spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

-

- Advertisement -

அதி அசுரன்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.

we-r-hiring

சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே இயங்கின. இலட்சியக் கனவாக இருந்த அந்த இலக்குகளைப் பெரியார் காலத்திலேயே நனவாக்கிக் காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் வெளிப்பாடுதான் சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஆகும்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்பது ஏதோ பார்ப்பனர் இல்லாமல் நடத்திக்கொள்ளும் திருமணங்களுக்கான அங்கீகாரம் என்று மட்டும் மேம்போக்காகக் கருதமுடியாது. தனிச்சொத்து, ஜாதி, ஆணாதிக்கம் ஆகிய அனைத்தின் மீதும் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலே இச்சட்டம் என்பதை விளக்கமாகக் காண்போம். பெரியாரின் வரிகளிலிருந்து தொடங்குவோம்.

ஜாதி, ஆணாதிக்கம், தனிச் சொத்தைக் காக்கவே திருமணம் “என்றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக்கொள்ள உரிமை ஏற்பட்டதோ, அதன் பிறகுதான் திருமண முறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடி சேமித்துவைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகுதான், வெளியே பொருள் தேடிச் செல்லும் போதுதான், சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்தபோது தனக்குச் சிரமபரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாய் இருந்தது. பெண், ஒருவனது சொத்துக்குப் பாதுகாப்பாக அமைந்த பிறகு, அவனுக்குச் சொத்துமானாள். பிறகு, அந்தச் சொத்துக்கு வாரிசு தேடவேண்டிய அவசியமும் ஏற்பட்டது .

வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான், தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமையாக்கிக்கொள்ளவும், அவளைத் தன்னை அன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும்படிச் செய்யவும் ஆன நிர்பந்தம் ஏற்பட்டது.

எனவே, பெண் அடிமையாக்கப்படவும் அவளது இயற்கை ஆதிக்கம் பறிமுதல் செய்யப்படவும். ஆணுக்கு மட்டுமே சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் காரணமாகும்.” பெரியார், விடுதலை (11.10.1948)

‘பொதுவாகத் திருமணம் என்றால், ஆணுக்கு ஒரு வேலைக்காரியைத் தேர்ந்தெடுத்தல் என்பதோடு, அவள் வாழ்நாள் பூராவும் அவனுக்கு ஏவலாளாக இருந்து தொண்டூழியம் செய்ய வேண்டுமென்பதோடு, மிக இழிவான தன்மையில் பெண்களை நடத்துவதுதான் இத் திருமணங்களின் கருத்தாகும். திருமணம் நடந்ததென்றால், அந்தப் பெண் ஆணுக்கு நிரந்தர அடிமை என்பதேயாகும். இதை வலியுறுத்துவதே திருமணமாகும்.

இரண்டாவதாக, மனிதன் முட்டாளாகவே, பகுத்தறிவு அற்றவனாகவே இருக்க வேண்டுமென்பதற்காக, அறிவிற்கும் – நடப்பிற்கும் சம்பந்தமில்லாத சடங்குகளை, சாஸ்திரம், பழக்கம் என்னும் பெயரால் செய்வதாகும்.

மூன்றாவது இலட்சியம் என்னவென்றால், ஜாதி இழிவை நிலை நிறுத்துவது. மனிதன் தன் ஜாதி இழிவிலிருந்து மாறக் கூடாது. அதை நிலைநிறுத்த வேண்டும் என்பதுமே திருமணங்களின் இலட்சியமாக இருந்தது.- பெரியார். (02.02.1969).

திருமணம் பற்றிய தனது கருத்துகளைச் செயல்படுத்தும் நோக்கில் 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் முதல் களத்தை அமைத்தார். அங்கு நடந்த சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில்,

  1. பெண்களின் கலியாண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டும்.
  2. மனைவி கணவன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்துவாழ இஷ்ட மில்லாதபோது, தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும்.

