spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

-

- Advertisement -

மனுஷ்ய புத்திரன்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது மிக நீண்டகாலம். சுதந்திர இந்தியாவின் இந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ மாநிலக் கட்சிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தோன்றி வளர்ந்து அதிகாரத்தையும்கூட கைப்பற்றி, பிறகு சிதைந்து மறைந்திருக்கின்றன. சில கட்சிகள் எந்தக் கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டனவோ அதற்கு எதிர்திசையில் சென்று, தங்கள் முகத்தை இழந்திருக்கின்றன. ஒன்றிய அரசின் நெருக்குதல்களுக்குப் பணிந்தும் அதிகாரத்திற்கான சமரசங்களில் நீர்த்துப்போயும் தங்கள் இடத்தை இழந்திருக்கின்றன. அந்தக் கட்சிகளின் முதன்மையான தலைவர்கள் மறையும்போது, அந்தக் கட்சிகள் கலகலத்துப்போயிருக்கின்றன.

we-r-hiring

ஆனால், ஒரு மாநிலக் கட்சி 75 ஆண்டுகளாகத் தனது எந்தக் கொள்கையையும் விட்டுத்தராமலும் அதன் புகழ்மிக்க தலைவர்கள் மறைந்தபோதும் அடுத்தகட்ட உறுதியான தலைமைத்துவத்தால் தன் செல்வாக்கை இழக்காமலும், மேலும் மேலும் தன்னை காலத்திற்கேற்ப தகவமைத்து, ஒரு எஃகு கோட்டை போல திகழ்கிறது என்றால், அந்த வரலாற்றுப் பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு.

சமூக நீதிப் போராட்டம், மொழி உரிமைப் போராட்டம், மாநில சமூக நீதிப் போராட்டம், சுயாட்சி என்ற மூன்று களங்களில் நின்று திராவிடம் என்ற பேரியக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன் நீதிக் கட்சியாகப் பிறந்து, குறுகிய காலத்தில் அதிகாரத்தையும் கைப்பற்றி, சமூக நீதிப்போராட்டம் வெல்லக்கூடிய போராட்டம் என்பதை நிரூபித்துக் காட்டியது. நீதிக்கட்சி அரசியல் ரீதியாகப் பலவீனப்பட்டபோது, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஒன்றிய எதேச்சதிகாரத்திற்கு எதிர்ப்பு என்ற நிலையில் சமூக சீர்திருத்தத்திற்கான மாபெரும் இயக்கமாக பெரியார் ‘திராவிடர் கழக’த்தைக் கட்டமைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டபோது, அது பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையிலான முரண்பாடு என்றே பலரும் நிறுவ முயன்றார்கள். முழு உண்மை அதுவல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் நேருவுக்கு நிகரான அரசியல் தொலைநோக்கு சித்தாந்தத் தலைவராக அண்ணாவையே குறிப்பிட முடியும். அன்று, வரலாறு அவர்கள் இருவரையும் நேர்எதிர் திசையில் நிறுத்தியிருந்தது.

அண்ணா திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களான சமூக நீதி, மொழி உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை அரசியல் அதிகாரம் இல்லாமல் அடைய முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டார். ஒன்றியத்தின் வலுவான பிடியிலிருந்து நமது உரிமைகளை அதிகாரத்தின் மூலமே அடைய முடியும் என்பதை அவரது கூர்த்த மதியினால் அறிந்ததன் விளைவே, திராவிட இயக்கத்தின் தோற்றம். அது பெரியாருடன் முரண்பட்டு, பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறந்த இயக்கம். இன்றளவும் அது அந்த இலட்சியங்களுக்காகத்தான் புதுப்புது எதிரிகளோடு போரிட்டுக்கொண்டிருக்கிறது.

