சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18ஆம் தேதி சென்னை சிவனாந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு அழைத்துச்சென்று அவர்களை சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் தங்களது கோரிக்கையை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இன்று இரண்டாம் கட்டமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் செவிலியர்களின் கோரிக்கை ஏற்கபடும்பட்சத்தில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