3.விதவைகள் மறுமணம் செய்துகொள்ள உதவி செய்ய வேண்டும்

  1. திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களும் ஆண்களும் ஜாதி, மத பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி, கணவன்களைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள முழுஉரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றுக் கேற்றவாறு கலியாணச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். – குடி அரசு (24.02.1929) என்ற தீர்மானங்களை நிறைவேற்றினார். தொடர்ச்சியாக மாநாடுகளில் தீர்மானங்கள், அறிக்கைகள், மக்களிடம் பரப்புரைகள் என பெரியார் தொடர்ந்து இவற்றுக்காகவே இயங்கிவந்தார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

ஜாதியின் விதைதான் அகமணமுறை ! அம்பேத்கர்

அம்பேத்கரும் ஜாதி, திருமணம் பற்றிய தனது கருத்தை ‘இந்தியாவில் ஜாதிகள் அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாகவே சமர்ப்பித்திருக்கிறார்.

ஜாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்ந்து, சரியாக மதிப்பிட்டு உரைப்பதானால், அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்துகொள்ளும் வழக்கமே ஜாதியின் அடிப்படையான ஒரே இயல்பு எனக் கூறலாம்.

இந்தியாவில் ஜாதி என்பது மக்களைச் செயற்கையாகக் கூறுபடுத்திப் பிரித்து, அகமணம் புரியும் வழக்கத்தால் ஒன்று மற்றொன்றோடு இணைவதிலிருந்து தடுத்து வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக ஆக்கியுள்ளது. சுருங்கச் சொன்னால், ஜாதிமுறைக்குத் தன் இனத் திருமண வழக்கம் அல்லது அகமண வழக்கமே தனித்தன்மை வாய்ந்த ஒரே இயல்பு என்று தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் பதிவுசெய்துள்ளார். மிக மிக முக்கியமாக, ‘கணவன் இறந்தபின் மனைவியை உடன்கட்டை ஏற்றுதல், கட்டாயமாகக் கைம்பெண்ணாக வைத்திருத்தல், குழந்தைத் திருமணம் ஆகிய கொடுமைகள், அகமண முறையைத் தொடர்ந்து பாதுகாக்கவே உருவாக்கப்பட்டன’ என்கிறார்.

உடன்கட்டை ஏற்றுதல், கைம்பெண்ணாக்குதல், குழந்தை மணம் என்ற பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் இல்லாமல் அகமண வழக்கத்தை நிலைநிறுத்த முடியாது. ‘அகமண வழக்கம் இல்லாத ஜாதி என்பது போலித்தனமாகும்’ என்றும், ‘அகமண வழக்கத்தின் அமைப்பியக்கமே ஜாதிக்கு வித்திட்டது’ என்றும் உலக அளவில் மானுடவியலை ஆய்ந்து அறிந்து நிறுவியுள்ளார்.

வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை; திருமணம் – எங்கெல்ஸ்

ஃப்ரெடெரிக் எங்கெல்ஸ் தனது ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு, ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூலில் திருமணம், குடும்பம் பற்றிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியதாவது:
ஒருதார மண முறை வரலாற்றில் தோன்றவில்லை; அத்தகைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம்.

அதற்கு மாறாக, ஒரு பாலினம் மற்றொரு பாலினத்தை அடிமைப்படுத்துதலாக அது தோன்றுகிறது; மார்க்சும் நானும் 1846ல் எழுதிய, பிரசுரிக்கப்படாத பழைய கையெழுத்துப்பிரதியில் பின்வருமாறு எழுதினோம்:

‘குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப் பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும். வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒரு தார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது; முதல் வர்க்க ஒடுக்குமுறை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது. ஒருதார மணமுறை வரலாற்றுரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில், அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தாற் போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவக்கியது.’காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

ஜாதி, ஆணாதிக்கம், தனிச் சொத்து இவற்றைக் காப்பதே நமது திருமண முறையின் நோக்கம் என்ற சமூக அறிவியல் உண்மையை அறிந்துகொண்டால் மட்டுமே சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், சமூக அறிவியலாளர்களின் பார்வையில் அவற்றை விளக்கினோம்.

