கோ.ரகுபதி

திராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர் என்ற பெயர், அரசின் பட்டியல் சாதிகள் வகைமையிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் குறிக்கிறது.

ஆதிதிராவிட இயக்கங்களுக்கு முரணாக முன்னிறுத்தும் அரசியலானது, தனியார்மயப் பொருளாதாரத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட ஜாதி அடையாள அரசியலில் தொடங்குகிறது. திராவிடக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதிலும் பார்ப்பனரல்லாத ஜாதியினரை ஒருங்கிணைத்தும் அவர்களை அரவணைத்தும், ஆதரித்தும் உக்கிரமாகச் செயல்பட்ட பெரியாரின் செயல்பாடுகளைத் தாக்குவதில் கவனம் குவிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதல் அதை ஆதிதிராவிடர்களுக்கு எதிரான இயக்கமாகத் திரித்துக் கூறுவதில் தொடங்கி, இன்று அது தி.மு.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் முரண்பாட்டைக் கட்டமைப்பதுவரை நீடிக்கிறது.
திராவிடர் கழகங்களும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆதிதிராவிட இயக்கங்களும் ஆளுமைகளும் கோட்பாட்டு அடிப்படையில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. திராவிடர் கழகம் முதல் தி.மு.க வரை, பெரியார் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை அம்பேத்கரை கொண்டாடுவது இதற்குச் சாட்சிகளாக இருக்கின்றன. இப்புள்ளிகளை இக்கட்டுரை எடுத்துரைக்க முயற்சி செய்கிறது.
அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது யார்?
படிநிலை ஜாதிய சமூகத்தில் பிராமணர்களின் ஜாதி ஆதிக்கத்தால் ‘தீண்டத்தகாதோர்’ என விலக்கப்பட்ட மக்கள் குழுக்களை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிறுவும் நோக்கில், ‘பறையர் படைப் பிரிவு’ உருவாக்கவும் சமையலர் உட்பட சில தேவைகளுக்காகவும் பிரிட்டிஷார் அம்மக்களை அரவணைத்தனர். இதற்கு சற்றேறக்குறைய முன்னரும் பின்னருமாகக் கிறிஸ்துவ மிஷனரிகளும் அம்மக்களுக்குக் கல்வி உட்பட சில சீர்திருத்தங்களை முன்னெடுத்தனர். ஹிந்து படிநிலை ஜாதிய சமூகக் கட்டமைப்பு, தீண்டாமை என்ற பொய்மையால் எவற்றையெல்லாம் மறுத்ததோ, அவற்றையெல்லாம் அம்மக்களுக்குக் கிறிஸ்துவ மிஷனரிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் கொடுத்தனர்.
இதன் விளைவாக, ஒடுக்கப்படுகின்ற மக்களிடம் சமூக விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஜான் ரத்தினம், அயோத்திதாசர் போன்றோரிடம் திராவிட ஓர்மை தோன்றியது; பிராமணராதிக்க எதிர்ப்பு வலுப்பெற்றது. இக்காலத்தில் ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகைமைகளில் இடம்பெற்றுள்ள ஆதிதிராவிடர்களும் ஜாதி திராவிடர்களும் அக்காலத்தில் தனித்தனி இயக்கமாகச் செயல்பட்டபோதிலும் அவர்களுக்குள் ஒன்றுபட்ட இயக்கம் உருவாகவில்லை.
இப்போக்கை உடைத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை ஒன்றிணைத்ததில் தென்னிந்திய நலச் சங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இது ஜாதி, மொழி கடந்து பிராமணர்களின் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகப் பிராமணரல்லாதோரை ஒன்றிணைக்க வித்திட்டது. மேலும், படிநிலை ஜாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தும் பிராமணியத்தையும் ஜாதியையும் எதிர்ப்பதை ஒரு பொதுச் சிந்தனையாக மாற்றி, அதைப் பரவலாக்கியது. செயல்தளத்தில் அது தீண்டாமைக்கு எதிரான போராட்டமாக வலுப்பெற்றது. இது, பொதுவெளி உரிமைகளைக் கோருவதாக இருந்தது. ‘குடிஅரசு’ இதழும் பெரியாரும் பொதுவெளி உரிமைகளை ஆதரித்தனர்.