கட்சி தொடங்கி 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியபோது, தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய யுகம் பிறந்தது. மாபெரும் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தொடங்கின. அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞர் சாத்தியப்படும் என்று எவரும் நம்பியிராதவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தினார். ஆயிரமாண்டுகளின் நிலமானிய சமுதாயத்தின் கொடூரமான கட்டமைப்பினைப் படிப்படியாகத் தகர்த்து, பெரும் புரட்சியொன்றை கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தினார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

தி.மு.க. அதிகாரத்திற்கு வந்த வரலாற்றைவிட அது யாருக்கெல்லாம் அதிகாரமளித்தது என்பதுதான் மிக முக்கியமானது. அது ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பரந்துபட்ட ஒரு வலுவான கட்சிக் கட்டமைப்பு அடிமட்டம் வரை உருவாக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான  கிளை அமைப்புகள், துணை அமைப்புகள் சீரான விதிமுறைகளின்கீழ் உருவாக்கப்பட்டன. இலட்சக்கணக்கானோர் அதன் நிர்வாகிகளாக உள்ளே வந்துசேர்ந்தனர்.

யார் அவர்கள்?

தி.மு.க. தோன்றுவதற்கு முன்பு, இடதுசாரிகள் தவிர அரசியல் அதிகாரமும் பங்கேற்பும் ஆதிக்கச் சாதியினரிடமும் பண்ணையார்களிடமுமே இருந்தது. தி.மு.க. இதைத்தான் உடைத்துத் தகர்த்தது. சாதிப் படி நிலையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர் கல்வியறிவற்றவர்கள், கிராமப்புற எளிய மக்கள், நகரப்புற புதிய படித்த தலைமுறையினர், நிலமற்றவர்கள், அரசுப் பதவிகள் அற்றவர்கள், கூலித் தொழிலாளிகள் என விளிம்பு நிலையினர் அனைவருக்கும் மிகப்பெரிய வெளியினை தி.மு.க. திறந்துவிட்டது.

அவர்கள், அலை அலையாக இயக்கத்தை நோக்கி வந்தனர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற நெருப்பு, அந்த அலையை மேலும் தீவிரப்படுத்தியது. தமக்கான மீட்பராகவே அவர்கள் தி.மு.க.வைக் கண்டனர். இடுப்பில் கட்டிய துண்டு, தோளுக்கு ஏறியது. சாதி இழி பெயர்களால் அழைக்கப்பட்டவர்கள், தி.மு.க. மேடைகளில் அவர்கள் பெயர்களோடு சேர்த்து ‘அவர்களே… அவர்களே… என அழைக்கப்படும் கௌரவத்தை அடைந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்புகள், அவர்களது சாதிய அடையாளப்படுத்தலுக்கு எதிரான தாக்குதலாக அமைந்தன. அவர்களது பிறப்பின் அடிப்படையிலான சுட்டலைக் கடந்து, அவர்கள் ‘தி.மு.க.காரன்’ என்றோ ‘கட்சிக்காரன்’ என்றோ புதிய சமத்துவ அடையாளத்தை அடைந்தனர்.

அது வெறும் அடையாளம் மட்டுமல்ல, கிராமங்களின் சமூகப் பொருளாதார உறவுகளிலும் இது பெரிய மாற்றங்களை உருவாக்கியது. கிராமங்களில் நிலத்தில் விவசாயக்கூலிகளாக மட்டும் இருந்தவர்கள், பல்வேறு தொழில்களை நோக்கி நகரவும் நிலமானிய சமூகத்தின் அதிகாரத்திலிருந்து விடுபடவும் தி.மு.க.வின் இந்த அரசியல் எழுச்சி பெரிதும் காரணமாக அமைந்தது. கலைஞர் தன் ஆட்சிக்காலங்களில் அதிகாரமற்றவர்கள் அதிகாரம் பெறுவதற்கான மிகப்பெரிய முன்னெடுப்புகளைச் செய்து, அதில் வெற்றியும் பெற்றார். அந்த வகையில், தி.மு.க. அரசியல் மாற்றத்திற்கான இயக்கமாக மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான இயக்கமாகவும் திகழ்ந்து, ஒரு ஜனநாயக சமத்துவ வெளியை எல்லா மட்டங்களிலும் நிறுவியது.

தி.மு.க. எப்படி மக்களை அரசியல்மயப்படுத்தியது?