ஒளரங்கசீப் தொடங்கிய உடன்கட்டை ஏற்றுதல் தடை இந்தியாவில் நீண்டகாலம் ஆண்ட ஒரு பேரரசர் ஒளரங்கசீப். ஆரியர்களால் அவர் இன்றும் எதிர்க்கப்பட்டுக்கொண்டே இருப்பதற்கான முக்கிய காரணம், அவர் உடன்கட்டை ஏற்றுவதைத் தடை செய்தார் என்பதுவே ஆகும்.

ஹிந்து பெண்களைக் கணவர் இறந்ததும் சிதையில் ஏற்றும் வழக்கத்துக்கு 1664ல் ஒளரங்கசீப் தடைவிதித்தார் என Sir Jadunath Sarkar எழுதிய ‘A Short History of Aurangzeb’ நூலின் தமிழாக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உடன்கட்டை ஏற்றுதல் என்பது அகமண முறையையும், ஜாதியையும் காப்பாற்றவே உருவாக்கப்பட்டது என்ற அம்பேத்கரின் கருத்தை நினைவுபடுத்தி, தொடர்ந்து படியுங்கள்.

திருமணம், அகமணமுறை, குடும்பமுறை ஆகிய நிறுவனங்களில் பெரும் அதிர்வைக் கொடுத்த இரண்டு சட்டங்கள் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 1829ல் வில்லியம் பெண்டிங் என்ற வங்காள கவர்னர், உடன்கட்டை ஏற்றுதலைத் தடை செய்தார். 1856ல் டல்ஹவுசி என்ற கவர்னர் ஜெனரல், கைம்பெண் மறுமணத்தைச் சட்டமாக்கினார்.

இந்த இரண்டு சட்டங்களுமே ஆதிக்கப் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன. உடன்கட்டை ஏற்றுதலை எதிர்த்து சமுதாயப் போராட்டங்களை முன்னெடுத்த இராஜாராம் மோகன்ராய் கூட இந்தத் தடைச்சட்டத்தை அவசரப்பட்டு நிறைவேற்றவேண்டியதில்லை என்றே கூறினார். பார்ப்பனர்கள் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர். இலண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் வரை வழக்குகளைக் கொண்டுசென்றனர்.. விக்டோரியா மகாராணி நேரடியாகத் தலையிட்டு, இச்சட்டங்களை நிறைவேற்றவேண்டிய அளவுக்குத் தடைகள் உருவாக்கப்பட்டன.

உடன்கட்டை ஏற்றுதலும் கைம்பெண்ணாக்கி அடக்கிவைத்தலும் சட்டப்படி தடை செய்யப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியின் இத்தகைய அணுகுமுறைகள் தங்கள் ஆதிக்கத்தைத் தகர்க்கிறது என்பதால், பார்ப்பனர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பாலகங்காதர திலகர் முதல் வாஞ்சிநாதன் வரை ஆங்கிலேயர் எதிர்ப்பு என்பதன் அடிப்படையில் பார்ப்பனியத்தைப் பாதுகாத்தல் என்ற அம்சத்தைக் காணலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

சமுதாயத்தின் அடுத்த கட்ட நகர்வு

வரலாற்றின் அடிப்படையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டே வெளியேறவேண்டிய நிலையை உருவாக்கிய களம், இந்துமதத் திருமணமுறை எனும் ஆபத்தான களம். அதில் பெரியாரின் கருத்தியல் எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்துக் களமிறங்கியது, திராவிட முன்னேற்றக் கழகம்.

திருமணம் -அகமணம் – குடும்பம் – உடன்கட்டை – கைம்பெண் தன்மை – குழந்தை மணம் – தனிச்சொத்து -தனது இரத்த வாரிசு ஜாதி நிலைநிறுத்தம் – எனப் பல நூற்றாண்டுகளாக எவ்விதச் சலனமுமின்றி தேங்கிக்கிடந்த இந்திய இந்துச் சமுதாய அமைப்பைத் தகர்த்து, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திட்டது, அறிஞர் அண்ணாவின் சுயமரியாதைத் திருமணச் சட்டம்.