‘தீண்டாமை விலக்கு கமிட்டியானது தமிழ்நாட்டில் எங்கெங்கு தீண்டாதார்கள் என்போருக்குப் பொது உரிமைகள் அளிக்கப்படாமல் கொடுமை செய்யப்பட்டுவருகின்றதோ, அந்தந்த இடங்களிலெல்லாம், பிரச்சாரம் செய்வதும் அஹிம்சா தர்மத்தோடு அவசியம் ஏற்பட்டால் சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகம் முதலியன செய்வதும் அதன் கொள்கைகளாகும்’ என நூற்போர் சங்க ஸ்தாபனமும் தீண்டாமை விலக்கு சங்க ஸ்தாபனமும் அறிவித்தன. இக்கமிட்டியில், மிராசுதாரர்களும் இடம்பெற்றிருந்தனர். (குடி அரசு, 25.10.1925, ப. உ பிடிஎப். 43).
“ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதிதிராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும்” எனப் பொதுவெளி உருவாக்கத்தைப் பெரியார் ஆதரித்தார். (குடி அரசு, 25-04-1926, பரு பிடிஎப். 238), “பற்பல வகுப்புப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களிலும் விளையாட்டுக் கட்டங்களிலும் ஒன்றாய்ச் சேர்த்து, சிறுவயதிலேயே சகோதர உணர்ச்சியை உண்டுபண்டுவது தீண்டாமையை ஒழிக்கும் வழிகளில் ஒன்றாகும். தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவோருடைய மக்களை ஏற்றுக்கொள்ளாத பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அரசாங்கத்தார் உதவிப்பணம் கொடுத்து, அங்கீகாரம் செய்யாமல் மறுத்து, இவ்வழியில் உதவி செய்ய வேண்டும்” என்று எம்.டி.சுப்பிரமணிய முதலியார் 1926 டிசம்பர் 25 அன்று உத்தமபாளையத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் 10-வது மாகாண மகாநாட்டில் பேசினார். (குடி அரசு, 02-01-1927, பிடிஎப்.
8) இவை, பிராமணரல்லாதோர் இயக்கம் ஆதிதிராவிடர்களை உள்ளடக்கிய பொதுவெளிகளை உருவாக்குவதில் தெளிவாகச் செயல்பட்டது விளங்குகிறது. சென்னை மாகாண சட்டசபையில் ஆதிதிராவிடர்களின் பிரதிநிதியான ஆர். வீரையனின் பொதுவெளி உரிமை தொடர்பான திருத்த மசோதாவை ஆதரித்து, ‘குடி அரசு’ இதழ் எழுதியது. (குடி அரசு, 05.9.1926, ப. ச. பிடிஎப். 204). ஆதிதிராவிட இயக்கங்களும் சுயமரியாதை இயக்கமும் பொதுவெளியில் உரிமைகளைப் பெறுகின்ற இலட்சியத்தில், ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட்டது தெளிவு. திருச்சிராப்பள்ளி அரசு பயிற்சிப் பள்ளியில் ‘ஹெட்மாஸ்டர் சுந்தரமய்யர் தாழ்ந்த வகுப்பினர்களாகிய எங்களைப் பிரித்து, தனியாக உட்காரவைத்துப் பாடம் போதிக்கின்றார்’ என்பதை விமர்சித்து எழுதியதோடு, ‘இதனாலன்றோ டி.எம்.நாயர் பெருமானும் பி.தியாகராய வள்ளலும் தீண்டாமை என்னும் கொடிய பேய் ஒழிந்து சமத்துவம் உண்டாகும்வரை சுயராஜ்ஜியம் கூடாது என்று உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகஞ்செய்து, இங்கிலாந்து சென்று போராடி, ஜெயக்கொடி நாட்டிவைத்து, தம் உயிரைத் தியாகஞ் செய்தார்கள்’ என்று அவ்வியக்கங்களை ஆதரித்து ஜி.சந்நியாசி மூப்பனார் எழுதினார். (குடி அரசு, 29.8.1926, ச. பிடிஎப். 181). இதனால், சுயமரியாதை இயக்கத்துக்கும் ஆதிதிராவிட இயக்கங்களுக்கும் அரசியல் நட்புறவு மலர்ந்தது. தாங்கள் இரு பிரிவினர்களும் திராவிட இனத்தினர் என்ற ஓர்மையும் அவர்களிடம் இருந்தது. ஆதிதிராவிட சமூகங்களும் சுயமரியாதை இயக்கமும் கொள்கை அடிப்படையில் இணைந்து இயங்கினர். இதைப்போன்ற ஒருமித்த கருத்துடைய வடநாட்டு ஆளுமைகளையும் அடையாளங் கண்டனர்.

