தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், செந்தில்நாதன், நாமக்கல் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள தவெக பெண் நிர்வாகி ஒருவரது வீட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் சென்று கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள், கதவை உடைத்துச்சென்று செந்தில்நாதனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

விசாரணையில் செந்தில்நாதன், தவெக பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்த நிலையில், செந்தில் நாதனை பொறுப்பில் இருந்து விடுவித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