குடும்பம், திருமண முறைகளில் கை வைத்ததால், ஆங்கிலேயர்களையே விரட்டி அடித்தது ஆதிக்க ஆரியக்கூட்டம், அதே அகமணமுறையில், அதே திருமணமுறையில் அதிரடி யுத்தத்தைத் தொடங்கிவைத்தது போல சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார், அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவையும் அவரது தி.மு.க.வையும் விட்டு வைப்பார்களா? பரம்பரை யுத்தம் நாளையும் தொடரும். அதனால் யுத்தத்திற்கான பின்னணியை நாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

சட்டத்தை முன்பே உருவாக்கிய சமுதாயம்

1928ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கிலநத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. பார்ப்பனர் இல்லாமல், இந்து மதம் நிர்ணயித்துள்ள சடங்குகள் இல்லாமல் ஒரே, ஜாதிக்குள்தான் அந்தத் திருமணம் நடந்தது. ஆனால், அடுத்த ஆண்டே ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, இந்துச் சடங்குகள் மறுப்புத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெறத் தொடங்கின.

ஜாதிமறுப்பு, இந்துமதச் சடங்குகள் மறுப்புச் சுயமரியாதைத் திருமணம் எனும் திராவிடர் பண்பாட்டை 08.12.1929 அன்று பெரியார் தொடங்கி வைத்தார். அவரது நெருங்கிய தோழர். குத்தூசி குருசாமிக்கும் குஞ்சிதம் அம்மையாருக்கும் நடந்த திருமணத்தில் தொடங்கிய அப்பண்பாடு, பல தலைமுறைகள் கடந்தும் அனைவராலும் பின்பற்றப்படுகின்றன.

ஜாதி, பொருளாதார வேறுபாடுகள் இன்றி, எல்லா ஜாதியினரும் விவசாயர் கூலித் தொழிலாளர்களும், பெரும் நில உடைமையாளர்களும், உயர்கல்வி கற்றோரும் கைநாட்டு மட்டுமே வைக்கத் தெரிந்தோரும், ஏழைக்கும் பணக்காரர்களும் என் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இப்பண்பாட்டைப் பின்பற்றினர். திராவிடப்பொழில் எனும் ஆய்விதழில் ‘சுயமரியாதைத் திருமணங்கள் – சமூகமும் சட்டமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (திராவிடப்பொழில் ஆய்விதழ், ஜனவரி 2024)

இவற்றைச் சிக்கல்கள் இன்றி நடத்துவதற்காக 1929-லிருந்து திருச்சியைத் தலைமை இடமாகக்கொண்டு ஒரு புரோகித மறுப்புச் சங்கமே இயங்கியுள்ளது. தோழர் இராம சுப்பிரமணியன் அச்சங்கத்தின் பொறுப்பாளராக முன்னின்று, ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். ஜாதி மறுப்புத் திருமணங்கள் குறைந்து, சுய ஜாதிச் சுயமரியாதைத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கினால், பெரியார் உடனடியாக ஏதாவது ஒரு திருமண விழாவிலேயே அவற்றைக் கண்டிப்பார்.

“ஜாதி எப்படி ஒழியும்? அவரவர் தம் அக்காள் மகளையும், அத்தை மகளையும் மணஞ்செய்துகொண்டேயிருந்தால் ஜாதி ஒழிந்துவிடுமா?

நாடார் நாடாரையும் – வன்னியர் வன்னியரையும் – நாயுடு நாயுடுவை யும் – அய்யர் அய்யரையும் – முதலியார் முதலியாரையும் ஆதி திராவிடர் ஆதி திராவிடரையுமே திருமணஞ் செய்துகொண்டிருந்தால் இன்னும் 10 நூறாண்டுகள் ஆனாலும் ஜாதி ஒழியப்போவதில்லை. ஆதலால், சமுதாயப் புரட்சியில் உண்மையான ஆர்வமும் துணிவும் கொண்டவர்கள் கலப்புமணத்தையே செய்துகொள்ள வேண்டும். பெரியார் விடுதலை – (01.09.1950).

“புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத்திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும்… இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.” பெரியார் -விடுதலை (10.1.1947)

எனத் தொடர்ச்சியாக எழுதியும், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியும் வந்தார்.

