spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!

-

- Advertisement -

டிராட்ஸ்கி மருது

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

தி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும் அதன் மாநாடுகளில் நவீன ஓவியக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன என்றும் நான் கூறினால், சிற்றிதழ் வட்டாரங்களும் முற்போக்கு முகாம்களும் அதிர்ச்சியடையக்கூடும்.

we-r-hiring

தி.மு.கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றபோது, நவீன ஓவியக் கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. ஆர்.எம். கோபால் என்னும் ஓவியர், அந்தக் கூடத்தை அமைத்திருந்தார். ‘புரட்சிகர அறிவு ஓவியங்கள்’ என அந்த நவீன ஓவியங்களுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

“திராவிடத்திற்கென்று தனிப் புகழைத் தேடித்தரும் நவீன ஓவியத்தைத் தோழர் ஆர்.எம். கோபால் வளர்த்துவருவது போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். தோழர் அவர்கள் ஆரம்பத்திலேயே உயர்ந்த படிக்குப் போய்விட்டார். அவரது ஓவியம் எல்லோராலும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகக் காணப்பட்டாலும் அதில் ஆழ்ந்த கருத்தும் புரட்சித்தன்மையும் செறிந்திருக்கக் காணலாம்” என்று அந்த ஓவியக் கண்காட்சிக்கு ‘மன்றம்’ இதழ் விமர்சனம் எழுதியது.

எழுத்துத் துறையிலும் மேடையிலும் சமூக, பண்பாட்டு மாற்றங்களை வலியுறுத்திய இயக்கம் ஓவியத் துறையையும் தன் ஆயுதமாக்க எடுத்த முயற்சிதான், இது, கவிதையில் ‘பாரதிதாசன்’ என்னும் ஒரு திராவிடத்தடம் அழுத்தமாகப் பதிவானதுபோல் ஓவியத்தில் இவ்வாறான ஒரு தடம் பதிவாகவில்லை. ஆனால், திராவிட இயக்கத்தின் போராட்டக்களத்தில் தூரிகைகளும் தொடர்ந்து இயங்கிவந்தன.

திராவிடர்களுக்கு என்று தனி ஒவிய மரபு இருந்ததா, ஆரிய திராவிட ஓவிய மாபுக்கும் திராவிட ஓவிய மரபுக்கும் என்ன வேறுபாடு என்றெல்லாம் திராவிட இயக்க ஏடுகள் விவாதித்தன. ‘தமிழ் இதழ்கள், திராவிட ஓவிய மரபைப் பேணாமல், ஆரிய மரபின் அடிப்படையில் ஒவியங்களை வரைகின்றன’ என்ற குற்றச்சாட்டுகூட அப்போது வைக்கப்பட்டது  தி.மு.கழகத்தினரின் இந்த ஓவிய ஆர்வம் வியப்பளிக்கின்றது தி.மு.கழகத்தின் உள்ளாக நடைபெற்றுவந்த இவ்வாறான ஒளிய முயற்சிகளின் தலைமையகம் என்று நாகை தி.மு.கழக அலுவலகத்தைக் கூறமுடியும்.

அக்கால நாகைத் தி.மு.கழக அலுவலகத்தில் ஓவியப் பகுதி, சித்திரப் பகுதி, புகைப்படப் பகுதி, நூலகம் முதலியன இயங்கிவந்தன. திராவிட இயக்கத் தலைவர்களின் படங்கள், வால்ட்விட்மன், இங்கர்சால், பெர்னாட்ஷா, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ரூசோ, மாஜினி என எண்ணற்ற ஓவியங்கள் ஓவியப் பகுதியில் இருந்தனவாம். திராவிடர் அன்று – திராவிடர் இன்று, மாஜி கடவுள்கள், ஆரிய இனத்தின் வளர்ச்சி முதலிய தலைப்புகளில் வரையப்பட்ட விளக்க ஓவியங்களும் இடம்பெற்றிருந்தனவாம்.