அரசியலைக் கற்க விரும்பும் அரசியலில் நிலைபெற விரும்பும் எவரும் கற்கவேண்டிய அடிப்படைப் பாடங்கள் இதில் இருக்கின்றன. தி.மு.க. இடையறாத ஒரு பரப்புரை இயக்கம். அதன் பரப்புரை உத்திகள் அன்று எந்த இயக்கத்தாலும் பின்பற்றப்படாத புதுமைகளால் மக்களை நெருங்கிச்சென்றன. முடி திருத்தகங்கள், சலவை நிலையங்களில் இளைஞர்கள் கூடி, கழகத்தின் கருத்துகளை எடுத்துரைத்தனர். தி.மு.க.வின் இளைஞர் அணியே மாண்புமிகு முதலமைச்சரால் ஒரு முடி திருத்தகத்தில் தொடங்கப்பட்டதுதான். மக்களுக்கான அரசியலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதன் குறியீடுதான் அது.

சுவரொட்டிகளை அரசியல் ஆயுதமாக தி.மு.க. பயன்படுத்தியது. நூற்றுக்கணக்கான இதழ்கள் தி.மு.க. தலைவர்களால் நடத்தப்பட்டன. அவர்கள், மொழி உரிமைக்காகவும் பண்பாட்டு விடுதலைக்காகவும் பகுத்தறிவு சிந்தனைகளுக்காகவும் நூல்களை எழுதினர். தமிழ்நாடெங்கும் முற்போக்குக் கருத்துகளுக்கான பட்டிமன்றங்கள் நடந்தன. படிப்பகங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் படிப்பகங்களின் மரபை இன்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துவருகிறார்.

இளைஞணி சார்பாக தமிழ்நாடு முழுக்க அவர் நிறுவிவரும் படிப்பகங்களைக் காணும்போது, அனைத்து நவீன ஊடகங்களையும் திறம்பட பயன்படுத்தும் ஓர் இயக்கம் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் அறிவுப் பரவலாக்கலுக்காக உருவாக்கபட்ட படிப்பசு இயக்கத்தை இன்றும் தொடர்கிறது என்றால். அது தனது அடிப்படையான வழிமுறைகளில் எவ்வளவு உறுதியான பார்வைகளைக் கொண்டிருக்கிறது என்று அறியலாம்.

என்.எஸ்.கிருஷ்ணன், நாகூர் ஹனீபா போன்றவர்கள் இசையால் கழகக் கருத்துகளை எடுத்துச்சென்றனர். அண்ணாவும் கலைஞரும் நாடகத்தையும் திரைப்படத்தையும் முற்போக்கு அரசியல் கருத்துகளுக்கான பரப்புரை கருவிகளாக முழுமையாகப் பயன்படுத்தினார். கவியரங்கங்கள் நடத்தப்பட்டன. இலக்கியக் கூட்டங்களில் திராவிட இலக்கியத்தின் அடிப்படைகள் முன்வைக்கப்பட்டன. தி.மு.க. பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைக்கழகங்களாகி, உள்ளூர் பிரச்சினைகள் முதல் உலகப் பிரச்சினைகள்வரை பேசப்பட்டன. ஊர்வலங்களும் பேரணிகளும் மாநாடுகளும் இடையறாது நடத்தப்பட்டு, மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டனர்.

எவராலும் அசைக்கமுடியாத வலிமையை இந்த 75 ஆண்டுகளில் தி.மு.க. பெற்றிருக்கிறது என்றால், அது தன் தொண்டர்களை முழுமையாக அரசியல்மயப்படுத்தியதால்தான். அது அதிகாரத்தின் மீதான ஆசையை மட்டும் அடிப்படையாகக்கொண்ட அரசியல் அல்ல. ‘நமக்கென்று ஓர் ஈடு இணையற்ற இலட்சியம் இருக்கிறது’ என்ற கொள்கை வழிப்பட்ட அரசியல், எல்லா நெருக்கடியான காலங்களிலும் கழகத்தை உறுதியாகத் தாங்கி நின்றது அந்த அரசியல்தான். அதுவே, தி.மு.க.வின் தனித்துவமான அடையாளமும் இயங்குமுறையும்கூட. இடையறாத அரசியல் கல்வியும் அரசியல் போராட்டங்களும் அந்த இலட்சியக் கனலை அணையவிடாமல் எப்போதும் காத்துவந்திருக்கின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