ஒரு இயக்கத்தின் சாதனை என்று வரையறுக்க முடியாத அளவிற்கு தமிழ்ச் சமுதாயம் ஒட்டுமொத்தமாகச் சுயமரியாதைத் திருமணங்களை மேற்கொண்டது என்றாலும் இவை அனைத்தும் சட்டப்படி செல்லாதவை; அங்கீகாரம் அற்றவை ஆகும்.

குறிப்பாக, தெய்வானை எதிர் சிதம்பரம் 1955 (1) M.L.J. 128 என்ற வழக்கின் தீர்ப்பு, அன்றைய சுயமரியாதைத் திருமணங்களின் சட்டநிலைக்குச் சான்றாகும். தேவகோட்டை முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை நடந்த இந்த வழக்கில், ஜஸ்டிஸ் இராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயணராவ் எனும் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் ‘சுயமரியாதைத் திருமணமே செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள். (05.05.1915 & 1947) 26.8.1953ல் வழங்கப்பட்ட அத்தீர்ப்பில், ‘குறிப்பிட்ட இத்திருமணம் சுயமரியாதைத் திருமணம்’ என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங்கள்படி நடைபெறவில்லை. ‘சப்தபதி’ என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஹோமம் வளர்த்தல் போன்ற எந்தச் சடங்கும் நடத்தப்பெறாமல் நடைபெற்றுள்ளது. இப்படி நடப்பது (Customary Marriage) வழமையான வகை திருமணமா என்றால் அதுவும் இல்லை! எனவே, இது இந்து சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல.

‘யாரோ சிலர் கூடி, தங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் இத்திருமணம் நடத்துகிறோம் என்று கூறி, அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை! இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது; இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியாள் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள்!’ என்று தீர்ப்புக் கூறினார்கள்.

இந்தத் தீர்ப்புக்கு முன்பும், தீர்ப்புக்குப் பிறகும் மக்கள் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக்கொள்ள எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் போராட்டங்கள்

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டாலும், தி.மு.க. தோழர்களும் பொறுப்பாளர்களும் தங்களது குடும்பங்களில் முழுமையாகச் சுயமரியாதைத் திருமணங்களையே நடத்திக்கொண்டுவந்தனர். 1956 மே 27ல் நடந்த தி.மு.க திருச்சி மாநில மாநாட்டில்,

‘சுயமரியாதைக் கொள்கை, சுயமரியாதை மணமுறை பல தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அடிப்படையில், இதுவரை நடைபெற்றுள்ள திருமணங்களையும் இனி நடைபெறவிருக்கும் திருமணங்களையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் செய்யவேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1957, 1962, 1967 ஆகிய அனைத்துத் தேர்தல்களிலும், தனது தேர்தல் அறிக்கையிலேயே, ‘சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்போம்’ என்று உறுதி கொடுத்தது, திராவிட முன்னேற்றக்கழகம்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் களம்பூர் அண்ணாமலை அவர்கள், 1957ல் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டவடிவமாக்க வேண்டுமென்று சட்ட சபையில் முன்முயற்சி எடுத்தார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாதவன் அவர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்காக ஒரு தனியார் மசோதாவைக் கொண்டுவந்தார். அப்போதைய காங்கிரஸ் சட்ட அமைச்சர் திரு ஆர்.வெங்கட்ராமன் (பார்ப்பனர்) அந்தத் தனிநபர் மசோதாவிற்கு எதிராகப் பேசினார். மசோதா தோற்கடிக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டுப் புரட்சி சுயமரியாதைத் திருமண வரலாறு – ஆசிரியர். கி.வீரமணி விடுதலை (19.01.2025).

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

இந்துப் பண்பாட்டு ஆரிய சமாஜத் திருமணங்கள்

சுயமரியாதைத் திருமணங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு? நீதி மன்றங்களும் சட்டமன்றங்களும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே, ஆரிய சமாஜத் திருமணச் சட்டம் (The Arya Marriage Validation Act, 1937) இந்து திருமணச் சட்டம் 1955 (Hindu Marriage Act 1955) போன்ற திருமணச் சட்டங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலும் இந்து மதத்தில் பிறந்தவர்கள் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்ள முடியும். அப்படியானால், ஆரிய சமாஜத் திருமணங்களைவிட திராவிடர் பண்பாட்டுத் திருமணங்கள் எந்த வகையில் வேறுபட்டவை. என்ற கேள்விகளுக்கும் விடை காண வேண்டியுள்ளது.

