத்தது தி.மு.க. கவுன்சிலர் எத்திராஜ்தான்.

அது, தி.மு.க. ஆட்சிக்காலம், எங்கள் பகுதிக்கு எதிரே இருந்த கேசவபிள்ளை பார்க்கில் எப்போதும் கட்சி சார்பாக கால்பந்தாட்டங்கள் நடைபெறும். தி.மு.க. சார்பாக ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் சங்கங்கள் அமைத்து செயல்படுவார்கள். அதை எனது ‘சட்டைக்காரி’ நாவலில் பதிவுசெய்திருப்பேன். பெரும்பாலும் அந்த சங்கங்களில் இரவுப் பள்ளிகள் நடத்துவார்கள். இளைஞர்கள் எப்போதும் சமூக அக்கறையுடன் வலம்வருவார்கள்.. எப்போதும் அரசியல் உரையாடல்கள் காரசாரமாக தடக்கும்.

70-களில் எங்கள் வட்டாரத்தில் குறிப்பாக, வடசென்னையெங்கும் திமுகவே அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல் அதிக செயல்பாடுகளுடனும் இருந்தது. சுவரெழுத்து வரைவது, இரவுப் பாடசாலையில் பாடமெடுப்பது, படிக்கவும் வேலை வாய்ப்புக்கும் வழிகாட்டுவதென இளைஞர்கள் தீவிரமாக இருப்பார்கள். கட்சிக் கூட்டங்கள் அதிகமாக நடக்கும். அந்தக் கூட்டங்களில் இளைஞர்கள்தான் பெரும்பாலும் துண்டு ஏந்தி வருவார்கள், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன், இன்னும் கழகப் பேச்சாளர்கள் பலரது பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன்.

என் பகுதியிலேயே மிகச் சிறந்த பேச்சாளராக சிங்கார சடையப்பன், புலவர் நாகசாமி போன்றவர்கள் கழகப் பேச்சாளர்களாக இருந்தார்கள். அற்புதமாக உரையாற்றக் கூடியவர்கள். இரண்டு மணி நேரம் திகட்டாமல் பேசக்கூடியவர்கள். சாதிய ஒடுக்குமுறை அதற்கு எதிரான பெரியாரின் எதிர்ப்பு, அதன் வழியில் அண்ணா, பிறகு சுலைஞரின் அரசு செய்த சாதனைகள்… உள்கட்டமைப்பு, மேம்பாடு, அதில் அடித்தட்டு மக்களின் வளர்ச்சி ஆகியவை குறித்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுவார்கள்.

என் தந்தை, எம்.ஜி.ஆர் பிரிந்தபோது அ.தி.மு.க.வுக்குச் சென்று, பிறகு தி.மு.க.வுக்குத் திரும்பியவர். ஆனால், இயல்பாகவே எனக்கு தமிழின்மீது இருந்த பற்று காரணமாக, கலைஞரின் பேச்சும் எங்கள் பகுதியில் இருந்த தி.மு.க. அண்ணன்களின் செயல்பாடுகளும் என்னைத் தி.மு.க.வையே அதிகம் நேசிக்கவைத்தன. என் முதல் வாக்கை நான் தி.மு.க.வுக்குதான் செலுத்தினேன்.

1980-கள் வரை வடசென்னையில் பள்ளிக் கட்டடங்கள், ஒன்றிரண்டு சாராய வியாபாரிகளின் வீடுகள் தவிர்த்து, மொத்தமும் குடிசைப்பகுதியாகவே இருக்கும். இப்போது குடிசைகள் அரிதாகிவிட்டன. காரணம், ‘குடிசைகள் ஒழிக்கப்பட வேண்டும்’ என்பதில் கலைஞர் காட்டிய அக்கறையும் அவர் உருவாக்கிய குடிசைமாற்று வாரியமும்தான்.

தி.மு.க. காலத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், குறிப்பாக வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வாரிய குடியிருப்புகள் ஓரளவுக்கு விசாலமாக, அதிக நெருக்கடியற்று இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில், குடிசைகளிலிருந்து மக்கள் உவப்போடு அந்த வீடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள்.

எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்குவருகிறது. அனேகமாக, அது 70-களின் கடைசி என்று நினைக்கிறேன். நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை நிற வாகனம் எங்கள் ஜெகநாதபுரம் ஒன்றாவது தெரு முனையில் வந்து நின்றது. வாகனத்தின் கூரையில் இருக்கும் சதுரமான திறப்பு வழியாகத் தலையை நீட்டிக்கொண்டு கலைஞர் அவர்கள் அந்தப் பகுதியில் இருந்த பெண்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எங்கள் குடிசைப் பகுதிக்கு எதிரிலிருந்த கேசவ பிள்ளை பார்க்கைக் காட்டி, ‘நீங்கள் என்னை வெற்றிபெற வைத்திருந்தால், இந்த இடத்தில் உங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுத்திருப்பேன்’ என்று கலைஞர் சொல்ல… மாரியம்மாள் மாமி, ‘அடுத்த முறை நீங்கதான் வருவீங்க, அப்ப கட்டித் தாங்க’ என்று சொல்ல கலைஞர் சிரித்தார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

அந்த அழகிய காட்சி என் நினைவில் இப்போதும் இருக்கிறது. அவர் நின்றிருந்த வாகனத்தைச் சுற்றி 15 பெண்களுக்கு மேல் இருந்திருக்க மாட்டார்கள். அவர்களுடன் ஒன்றிரண்டு ஆண்கள். ஒரு மிகப்பெரும் தலைவராக இருந்தபோதும் வாகனத்தில் தனியாக வந்து, குடிசைப் பகுதிகளுக்கு முன் நின்று கலைஞர் எளிமையாக மக்களோடு உரையாடிக்கொண்டிருந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

தி.மு.க. மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தபோதும் சென்னையின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தியதும் சமூக நீதி மீது தி.மு.க. கொண்ட அக்கறையும் பாராட்டத்தக்கவை.

திமுக. பெரும்பாலும் சமூக நீதிக்கு ஆதரவான கூட்டணியை அமைக்கும், அமைக்க வேண்டுமென்று நானும் எனது அரசியல் பார்வையுள்ள நண்பர்களும் எதிர்பார்ப்போம். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகளுடனும் இடதுசாரிகளுடனும் தி.மு.க.நெருக்கமாக இருப்பது எங்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நம்பிக்கையூட்டும் பல செயல்பாடுகளை மேற்கொள்கிறார். குறிப்பாக, தி.மு.க. அரசு ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் இலக்கியத் திருவிழாக்கள், மாவட்டம்தோறும் புத்தகக்காட்சிகள், சர்வதேச புத்தகக்காட்சி போன்ற அற்புதமான முன்னெடுப்புகள், என்போன்ற எழுத்தாளர்களுக்கு மிக நம்பிக்கையூட்டுகிற விஷயங்களாக இருக்கின்றன.

தி.மு.க. தனது 75-வது ஆண்டை மிக வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. உண்மையில் இது, தமிழ்நாட்டு மக்களின் கொண்டாட்டமும்கூட அதற்குக் காரணம், அதன் சமூக நீதி பார்வைதான்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

MUST READ