அடையாளம் காட்டினார் கலைஞர். அதை தினம் தினம் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு 2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஒரு பக்கம் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே இன்னொரு பக்கம் விஜய்யை களத்தில் இறக்கி ஆழம் பார்க்கிறது. விஜய்யை வைத்து திமுக கூட்டணியை உடைப்பது. முதல் முயற்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பரிசோதனை செய்தார்கள். அதில் தொல். திருமாவளவன் சாதுரியமாக புரிந்துக்கொண்டு அவர்களின் திட்டத்தை முறியடித்து விட்டார்.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து பிரித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அதுவும் தோல்வியில் தான் முடியும் என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுக கூட்டணியை உடைக்க முடியாது.
இப்போது அதிமுக கூட்டணியில் தவெக வை கொண்டு வருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதற்கான வேலையை தொடங்கி விட்டார்கள்.
கரூரில் தவெக நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் விஜய்யின் கழுத்தை சி.பி.ஐ. மெல்ல மெல்ல இறுக்க தொடங்கியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி விஜய்யையும், புஸ்ஸி ஆனந்தையும் சி.பி.ஐ. டெல்லிக்கு அழைத்து கூட்டணிக்கு வரவழைக்கின்ற வேலையை தொடங்கி இருக்கிறது.
அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
“இன்னும் பல்லாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் நடக்கும் என்று 1971ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னார்.
“தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, இருமொழி கொள்கையை சட்டமாக்கியது, சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது என்று தான் செய்துவிட்டுப் போன செயல்கள் நீடிக்கும் வரை, அதில் ஒருவர் கைவைக்க பயப்படும் வரை தமிழ்நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்று பொருள்” என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா சொன்னார்.
‘எனக்குப் பின்னால் யார் என்று கேட்பீர்களானால், இதோ இந்த மேடையில் அமர்ந்திருக்கும் தம்பி ஸ்டாலின் தான் கழகத்தை வழிநடத்த வேண்டும்” என்று தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னார்.

இந்த முப்பெரும் தலைவர்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்ன சொற்கள் இவை. இம்மூன்றையும் பொருத்திப் பார்த்தால் மலைத்து நிற்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் மாண்புமிகு முதலமைச்சா மு.க.ஸ்டாலின்
”எனக்குப் பின்னால்’ என்று மு.க.ஸ்டாலினை முன் கொண்டு வந்து கலைஞர் நிறுத்தக் காரணம், மகன் என்பதற்காக அல்ல. ஐம்பதாண்டு காலமாகத் தமிழ் மக்களுக்காக தளபதி ஸ்டாலின் உழைத்ததால் தான்.
முரசொலி ஊழியராக, பத்திரிக்கையாளராக, தேர்தல் பரப்புரையாளராக நாடக நடிகராக, திரையுலகக் கலைஞராக, பகுதிக் கழக பிரதிநிதியாக இளைஞரணிச் செயலாளராக, துணைப்பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உழைத்த உழைப்பே, ‘எனக்குப் பின்னால் இவர்’ என்று மு.க.ஸ்டாலினை நோக்கி தலைவர் கலைஞரின் ஆட்காட்டி விரல் அடையாளம் காட்டியது.
மாநகரத்தின் மேயராக சட்டமன்ற உறுப்பினராக – மாநிலத்தின் அமைச்சராக-துணை முதலமைச்சராக செயல்பட்ட நிர்வாகத் திறனைப் பார்த்தே-தலைவர் கலைஞர் அவர்கள், ‘தனக்கு அடுத்து’ என்று அடையாளம் காட்டிச் சொன்னார். அந்த நம்பிக்கையின் ஒளிவீச்சைத் தான் இப்போது நாம் பார்த்து வருகிறோம்.
சமூக நீதி – சுயமரியாதை- சமதர்மம்- சமநீதி திராவிடவியல் ஆகிய சொற்களை அரசியல் சொற்களாக மட்டுமல்லாமல் ஆட்சியில் ஆவணங்களாகவும் மாற்றி காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் அமைக்கப்பட்ட ஆட்சிகள் அனைத்தும் தலைவர்களின் பெயரால் முதலமைச்சர்களின் பெயரால் மட்டுமே அழைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பெருந்தலைவர் காமராசர் ஆட்சி பேரறிஞர் அண்ணா ஆட்சி, தமிழினத் தலைவர் கலைஞர் ஆட்சி, புரட்சித் தலைவர் ஆட்சி, அம்மா ஆட்சி என்று தான் அழைக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் முதல் தடவையாக தன்னுடைய ஆட்சிக்கு கொள்கைப்பூர்வமான ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டார் முதலைமச்சர் முகஸ்டாலின்.
‘இது திராவிட மாடல் ஆட்சி’ என்று சொன்னார். ஒரு கொள்கையின் அடையாளமாகத் தனது ஆட்சியை அடையாளப்படுத்தினார். இந்தியாவில் எந்த மாநில அரசும் ஒரு கொள்கையின் ஆட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. இது முதல் மதிப்பெண்ணுக்கு உரியது என்றால், ‘தனது பெயரை விலக்கிக் கொண்டது’ என்பது தலைசிறந்த மதிப்பெண்ணுக்கு உரியது. இனி எந்த மாநில முதலமைச்சராவது இப்படி நடந்து கொண்டால், ‘முதலில் சொன்னது தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் தான்’ என்று வரலாறு பதியக் கூடியதாக அது இருக்கும்.
அடையாளம் காட்டினார் கலைஞர். அதை தினம் தினம் மெய்ப்பித்து காட்டிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என்.கே.மூர்த்தி