அம்பேத்கரின் அறிமுகம்
எவ்வாறு சென்னை மாகாணத்துக்கு அம்பேத்கர் அறிமுகமானார், யார் அவரை அறிமுகப்படுத்தினர் என்ற கேள்விகள் இங்கு முக்கியமானவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய அளவில் பரவியதால், இதை எதிர்த்த காங்கிரஸ் இயக்கமும் அப்பண்பைப் பெற்றது. பிராமணியமும் ஜாதியாதிக்கமும் இந்திய அளவில் இருந்ததால், அதை எதிர்ப்போரும் இந்திய அளவில் ஒருங்கிணைந்தனர். ஜாதியத்தின் தீண்டாமையையும் பிற ஒடுக்குமுறைகளையும் ஒழிக்க ஆதிதிராவிடர் அல்லாத ஜாதியினரால் உருவாக்கப்பட்ட ‘ஒடுக்கப்பட்டோருக்கான சங்கம்’ பம்பாய், சென்னை போன்ற பகுதிகளில் 1910-களில் செயல்பட்டது.
அமைப்புகளும் ஆளுமைகளும் ஏற்கெனவே அகில இந்திய அளவில் செயல்பட்ட பின்புலத்தில்தான் அம்பேத்கர் சென்னை மாகாணத்துக்கு அறிமுகமாகியதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். ‘குடி அரசு’ இதழ் அம்பேத்கருக்கு முன்னரே வடநாட்டில் சிலரை அடையாளங் கண்டது. தோட்டிகளையும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் தீண்டாதாராக நடத்தப்படுவது அக்கிரமம் என்பதை ஹிந்துக்கள் உணரும்படி செய்வதற்காகத் துளசிராம் போடி என்பவர், 1925 அக்டோபர் 26 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதைக் குடிஅரசு இதழ் பதிவுசெய்தது இதற்கு சாட்சி. (குடி அரசு, 01.11.1925, ப. உ, பிடிஎப். 61). இச்செய்தி, பெரியார் ஒத்த கருத்துடைய ஆளுமைகளையும் செயல்களையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்வதை முன்னெடுத்தது தெளிவு.
துளசிராம் போடிக்குப் பின் சுமார் நான்காண்டுகள் கழிந்த பின்னரே அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார். ஆதிதிராவிடர், சுயமரியாதை இயக்கங்களைப் போல் அம்பேத்கரும் பொதுவுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். சமூக வெளியில் இதுவே அருடைய முதல் போராட்டமாகும். மஹத் குளத்தில் 1927
மார்ச் 20 அன்று – நீரெடுக்கும் பொதுவுரிமைப் போராட்டத்துக்கு அம்பேத்கர் தலைமை ஏற்றது இதற்கு சாட்சி. ஆதிதிராவிடர்களுக்கென தனிக் கிணறுகள் ஏற்படுத்துவதை 1926ஆம் ஆண்டிலேயே எதிர்த்த பெரியாரும், பொதுக்குள உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த அம்பேத்கரும் பிராமணிய ஜாதியத்தை எதிர்ப்பதில் ஒரு புள்ளியில் இணைகின்ற ஆளுமைகள் என்பதை விளக்கத் தேவையில்லை. இருப்பினும், அம்பேத்கரின் பொதுக் குளப் போராட்டம் அவரைப் பிறருக்கு அடையாளம் காட்டியது எனக் கருதலாம்.
இத்தகைய போராட்டங்களின் பின்னணியில், அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார். ‘பம்பாய் சுயமரியாதை முழக்கம் – முதல் மகாராஷ்டிர சுயமரியாதை மகாநாடு – டாக்டர் அம்பெட்கார் தலைமைப் பேருரை’ எனத் தலைப்பிட்டு, ‘குடி அரசு’ இதழில் 1926 ஜூன் 16 அன்று ஒரு செய்தி வெளியானது. நாசிக் சமூக சமத்துவ சங்கம் 1929 மே 26ஆம் தேதி நடத்திய இம்மாநாட்டில், நாயக், குப்தா,யாதவர் என ஆதிக்க ஜாதிகளில் பிறந்து சுயமரியாதைவாதிகளாக உருமாறியோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டுக்குத் தலைமையேற்ற “டாக்டர் பி.ஆர்.அம்பெட்கார், எம்.ஏ. பார்-அட் லா அவர்களும்” என மிக மரியாதையுடன் குடிஅரசு அவரை அறிமுகம் செய்தது. “டாக்டர் அம்பெட்கார் ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்காகப் பெரிதும் உழைத்துவருகிறார்”, என்றும், “பிறகு டாக்டர் அம்பெட்கார் தலைமை வகித்து ஒரு மணி நேரத்துக்கு அதிகமாகப் பின்வருமாறு பிரசங்கம் செய்தார்” என்றும் செய்தி வெளியிட்டது. “இந்து சமூகத்தில் உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் ஏற்பட்டு, சுயமரியாதையையும் ஆண்மையையும், பலத்தையும் அழித்துவிட்டது. நல் வாழ்க்கைக்குச் சுயமரியாதையும் ஆண்மையும் அத்தியாவசியமானவை எனத் தொடங்கும் அவருடைய பேச்சு, ஒடுக்கப்பட்டோர்கள் அனுபவிக்கும் இன்னல்களை விவரிக்கிறது.