மேலைநாடுகளில் மனித வாழ்க்கை, அவற்றின் நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிடர் இன வரலாறு, பல்வேறு நாடுகளின் நிலப்படங்கள் உள்ளிட்ட இன்ன பிறவும் சித்திரப் பகுதியில் (கோட்டுச் சித்திரங்கள்) இருந்துள்ளன. தி.மு.கழக மாநாடுகள் பொதுக்குழுக்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றோடு தலைவர்களின் புகைப்படங்கள் புகைப்படப் பகுதியில் அமைந்திருந்ததாம். நாகை தி.மு.கழகத்தின் இந்தப் பண்பாட்டுச் செயல்பாடுகள், இடையில் ஏன் அறுந்துவிட்டதன என்பது சிந்தனைக்குரியது.

இவ்வாறு தனக்கென ஓர் ஓவியச் செயல்பாட்டை வகுத்துக்கொண்ட தி.மு.கழகத்தில் கேலிச்சித்திரங்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. காங்கிரஸ் அரசின் அடக்குமுறைகளை விமர்சிக்கும் பிரமாண்ட கேலிச்சித்திரங்களை மாட்டுவண்டிகளில் கட்டி, உடன்பிறப்புகள் ஊர்வலங்களில் வருவார்கள். இந்தக் கேலிச்சித்திரங்களில் பெரும்பாலனவை திராவிட இயக்க இதழ்களில் வந்தவையாக இருக்கும்; அல்லது ஏதோவொரு தி.மு.கழகத் தொண்டரின் சிந்தனையாகக்கூட இருக்கும்.

கழகக் கூட்டங்களின்போது இந்தக் கேலிச்சித்திரத் தட்டிகள் தெருக்களின் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும். இந்த எளிய பிரச்சாரச் செயல்பாட்டைப் பின்னாளில் காங்கிரஸ் தொண்டர்களும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘முரசொலி’, 1960ஆம் ஆண்டுக்கு முன்பு வார இதழாக வெளிவந்தபோது, பெரும்பாலும் கேலிச்சித்திரங்களை முகப்பில் தாங்கி வெளிவந்தது. முரசொலி மட்டுமன்று; மாலை மணி உள்ளிட்ட திராவிட இயக்க ஏடுகள் பல, அரசியல் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்துவந்தன. அரசியல் கருத்துகள் எளிதாக மக்களைச் சென்றடையும் வண்ணம் திராவிட இயக்க ஏடுகள் கேலிச்சித்திரங்களை வெளியிட்டன என்று கூறமுடியும். ‘சுதேசமித்திரன்’, ‘நவசக்தி’ முதலிய ஏடுகள் தி.மு.கழகக் கருத்தியலுக்கு எதிரான கேலிச்சித்திரங்களை வெளியிட்டபோது, அவற்றை எதிர்த்துக் கழக ஏடுகள் விமர்சனங்களை எழுதின.

அதுபோன்று, திராவிட இயக்க ஏடுகள் வெளியிட்ட கேலிச்சித்திரங்கள் காங்கிரஸ்காரர்களை எரிச்சலடையவைத்தன. “முன்பக்கத்தில் போடப்படுகின்ற கேலிச்சித்திரம் ஒவ்வொன்றும் அவர்களை (காங்கிரசுகாரர்களை) எரிமலையாக்கின. அருப்புக்கோட்டையிலே கருமாதி என்று கேலிச்சித்திரம் போட்டிருந்தோம். இதைக் கண்டு ஆத்திரப்படாத காங்கிரஸ்காரர்களே கிடையாது.

பாண்டிச்சேரியிலே நாம் தோற்றபோது, அவர்கள் நம்மைப் பார்த்து சொன்னதுதான் இது அப்போது அவர்கள், அரசியல் நாகரிகத்தோடு நடந்துகொண்டிருந்தால் நாமும் இந்தக் கேலிச்சித்திரத்தை இப்போது போட்டிருக்கவே மாட்டோம். பலமில்லாத காங்கிரஸ் கட்சி, கயிற்றில் தொங்குவதுபோல ஒரு கேலிச்சித்திரம் போட்டிருந்தோம். இது காங்கிரஸ்காரர்களுக்கு உச்சிமுதல் உள்ளங்கால்வரை எரிச்சலை ஊட்டி இருக்கிறது” என்று 1960-களில் வெளிவந்த ‘மாலை மணி’ இதழ், தன் கேலிச்சித்திரங்களின் செயல்பாடுகள் பற்றித் தலையங்கமே எழுதியிருந்தது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