ஆரிய சமாஜத் திருமணங்கள் இந்து திருமணச் சட்டம் 1955 இன் படி தான் நடத்தப்படுகின்றன. மணமக்களில் ஒருவர் வேற்று மதத்தில் பிறந்தவர் என்றால், அவரை இந்து மதத்திற்கு மதம் மாற்றி, அதன் பிறகு திருமணம் செய்துவைப்பதே ஆரிய சமாஜத்தின் நோக்கம். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி அவர்களின் அடிப்படை நோக்கமே வேற்று மதத்தினரை இந்து மதம் திரும்ப வைப்பதுதான்.

பெற்றோர், உறவினர் சம்மதம் மிகவும் அவசியம் என்பதை அடிப்படையாகக் கொண்டவைதான் ஆரிய சமாஜத் திருமணங்கள். பெற்றோரும், தாய் மாமனும் செய்யும் சடங்குகள் அந்தத் திருமணமுறையின் முக்கியப் பகுதியாகவே உள்ளன. வேதங்களையும் நெருப்பையும் வழிபட்டு, இந்து மதம் கூறும் சப்தபதி சடங்கையும் கட்டாயம் செய்தபிறகுதான் அந்த வகைத் திருமணங்கள் நிறைவை அடைகின்றன.

வழக்கமான ஒரு இந்துத் திருமணத்தில் இருப்பதைவிட ஆரிய சமாஜத் திருமணங்களில் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து நடத்தும் சடங்குகள் அதிகமாகவே உள்ளன. எனவே, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை.

முக்கியமாக, ஆரிய சமாஜத் திருமணங்களில் இந்து மத வேதங்களும் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் பார்ப்பன மேலாண்மையும் உயர்வாகப் போற்றப்படுகின்றன. ஒருவேளை அங்கு ஜாதி மறுப்புத் திருமணமே நடத்தப்பட்டாலும்கூட, அந்த மணமக்கள் இந்து மதத்தின் அடிப்படையான வேதங்களையும் சாஸ்திரங்களையும், இந்துக் குடும்பக் கட்டுப்பாடுகளையும் இந்துப் பண்பாடுகளையும் கட்டிக் காப்பதே தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வார்கள். சமுதாயத்தில் இந்து மதத்தின் ஆதிக்கம் குறைவதற்கான சூழல் உருவாக வாய்ப்பே இல்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

இந்து மத எதிர்ப்புச் சுயமரியாதைத் திருமணங்கள்

இந்து மதத்தில் பிறந்த ஒருவர் எப்படித் திருமணம் செய்ய வேண்டும் எனப் பார்ப்பன சம்ஸ்காரங்கள் பல விதிகளை வைத்துள்ளன. அவை அனைத்திற்கும் எதிரானதுதான் சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதாவது, இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்த) சட்டம் 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பெற்றோர், உறவினர், ஜாதிக்காரர்கள், திருமணத்தை நடத்திவைக்க பார்ப்பனர் தேவையில்லை. தாலியும் தேவையில்லை. இந்து மதத்தின் சப்தபதி போன்ற வேறு எந்தச் சடங்குகளும் அவசியமில்லை.

இப்படி எந்த மத, ஜாதிக் கட்டுப்பாடுகளும் இல்லாததால்தான் சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

2014ஆம் ஆண்டு, தோழர் இளவரசன் தொடுத்த ஓர் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்கள் தனது உத்தரவில், 2013ஆம் ஆண்டு, சென்னை இராயபுரத்தில் பதிவுசெய்யப்பட்ட 3313 திருமணங்களில் 1937 திருமணங்கள் வழக்கறிஞர்கள் அலுவலகங்களில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார் – பி.பி.சி. தமிழ் (30.08.2023)

வழக்கறிஞர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த 1937 திருமணங்களில் சிலவற்றைத் தவிர, அனைத்தும் ஜாதி மறுப்புத் திருமணங்களாகவே இருக்கும். காரணம், இந்தத் திருமணங்களுக்குப் பெற்றோர், உறவினர் சம்மதம் எதுவும் அவசியம் இல்லை.