“இந்த வகுப்பாரின் சிறுமை நிலையை மாற்ற வேண்டுமாயின் அவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி உண்டாகச் செய்து, அவர்கள் தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்காகத் துணிந்து முயலும்படி அவர்களைத் தூண்டிவிடுவது அத்தியாவசியம். படிப்பினால் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கஷ்டங்களும் துன்பங்களும் பெரிதும் நீங்குமாயினும் சமூக வாழ்க்கையில் அவர்கள் நிலைமை உயர்வடைவதற்குக் கல்வி மாத்திரம் போதாது. உதாரணமாக, நான் மிகவும் உயர்ந்த கல்வி கற்றிருக்கிறேன்.
அப்படியிருந்தும் நான் ஒரு தீண்டாதவனாகவே கருதப்படுகிறேன். ஆகையால், ஜாதி பேதம் என்ற கொடிய வருணாசிரமக் கட்டுப்பாட்டை அடியோடு அழித்தால்தான் நாம் மேன்மையடைய முடியும்” என்று பேசியதாகக் ‘குடிஅரசு’ பதிவுசெய்துள்ளது. இக்காலத்தில் வெளியான வேறு பத்திரிகைகளில் அம்பேத்கரைத் தேடியபோது, அவர் குறித்த செய்திகளைக் காண இயலவில்லை. எனவே, அம்பேத்கரைத் தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் மிகவும் மரியாதையுடன் அறிமுகம் செய்தது பெரியார் என்ற முடிவுக்கு வரலாம். (குடி அரசு, 16-06-1929, பிடிஎப். ப. 410), இதற்குப் பின் அம்பேத்கரின் செயல்பாடுகள் ‘குடி அரசு’ இதழில் தொடர்ந்து வெளியாகின. இவை தனித்துக் காணப்பட வேண்டும்.

தி.மு.க.வும் – அம்பேத்கரும்
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உதித்த திராவிட முன்னேற்றக் கழகமும் அம்பேத்கருடன் அரசியல் நட்புறவைத் தொடர்ந்து பேணுகிறது. இந்து சட்டத்திருத்த மசோதாவை அம்பேத்கர் முன்மொழிந்தபோது, அவரையும் அம்மசோதாவையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. தி.மு.க.வின் முக்கிய ஆளுமையான அண்ணா ‘திராவிட நாடு’ பத்திரிகையில் அம்பேத்கர் முன்னெடுத்த இந்து சட்டத்திருத்த மசோதா குறித்து தலையங்கம் எழுதினார். இம்மசோதாவை ‘இந்திய சட்டசபையில் சட்ட மந்திரி டாக்டர் அம்பேத்கர் கொண்டுவந்தார்.
அம்பேத்கர் அடக்கி அமுக்கி வைக்கப்பட்ட வீரர் பரம்பரையின் வழியில் வந்தவர். இந்து மதத்தின் கோரப்பிடியிலே சிக்கிச் சீரழியும் ‘சேரிவாழ்’ மக்களின் பிரதிநிதி- அவர் கொண்டுவந்தார், திருத்த மசோதா’ என எழுதிய ‘திராவிடநாடு’, சாதி ஒழிய வேண்டும், சமத்துவம் பரவ வேண்டும் என்பதுகூட இம்மசோதாவின் நோக்கம் அல்ல. பல பெண்களை ஒரு ஆண் மணக்கும் பலதார மணம் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும், விவாகரத்து செய்துகொள்ள ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் அருகதை உண்டு போன்றவைதான் அம்பேத்கர் செய்ய விரும்பிய முக்கிய திருத்தங்கள் எனப் பதிவுசெய்தது.
தி.மு.க.வும் இம்மசோதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாளான 1950 ஏப்ரல் 14 அன்று திராவிட முன்னேற்றக் கழகப் பெண்கள் மாநாட்டிலும், தேனாம்பேட்டை இந்து சட்டத்திருத்த ஆதரவு மாநாட்டிலும் அம்பேத்கரின் சட்டத் திருத்தத்தை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (திராவிடநாடு,16-4-1950, ப. 8-9).
தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும் ‘பகுத்தறிவு’ என்ற பத்திரிகையை வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் செயல்பட்ட ப.கண்ணன், அம்பேத்கரை ஆதரித்து செய்திகள் வெளியிட்டார். ‘இந்து’ சட்டத் திருத்தம்’ எனத் தலைப்பிட்டு தலையங்கம் பகுத்தறிவு 1951 அக்டோபர் 18 ஆம் தேதி இதழில் வெளியானது. “அறிஞர் டாக்டர் அம்பேத்கரின் இந்து சட்டத்திருத்த மசோதா, இந்தியப் பாராளுமன்றத்தில் இறுதியாகக் கைவிடப்பட்டது. இந்தியா சுயராஜ்ஜியம் பெறுவதற்கு முன்பிருந்தே, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பிருந்தே, சட்டசபையில் கொண்டுவரப்பட்ட இம்மசோதா, சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, கவனிக்க நேரமில்லை என்ற காரணங் காட்டி ஒழிக்கப்பட்டுவிட்டது! இதன் விளைவாக, அம்பேத்கர் சட்ட மத்திரி பதவியினின்றும் சட்ட சபையினின்றுமே வெளியேறும்படி நேர்ந்துவிட்டது.
குலத்திற்கொரு நீதி கற்பித்து, ஒரு இனத்தின் உயர்வுக்கு ஆதரவளிக்கும் மனுதர்மம், யாக்ஞவல்கியம் போன்ற ஆரிய தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எழுந்ததே இந்து சட்டம். காலத்திற்கும் நீதிக்கும் புறம்பானது. பச்சை வருணாசிரமத்தைப் பாதுகாப்பது! அறிஞர்கள் பலர் இக்கேடு பற்றி சிந்தித்தார்கள், எழுதினார்கள், பேசினார்கள். ஒரு மசோதாவை உருவாக்கினார், அறிஞர் அம்பேத்கர் எனத் தலையங்கம் தீட்டியது. (பகுத்தறிவு 18.10.1951). இதற்கு முன்னரே அம்பேத்கரை ஆதரித்து ‘பகுத்தறிவு’ இதழ் செய்திகள் வெளியிட்டது.
“மதக் கொடுமையும் சாதிக் கொடுமையும் பழக்கவழக்கங்களின் பெயரால் நிகழும் அநீதிகளும் அழிக்கப்பட வேண்டும் என்பதில், மாறாத கருத்துடன் பணியாற்றும் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அவர் பேச்சும் எழுத்தும் துணிகரமானவை. மிகப் பயனுள்ளவை. எனவேதான் தாழ்த்தப்பட்டோரின் மதிப்புக்குரிய ஏகத் தலைவராக இன்றளவும் இருந்துவருகிறார். நான் ஒரு இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்க மாட்டேன் என்று சொல்லி, இந்து மதம் தீண்டாதார்க்கு இழைக்கும் கொடுமைகளை நாடறியவைத்தவர். தமது இடைவிடாத உழைப்பால், தாழ்த்தப்பட்ட இனத்திற்கும் பல அரசியல் உரிமைகளைத் தேடித்தந்தவர்.
இந்திய உபகண்டத்திலிருக்கும் எந்தத் தலைவரும், அறிஞரும் அவரின் கருத்துகளை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. சாதியை ஒழிக்க வழி – சூத்திரர்கள் யார்? – இந்துமதப் புதிர் -ரூபாய் பிரச்சினை – தீண்டப்படாதார், முதலான நூல்கள் பல எழுதியுள்ளார். எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. அவை யாவும், அறிவின் அடிப்படையில் அமைக்கப்பெறும் எதிர்கால சமுதாயத்திற்கு வழிகாட்டுவனவாகும். இத்தகைய அறிவியல் மேதை, டாக்டர் அம்பேத்கரின் 58ஆம் ஆண்டு நிறைவு நாள், ஏப்ரல் 14ல், பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வரும் ஆண்டுகளில், அறிவியல்வாதிகள் அவரது நினைவு நாளை மேலும் சிறப்பாகக் கொண்டாடுதல் வேண்டும். அவரது கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். வாழ்க அறிஞர் அம்பேத்கர்!” எனப் பகுத்தறிவு எழுதியது (தடித்த எழுத்துகள் மூல இதழில் அவ்வாறு உள்ளது. பகுத்தறிவு 15-5 1951)
பகுத்தறிவு இதழில், “ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களுக்கு அரசியல் விழிப்பும், தன்மான உணர்ச்சியும் உண்டாக்கத் தொண்டாற்றிய முதுபெருந் தலைவர், அறிஞர் அம்பேத்கர். இந்தியக் குடியரசு சட்டத்தை உருவாக்குவதில் அவரது பேருதவியும் ஒத்துழைப்பும் பெரிதும் தேவைப்பட்டதென்றால், அவருடைய அறிவு வன்மையும் தகுதியும் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. அம்பேத்கர் சிறந்த பகுத்தறிவுவாதி. அவர் பேச்சும் எழுத்தும் மதம்பிடித்த வைதீக வெறியர்களுக்கு வெடிகுண்டு; அறிஞர் அம்பேத்கரின் 60ஆம் ஆண்டு நிறைவு விழா, சென்ற திங்கள் சில பல இடங்களிலே கொண்டாடப்பெற்றன.
