ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நோக்கத்துடன் ஐஐடி குளோபல் தொடங்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸின் கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான உத்திசார்ந்த தளமாக ஐஐடிஎம் குளோபல் கருதப்படுகிறது. ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் வெளிநாடுகளில் தங்களுடைய கிளைகளை தொடங்கும். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டிஷ், துபாய் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அறிவுசார் தொழில்நுட்பங்களை பெறக்கூடிய வகையிலும் வழங்கக்கூடிய வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐஐடி மாணவர்களுடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடைபெற்றது. வெளியுறவு கொள்கைகளை எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள் என்ற ஐஐடி மாணவரின் கேள்விக்கு, நான் இரண்டு நாட்களுக்கு முன் வங்கதேசம் சென்றிருந்தேன். இதை கொஞ்சம் விரிவான பார்வையில் சொல்ல விரும்புகிறேன். நமக்கு பல அண்டை நாடுகள் இருப்பது ஒரு வகையில் ஆசீர்வாதம். உங்களுக்குத் தீங்கு விளைவிக்காத, நல்லுறவுடன் இருக்கும் அண்டை நாடு இருந்தால், இயல்பாகவே அவர்களுடன் நெருக்கம் உருவாகும். அப்படிப்பட்ட அண்டை நாடுகளில் இந்தியா முதலீடு செய்யும், உதவியும் செய்யும்.

நமது அண்டை நாடுகளில் பலருக்கும் முதல் தடுப்பூசி அனுப்பப்பட்டது. இந்தியாவிலிருந்துதான். உக்ரைன் போர் காரணமாக பல கட்டுப்பாடுகள் ஏற்பட்டபோதிலும், அண்டை நாடுகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை இந்தியா வழங்கியது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி வழங்கியது. அதுவே நல்ல அண்டை நாட்டின் கடமை. இலங்கையில் புயல் தாக்கியபோது, அதே நாளில் இந்தியா அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது.
இவை எல்லாம் நேர்மறையான உதாரணங்கள். ஆனால், சில அண்டை நாடுகள் தொடர்பாக சிக்கல்களும் உள்ளன. தீவிரவாதிகளிடமிருந்து நமது மக்களை பாதுகாப்பதற்கு நமக்கு முழு உரிமை உள்ளது. நம்மை பாதுகாப்பதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். பல தசாப்தங்களாக தீவிரவாதம் நீடித்து இருந்தால், நல்ல அண்டைநாட்டு உறவை உருவாக்க முடியாது. தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டுடன் நல்லுறவு, நீர் பகிர்வு போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.
வங்கதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அங்கு நிலைமை சீரான பிறகு, நல்ல அண்டைநாட்டு உறவு தொடர்ந்து நிலவும் என்று நம்புகிறோம். ஆப்கானிஸ்தான் தொடர்பான உறவு குறித்த ஐஐடி மாணவரின் கேள்விக்கு, ஆப்கானிஸ்தான் உடன் இந்தியாவுக்கு நூற்றாண்டுகளாக நீடிக்கும் உறவு உள்ளது. இன்றைய நிலையில் சில சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் தற்போது பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகிறது. அங்கு உள்ள என் இணையான அதிகாரியுடன் நான் நல்ல, பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன். நிலைமைகள் எதிர்காலத்தில் மேம்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சீன குடியுரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து ஐஐடி மாணவர் கேள்விக்கு, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த பெண் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கமாகவே உள்ளது. எதிர்காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
“அரசு கடன் வாங்குவது”பயமல்ல – ஒரு வளர்ச்சி திட்டத்திற்கான அடித்தளம்!!!


