spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..

பாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..

-

- Advertisement -

பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..பாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று ஏற்க மறுத்து நிராகரித்தது. இந்த தீர்ப்பு காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்த முக்கியமான வெற்றி என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றும், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில், சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்திலிருந்து பாஜக தலைமை அலுவலகம் நோக்கி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர்.

we-r-hiring

இதனையடுத்து, தி.நகர் பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், ஊர்வலமாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த கைது நடவடிக்கையில் கே.வி.தங்கபாலு உட்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.வி.தங்கபாலு, ”சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது உண்மைக்கு புறம்பாக, ஆதாரமற்ற பொய் வழக்குகளை பதிவு செய்த பாஜக அரசுக்கும் அதன் தலைமைக்கும் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு கடும் சாட்டையாக அமைந்துள்ளது. இந்தியாவில் இன்னும் நீதி நிலைத்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய பத்திரிக்கை என்றும், அது நலிவடைந்தபோது காங்கிரஸ் கட்சி தனது சொந்த நிதியை பயன்படுத்தி மீட்டெடுக்க முயன்றதுதான் உண்மை என்றும் விளக்கினார்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ஒரு பைசா கூட தனிப்பட்ட லாபம் அடையவில்லை. இதை மறைத்து சொத்து அபகரிப்பு என பொய் பிரச்சாரம் செய்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.

அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் அவமதிக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் தங்கபாலு கூறினார்.

எத்தனை வழக்குகள் போட்டாலும் காங்கிரஸ் கட்சி அஞ்சாது. நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், வீதிகளிலும் தொடர்ந்து போராடுவோம். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ். வெள்ளையனையும் குண்டுகளையும் பார்த்து அஞ்சாத கட்சி நாங்கள். ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு எழுவார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த நாடு மீண்டும் பாதுகாப்பாகவும், ஜனநாயகமாகவும் இருக்க வேண்டுமெனில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும். இந்தியாவின் பெருமைகளை காப்பாற்ற காங்கிரஸ் அவசியம். இந்தியா வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் வாழ வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராக, நீதிமன்ற வழியாகவும், மக்களிடையிலும் காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தை தொடரும் என்றும், இந்தியாவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காக்கும் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும்” என்றும் தங்கபாலு தெரிவித்தார்.

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

MUST READ