இவை போதா. தாழ்த்தப்பட்ட இனத்திலே பிறந்த காரணத்தால், அவரது ஆற்றல் தக்கபடி பயன்படுத்தப்படவில்லை. சிறு குறு கருத்து வேற்றுமைகள் இருப்பினும், தக்க அறிஞர்களைப் போற்ற நாட்டுமக்கள் முன்வர வேண்டும். அறிவின் தன்மையை, உழைப்பின் பயனைக் கௌரவிக்க வேண்டும். வாழ்க அறிஞர் அம்பேத்கர்! என அறைகூவியது. (பகுத்தறிவு மே 1952, ப. 6).
பொதுவெளியாக்கிய கலைஞர்
பொதுவெளி உரிமைகளுக்காக ஆதிதிராவிடர், சுயமரியாதை இயக்கங்களும் அம்பேத்கரும் முன்னெடுத்த போராட்டங்கள், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளன. தி.மு.க.வும் பொதுவெளி உரிமைக்கான இயக்கத்தை முன்னெடுத்தது. இந்து சமூகத்தில் பொதுவுணர்ச்சியே இல்லை என்ற அம்பேத்கரின் கூற்றைப் பகுத்தறிவு இதழ் எடுத்துரைத்தது. ‘சாதியின் கொடுமை’ எனத் தலைப்பிட்டு, ‘இந்து தர்மத்திற்கு சாதியினால் ஏற்பட்ட பயன் வருந்தத்தக்கதாகவே இருக்கிறது. சாதி பொதுநல உணர்ச்சியையே கொன்றுவிட்டது. பரோபகார உணர்ச்சியையும் சாதி அழித்துவிட்டது. பொதுஜன அபிப்பிராயம் உருவாவதற்கும் சாதி முட்டுக்கட்டையிடுகிறது.
ஒரு இந்துவின் பொதுஜனம் அவனுடைய சாதியே! அவன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாகிறான்; பக்தி செலுத்தக் பட்டவனாகிறான். ஒழுக்கங்களிலும்கூட சாதியுணர்ச்சி புகுந்துவிட்டது. தகுதியுடையோரிடம் யாரும் அனுதாபம் காட்டுவதில்லை. யோக்யதையுடையோரைப் பாராட்டுவதுமில்லை; தேவையுடையவர்களுக்குப் பிச்சை கொடுப்பதுமில்லை; துன்பப்படுவோர்க்கு இரக்கம் காட்டுவதுமில்லை.
தருமங்களும் சாதியுணர்ச்சியுடனேயே செய்யப்படுகின்றன. – டாக்டர் அம்பேத்கர்.’ என அவருடைய கூற்றைத் தமிழில் வெளியிட்டது. (பகுத்தறிவு 01 ஜூன் 1952, 1. 24).
ஆதிதிராவிட, சுயமரியாதை இயக்கங்கள் முன்னெடுத்த பொதுவெளி உரிமைகளைக் கலைஞர் மாற்றுவழியில் செயல்படுத்தினார். அரசு நிறுவிய பள்ளி, கல்லூரி போன்ற பொது நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களைச் சேர்ப்பதிலும்; அவ்வாறு சேர்த்தால், அவர்களை வகுப்பறையில் உட்கார வைப்பதிலும் ஜாதியப் பாகுபாடு காட்டப்பட்டதால் பொதுவுரிமைப் போராட்டம் உருவானது. பொது நிறுவனங்களுக்குக் குறிப்பாக, கல்வி நிறுவனங்களுக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டி ஆதிதிராவிட, பழங்குடியினச் சமூகங்களும் பிறரும் அங்குப் பயிலும் நிலையைக் கலைஞர் உருவாக்கினார்.
சென்னை வியாசர்பாடியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியை 1972ஆம் ஆண்டு நிறுவினார். அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி 1990ஆம் ஆண்டில் சென்னைச் சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி எனக் கலைஞர் பெயர் சூட்டினார். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை 1997ஆம் ஆண்டு நிறுவினார். ‘எல்லா சட்டக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் சார்ந்து வாழ வேண்டும். இயங்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்தியாவிலேயே முதல் முயற்சியாக, முதல் தடவையாக, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை இன்றைக்கு நாம் தொடங்கியிருக்கிறோம்’ என டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் கலைஞர் பேசினார். (முரசொலி 21.9.1997).
இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய மற்றொரு வரலாறும் உண்டு. மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று அங்குள்ள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பதினைத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் அத்தீர்மானத்தைச் சுட்டிக் காட்டி நடைபெற்ற போராடத்தைத் தி.மு.க ஆதரித்தது. இந்தியாவிலிருந்து அப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒரே மாநிலம், தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான தந்திகள் அனுப்பப்படுவதற்கு கலைஞர் முக்கிய காரணமாக இருந்தார் (மணிகோ. பன்னீர் செல்வம், நீலச்சட்டைக் கலைஞர் (சென்னை: அய்யுறு, 2024) ப. 154). இவ்விடத்தில் குறிப்பாகக் காணவேண்டிய மற்றொரு பொது வெளியும் உண்டு. ஒவ்வொரு ஜாதியினரும் தனித்தனியாக வசிக்கின்ற வசிப்பிடங்களுக்கு மாற்றாக சமத்துவபுரம் என்ற பொதுவெளியையும் கலைஞர் உருவாக்கினார். (முரசொலி 21.9.1997).
அம்பேத்கரின் பெயரிலேயே பொது நிறுவனங்கள் உருவாக்கியதற்கான காரணங்களைக் கலைஞர் எடுத்துரைத்தார். அவர் பெயருக்கு உள்ள சக்தியை அறிவாற்றலை-புரட்சி எண்ணத்தை நாங்கள் எங்கள் உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டு வந்த காரணத்தால்தான் அவருடைய மேதா விலாசத்தைத் தமிழகத்தில் எடுத்துச் சொன்னோம். மாநில சுயாட்சியானாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானாலும், மதமாச்சரியங்கள் அகன்ற சமதரும சமுதாயம் ஏற்பட வேண்டுமென்றாலும் அதற்கெல்லாம் அம்பேத்கரிடம் ஆதாரமிருக்குமா என்று தேடினால் எதைக் கேட்டாலும் தருகின்ற கற்பகத்தரு போல் அவருடைய கருத்துகள் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தன.
ஆகவேதான், அவருக்கு இந்தச் சிறப்பை இங்கே செய்திருக்கிறோம் எனக் கலைஞர் பேசினார். (முரசொலி, 14.4.1974), மேலும், ‘அம்பேத்கருடைய கருத்துகளோடு எங்களுக்கு உள்ள ஈடுபாட்டிற்குக் காரணமே, எங்களை ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களும் வழிநடத்தி, வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களும் எந்தக் கொள்கைகளை எங்களுக்குக் கற்றுத் தந்தார்களோ அதே கொள்கையுடையவர் அம்பேத்கர். அந்தக் காரணத்தினால் எங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களிடத்திலே தணியாத ஆர்வமும் ஈடுபாடும் என்றென்றும் உண்டு’ எனக் கலைஞர் பேசினார். (முரசொலி 21.9.1997).
அம்பேத்கரின் கோட்பாடுகளில் கலைஞருக்கு ஏற்பட்ட இணக்கத்தால் சிலவற்றைச் செயல்படுத்தினார். குறிப்பாக, ஜாதிகளை ஒழிக்க அம்பேத்கர் கூறிய ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பரிசுத் தொகைகள் வழங்கும் திட்டத்தைக் கலைஞர் செயல்படுத்தினார்.