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் மட்டும் கடந்த 2023 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31 வரை நடைபெற்ற திருமணங்கள் பற்றிய பட்டியலை விடுதலை ஏடு வெளியிட்டுள்ளது. அது அல்லாமல், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், ஏராளமான சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்துக்கொண்டு இருக்கிறார்.

அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களின் மொத்த எண்ணிக்கை 1,573. அதில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் 1216. இதில் வேற்று மாநிலத்தவர் நடத்திக்கொண்ட சுயமரியாதைத் திருமணங்கள் 112. மணவிலக்குப் பெற்றோர் திருமணங்கள் 26 கைம்பெண் மறுமணம் 18 விடுதலை ஞாயிறு மலர், (20.01.2024)

இவை அல்லாமல், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமக்கிருட்டிணன் அவர்களும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஆரிய சமாஜத் திருமணங்களுக்கும், இந்து திருமணச் சட்டம் 1955இன் படி நடக்கும் திருமணங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், இந்த வகைத் திருமணங்கள் சட்டப்படி ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பதாகத் தெரிந்தாலும் உண்மையில் அப்படி நடப்பதில்லை.

அதே இந்து திருமணச் சட்டம் 1955ல் ஒரு திருத்தமாக, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்து) சட்டம் 1967இன் படி நடக்கும் திருமணங்கள் நடைமுறையில் பெரும்பாலும் ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, மறுமணம், கைம்பெண் மறுமணம், பெண்ணே தனது துணையைத் தேர்வுசெய்து நடத்தும் திருமணம் போன்றவைகளாகவே நடைபெறுகின்றன.

இப்படி ஒரு திருமண முறையை நடத்திக்கொண்டிருந்த திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் இந்து மத எதிர்ப்புச் செயல்பாடுகளை நன்கு அறிந்த பார்ப்பனர்கள். 1928-லிருந்தே சுயமரியாதைத் திருமணங்களை எதிர்த்துவந்தனர். இந்து திருமணச் சட்டத்திற்கு உள்ளேயே ஒரு பிரிவாக அங்கீகாரம் வழங்கினால் போதும் என நாம் கோரினாலும் அவற்றைத் தொடர்ந்து எதிர்த்துவந்தனர். நமது பரம்பரை யுத்தத்தில் எதிர்ப்புகளின் பின்னணி இவைகள்தான்.

அடுத்த தலைமுறைக்கான இலக்கு

ஔரங்கசீப் எனும் பேரரசரும் வில்லியம் பெண்டிங், டல்ஹவுசி போன்ற கவர்னர் ஜெனரல்களும் தோற்ற இடத்தில், பெரியாரும் அவரது தளபதியான அண்ணாவும் வென்று காட்டியுள்ளனர். யுத்தம் இன்னும் முடியவில்லை.

தொடங்கிய 20 ஆண்டுகளில் 2000 ஆண்டுகளுக்கும் மேலான ஜாதி, மத ஆதிக்கத்தை அதிரவைத்தது தி.மு.க. ஜாதியின் அஸ்திவாரத்தைத் தகர்க்கும் திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது தி.மு.க. இது போதுமா? அடுத்த இலக்குகள் நோக்கிப் படையெடுப்பது, கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளவும் பயன்படும். என்பதால் அடுத்தகட்ட நகர்வைப் பற்றியும் சிந்திப்போம். ”

எதிர்காலத் தலைமுறைகளின் சுயமரியாதைக்காகவும் இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களாகப் பரந்து, பிரிந்து, வாழும் திராவிடர் இன மக்களின் விடுதலைக்காகவும் திராவிடர் பண்பாட்டு வாழ்வியலை ஒரு சட்ட அங்கீகாரம் பெற்ற வாழ்வியலாக மாற்றுவோம்! ஒன்றிய அரசு வழியாக அதற்கு அங்கீகாரம் பெறுவோம்! திராவிடர் தனி சிவில் சட்டத்தை உருவாக்குவோம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

MUST READ