தி.மு.க. மாநில உரிமைகளுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் ஒன்றியத்தின் வல்லாதிக்கத்தை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய கட்சி ஆனால், அது தேசிய அரசியலில் தொடர்ச்சியாக வகித்து வந்திருக்கும் முக்கியமான, முதன்மையான பாத்திரம், இந்தியாவின் வேறு எந்தப் பிராந்தியக் கட்சிக்கும் அமைந்திடாத ஒரு சிறப்பு, சுதந்திர இந்தியாவில் முதல் தேசிய அரசு அமைந்தபோதே, தமிழ்நாட்டின் உரிமைக் குரலை நாடாளுமன்றத்தில் அண்ணா உரத்து ஒலித்தார். அந்த மரபு இன்றுவரை தொடர்கிறது. தேசியப் பிரச்சினைகளிலும் மாநில உரிமைசார்ந்த பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் முதன்மையான குரலாக தி.மு.க.வின் குரலே இருக்கிறது. குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிப்பதில், ஒன்றியத்தில் உறுதியான அரசுகளை அமைப்பதில், கூட்டணி அரசுகளில் பங்கேற்று தேசிய அளவிலான கொள்கைகளை வகுப்பதில், திமுக ஆற்றியிருக்கும் பங்கு நிகரற்றது.

ஒன்றியத்தில் மிக நீண்டகாலம் கூட்டணி அரசுகளில் பங்கேற்ற ஒரே இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தவிர தேர்தல்களில் போட்டியிடாத மாபெரும் தேசியக் கட்சி தி.மு.க. என்றால் அது மிகையில்லை. மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி.சிங் அரசு மூலம் நிறைவேறச் செய்து, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தியா முழுக்க கலைஞர் உறுதிப்படுத்தினார்.

சமூக நீதிக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் தி.மு.க. நடத்திவந்திருக்கும் சட்டப் போராட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான பல உரிமைகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றம், மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடு, ஆளுநருக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்புகள், 2 ஜி பொய் வழக்குக்கு எதிரான சட்டப் போராட்டம் என வரலாற்றுச் சிறப்புமிக்க பல சட்டப் போராட்டங்களில் தி.மு.க. வென்றிருக்கிறது.

தி.மு.க. சந்தித்த தேர்தல் தோல்விகளையும் துரோகங்களையும் வேறு எந்த இயக்கமேனும் சந்தித்திருந்தால், அது எப்போதோ சுக்குநூறாகச் சிதறியிருக்கும். கட்சியில் இரண்டு பெரும் பிளவுகள், நெருக்கடி நிலை கால ஒடுக்குமுறைகள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அந்தப் பழி தி.மு.க. மீது சுமத்தப்பட்டு, தமிழ்நாடு முழுக்க தி.மு.க.வினரின் சொத்துகள் சூறையாடப்பட்டன. பல தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் கைதுசெய்யபட்டு விசாரணையை எதிர்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில், தி.மு.க. கடும் இழப்பைச் சந்தித்தது. அதேபோல 2009 ஈழப்படுகொலை நடந்தபோது, அதன் பழி தி.மு.க. மீது போடப்பட்டது.

2.ஜி பொய் வழக்கும் அதனோடு சேர்ந்து 2011ல் மீண்டும் ஒரு பெரும் இழப்பை தி.மு.க. சந்தித்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியின் தலைவர்களோ தொண்டர்களோ மனம் தளரவில்லை. உருக்குலையவில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்த சக்திகள் அழிந்துபோனதை வரலாறு கண்முன் பதிவுசெய்தது.