முரசொலி 21.9.1997). பொதுவெளி உருவாக்கம், ஜாதி ஒழிப்பு போன்ற இலட்சியங்களில் பெரியாரும் அம்பேத்கரும் கோட்பாடு அடிப்படையில் ஒரே நிலைப்பாடு உடையவர்கள் எனக் கலைஞர் அணுகினார். இதனால், ‘இந்தியாவைப் பொறுத்தவரையில் அம்பேத்கரும்-தென்னகத்தைப் பொறுத்தவரையில் பெரியாரும், அண்ணாவும் தூக்கிப்பிடித்த சமதர்ம-சமத்துவக்கொடி, தொடர்ந்து வீறுகொண்டு பறந்திட பகுத்தறிவுப் பட்டாளத்தின் பயணம் தொய்வுபடாது நடந்திட வேண்டும்’ என அம்பேத்கரின் நினைவு நாளில் கலைஞர் வலியுறுத்தினார். (மணிகோ. பன்னீர்செல்வம், நீலச்சட்டைக் கலைஞர் (சென்னை: அய்யுறு, 2024) ப. 129)
கலைஞரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளை ‘சமத்துவ நாளாக’ அறிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் உரையாற்றிய இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பி.ஆர். அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது இப்போது ஒரு ‘ஃபேஷன்’ ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்’ எனப் பேசியதாகச் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பதிலடியாக, மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் வலை தளப் பதிவில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது பெரியார் காலத்திலிருந்தே தொடங்குகிறது. ‘குடிஅரசு’ இதழின் செய்திகள், கட்டுரைகள், தலையங்கங்கள் ஆகியவற்றில் அம்பேத்கரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்து மசோதா திருத்தம் தொடர்பான தலையங்கத்தில், ‘திராவிட நாடு’ பத்திரிகையில் அண்ணா அம்பேத்கரின் பெயரை நான்கு முறைகள் பதிவுசெய்துள்ளார். ‘பகுத்தறிவு’ இதழில் ப.கண்ணன், ‘முரசொலி’யில் கலைஞர் ஆகியோர் இதைச் செய்துள்ளனர். இதைத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொடர்கிறார். அம்பேத்கரின் கோட்பாடுகளைப் பரப்பும் நோக்கில் அவரது அனைத்து படைப்புகளையும் இன்றைய இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து தமிழ்வளர்ச்சித் துறையால் இந்தியாவில் சாதிகள், சூத்திரர்கள் யார்?, தீண்டப்படாதோர்- அவர்கள் யார்? என மொத்தம் 10 தொகுதிகளாக நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 300 பக்கங்களைக் கொண்டவை. மக்கள் பதிப்பான இந்த 10 தொகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்கும் வழி’ நூலை பெரியார் 1937ஆம் ஆண்டு வெளியிட்டது. தி.மு.க.வின் ஆளுமையான பி.கண்ணன் அம்பேத்கரின் நூற்களை 1951ஆம் ஆண்டில் எடுத்துக் காட்டியது ஆகிய செயல்பாட்டின் தொடர்ச்சியாகலே இதனையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இவை, அம்பேத்கரின் கொள்கையுடன் தி.மு.க.வுக்கு இருக்கின்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடு என்பது தெளிவு.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார். ஒரு நிகழ்ச்சியில் அவர் சனாதனம் குறித்து தன் விமர்சனத்தை முன்வைத்தார். இதைக் கண்டித்து, அவருக்கு எதிராகப் போராட்டங்களும் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இருப்பினும், சனாதனத்தை எதிர்ப்பதில் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதில்லை என உறுதிபட அவர் கூறினார். அம்பேத்கரின் அடிப்படைக் கொள்கை சனாதனத்தை எதிர்ப்பது ஆகும். ஏனென்றால், ஜாதி, தீண்டாமை போன்ற ஒடுக்குமுறைகளுக்கான கருத்தை சனாதனம் வழங்குகிறது. எனவே, அம்பேத்கரைப் பின்பற்றி உதயநிதி ஸ்டாலினும் எதிர்க்கிறார்.

தி.மு.க: அம்பேத்கரின் அரசியல் வாரிசு
அம்பேத்கருக்கும் தி.மு.க.வுக்குமான அரசியலுறவு சுயமரியாதை இயக்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தபோதிலும் அம்பேத்கரியத்தை தி.மு.க. பின்பற்றுகிறது. இதனால் அம்பேத்கருக்கும் தி.மு.க.வுக்குமான அரசியலுறவு தொப்புள்கொடி போல் தொடர்கிறது. தி.மு.கழகம் அம்பேத்கருடைய மேதாவிலாசத்தை இன்று, நேற்றல்ல நீண்ட நெடுநாள்களுக்கு முன்னால் பெரியார் அவர்களால், கழகத்திலே இருக்கிற தலைவர்கள் அத்தனை பேராலும் இந்த நாட்டிலே இருக்கிற சந்து பொந்துகளில், பட்டி தொட்டிகளில், பட்டணக் கரைகளில், படிந்த புல்வெளிகளில் நடைபெற்ற கூட்டங்களில் மாநாடுகளில் அம்பேத்கருடைய புகழைப் பாடியிருக்கிறார்கள்” எனக் கலைஞர் பேசியது வரலாற்று உண்மைதான் (முரசொலி, 14.4.1974).
அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியைத் தொடர்வோரும், அதிலிருந்து பிரிந்தோரும் மட்டுமல்ல அம்பேத்கரின் தொடக்ககாலம் முதல் இன்றுவரை ஆதரித்தும், அவருடைய பெயரைத் தொடர்ந்து உச்சரித்தும், அவரது பெயரிலேயே பொது நிறுவனங்களை நிறுவியும், அம்பேத்கரியத்தைப் பரப்ப அவரது எழுத்துகளை அச்சிட்டும், சனாதனத்தை எதிர்த்தும் செயல்படுகின்ற தி.மு.க.வும் அம்பேத்கரின் அரசியல் வாரிசே!
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!


