ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாணவர்கள் மத்தில் உரையாற்றினாா்.
வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வரும் ‘வெற்றி நமேத’ நிகழ்ச்சியில் விஐடி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

அப்போது பேசிய அவர், வேலூர் தினகரன் நாளிதழ், விஐடியுடன் இணைந்து வெற்றி நமதே நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நமது தினகரன் நாளிதழ் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை மாவட்டம், மாநிலம் மற்றும் இந்திய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறி நல்ல முறையில் மக்கள் பணியை ஆற்றி வருகிறது. அதேபோல் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெறவும், உயர்கல்வியை தேர்ந்தெடுக்கவும் எளிதாக புரியும் வகையில், வல்லுநர்களை வைத்து கருத்துக்களை எடுத்து கூறுவதற்காக தினகரன் நாளிதழை பாராட்டுகிறேன்.
ஒரு மனிதனுக்கு ஊக்கமும், உழைப்பும் இருந்தால் உலகளவில் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதற்கு ரோல் மாடலாக வேந்தர் விசுவநாதன் உள்ளார்.
அதேபோல் நீங்களும் ஊக்கமும், உழைப்பும் கொண்டு படித்தால் உயர்ந்த இடத்தை பிடிக்க முடியும். விஐடியில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெரும் 150 மாணவ, மாணவிகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து இலவசமாக விஐடியில் படிக்க வைக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அந்த மாணவர்களுக்கு, இந்த கல்வி சூழல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நல்ல முறையில் படிக்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பலர் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் சிறந்த சாதனையாளர்களாக ஜொலிக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நீங்களும் ஸ்டார்ஸ் திட்டத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால், வரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். பொதுத்தர்வுக்கு இன்னும் 40 நாட்கள் உள்ளது. எனவே முக்கியமான கேள்விகள் எவை, அதில் உள்ள சந்தேகங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, கடின உழைப்புடன் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். அத்துடன் 12ம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து கருத்துரையாளர்கள் கூறும் அறிவுரைகள் கூர்ந்து கவனித்துக்கொள்ளுங்கள்.
பெற்றோருக்கு மரியாதை அளிப்பது, கடின உழைப்பு, ஒழுக்கம், தீர்க்கமான பார்வை ஆகியவை இருந்தால் வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் நம்மால் செல்ல முடியும்.
உங்களால் முடியாதது உலகில் எதுவும் இல்லை. எந்த பாடத்தில் அதிக ஈடுபாடு உள்ளது என்பதை சிந்தித்து, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து உயர்கல்வியை தேர்வு செய்து படியுங்கள்.
தமிழக அரசும் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ரூ.1000 வழங்குகிறது. அதபோல் நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வியில் 2ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்று தருகிறது. நீங்களும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றிக்கொள்ள வாழ்த்துகிறேன். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
எடப்பாடிக்கு அமித்ஷா வெடி! பாஜக கேட்ட 60 தொகுதிகள்? அன்புமணி சரண்டர் ரகசியம்!