கலைஞருக்குப் பிறகு அண்ணாவின், கலைஞரின் போராட்டங்களையும் குன்றாத இலட்சிய வேட்கைகளையும் கட்சித் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று மேலும் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்கிறார். பாசிச சக்திகளுக்கு எதிராக இன்று தி.மு.க.வும் அதன் தலைவரும் பெரும் சவாலாக இருப்பதை நாடு காண்கிறது. ஆளுநரின் அத்துமீறல்கள், மொழி ஆதிக்கம், வரிப் பகிர்வு, தொகுதி மறுவரையறை, புதிய கல்விக்கொள்கை, நீட் என அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் தி.மு.க தலைவரே முன்னணி படைவீராக இருக்கிறார்.

இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டு, அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் மோடியும் அமித்ஷாவும் அஞ்சுகிறார்கள். உதயநிதியின் அரசியல் எழுச்சி, அவர்களை அமைதியிழக்கவைக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரைத் தாக்குகிறார்கள் என்றால், அவரது அரசியல் இடம் அண்ணா, கலைஞர், தளபதி வழியில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு அதுவே சான்று. சனாதனம் பிரச்சினையில் அவரை பின்வாங்கச் செய்ய, தேசிய அளவில் முயற்சி செய்தார்கள். அவர் பின்வாங்கவும் இல்லை; அவர் கருத்தை திரும்பப் பெறவும் இல்லை. நெருக்கடிநிலை காலம் எப்படி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அச்சுறுத்தவில்லையோ அப்படியே சனாதன சர்ச்சை உதயநிதி ஸ்டாலினையும் அச்சுறுத்தவில்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

அண்ணா அறிவாலையம் கழகத்தின் இதயமாகத் தொண்டர்களின் இடையறாத வருகையால், இராப்பகலாய் துடித்துக்கொண்டே இருக்கிறது.

எனக்கு மூன்று காட்சிகள் நினைவுக்குவருகின்றன. 2014ல் நாடாளுமன்றத தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள், தி.மு.க. தோல்வியை சந்தித்திருந்தது. கலைஞர் செய்திகளில் தேர்தல் அலசலை முடித்துவிட்டு வெளியே வந்தேன். தாளமுடியாத சோர்வினால் என் மனம் இறுகியிருந்தது. வெளியே அப்படி ஒரு வெயில், அறிவாலய வாசலில் ஒரு தொண்டர் தலையில் அடித்துக்கொண்டு, கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தார். அவர் காலில் செருப்புகூட இல்லை. அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நானும் அழுதேன்.

2021ல் தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற நாள். தந்தி டிவி-யில் என் தேர்தல் அலசலை நிறைவுசெய்து, வாக்காளர்களுக்கு நன்றி கூறிவிட்டு நேராக அறிவாலயம் வந்தேன். என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. தொண்டர்களின் பெருங்கூட்டம். என் கண்கள் மனநிறைவின் கண்ணீரால் நிறைந்தது.

கலைஞர் மறைவுக்கு முந்தைய தினங்களில், காவேரி மருத்துவமனை வாசலில் இராப்பகலாய் தொண்டர்கள் பெரும் திரளாய் நின்றிருந்தனர். ‘எழுந்து வா தலைவா’ என்ற முழக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நரம்புகளையும் அதிரச் செய்தது. அவர் மறைந்த அன்று. கோபாலபுரம் இல்லத்தின் முன் பெரும் தொண்டர் திரள் இருந்தது. காவல் துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் செய்ய முயன்றனர். தொண்டர்கள், ‘நாங்கள் எப்போதும் இங்குதான் இருக்கிறோம். இப்போதும் இங்குதான் இருப்போம். கலைஞர் இல்லாவிட்டாலும் நாளையும் இங்குதான் இருப்போம்’ என்று உறுதியாகக் கூறி, கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

ஆம், இந்த இயக்கத்தின் கொள்கை ஒளியை நெஞ்சில் ஏந்திய எவரும் எப்போதும் இங்குதான் இருப்போம். இதுவே, எங்கள் அரசியல் செல்நெறி. இதுவே இந்த இயக்கத்தின் மகத்துவம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!

MUST READ