திராவிட இயக்க ஏடுகளிலே முரசொலி’ இதழ்தான் கேலிச்சித்திரங்களுக்கும் சித்திரத் தொகுப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் தந்த இதழாகும். முரசொலியின் கேலிச்சித்திரங்களையோ அல்லது சித்திரத் தொகுப்புகளையோ உற்றுநோக்கினால், சித்திரக்காரரும் இதழின் ஆசிரியரும் இணைந்து செயல்பட்டிருப்பது புலனாகும். இல்லையெனில், மந்திரவாதி கதைகளாகவே வெளிவந்த, ‘நாளிதழ் சித்திரக்கதைத் தொடர்கள்’ முரசொலியில் தி.மு. கழக வரலாறாக உருப்பெற்றிருக்காது. மூடநம்பிக்கைகளை ஊட்டும் பரமபத சோபன படம்’, புதிய பரமபத படமாக வெளிவந்திருக்க முடியாது. முரசொலி சித்திரங்களில் பெரும்பாலானவை ஓவியர் செல்லம் வரைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட இயக்க ஏடுகள் கேலிச்சித்திரங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல், மற்ற ஏடுகள் வெளியிடும் சித்திரங்களுக்குப் பதிலளிக்கும் பணியையும் செய்துவந்தன. 29.05.1966 நாளிடப்பட்ட விகடனில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது; காமராசரின் பிரம்மாண்டமான சிலை ஒன்று பீடத்தில் நிற்கின்றது; அதில் கயிற்றைக் கட்டி இராஜாஜி. அண்ணா, காயிதேமில்லத் முதலியோர் சிரமப்பட்டு இழுப்பதாகவும், ஆனால் சிலையோ, இம்மிகூட அசையாமல் கம்பீரமாக நிற்பதாகவும் அந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. இதற்கு ‘முரசொலி பதிலளிக்கும் விதமாக ‘கேலிச்சித்திரம் வரைந்த விகடனே! காலம் வரைந்த சித்திரம் காண்! விகடனுக்குக் காணிக்கை” என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்றை 29.05.1966 அன்று படத்தோடு வெளியிட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

“அசைக்க முடியாதாம் காமராசரின் காங்கிரசை! ஆனந்த விகடன் – ஒரு கேலிச்சித்திரம் தீட்டியுள்ளது: பாவம் -வீழ்ந்துவிட்ட அந்த ஏடு வரலாறுகளை மறந்து காங்கிரசுக்கு வால்பிடிக்கும் ஏடாக மாறிவிட்டதற்கு அனுதாபப்படுகின்றோம். இதோ அருகில் காலம் வரைந்த சித்திரம் உள்ளது பாருங்கள்! இந்த மனிதர் ‘நிக்ரூமா!’ இவர்தான் ஒரு காலத்தில் கானா நாட்டின் இரட்சகர் என்று பாராட்டப்பட்டார். ஆனால், வழிபட்ட பக்தனையே பலிகேட்ட தெய்வம் போல் இவர் தன் மக்களையே அடக்குமுறையில் தள்ளினார்.

நாட்டைத் தன் சுகபோகத்திற்குக் கருவியாகப் பயன்படுத்தினார். சர்வாதிகாரியாக மாறி, வெறிக்கூத்தாடினார்; தான் மட்டுமே தலைவர் என்றார், தன்னுடைய கட்சி மட்டுமே கட்சி என்றார். முடிவு என்ன? இரட்சகன் என்று நம்பிய மக்களே ராட்ச்சன் ஒழிய மாட்டானா? என்று குமுறினார்கள். குமுறலின் பயனாய் நிக்ரூமாவின் ஆட்சி கவிழ்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேசத்திற்கு ஏகக்கடவுள் நானே என்பது போல் கானா பாராளுமன்றத்திற்கு

முன்னின்ற நிக்ரூமாவின் சிலையை உடைத்துக் கீழே தள்ளினர். பெரும்சக்தி எனக்கு உண்டு என்று இறுமாந்திருந்த நிக்ரூமாவுக்கு ஏற்பட்ட நிலையை, எதிர்க்கட்சிகளைக் கேலிசெய்து சித்திரம் வரைந்த விகடனே. பார்! காலம் வரைந்த இந்தச் சித்திரத்தைப் பார்த்தாவது விகடனுக்குக். கண் திறக்குமா?” இவ்வாறு முரசொலி அந்தக் கட்டுரையை முடித்திருந்தது. வீழ்ந்துபட்ட குவாமே நிக்ரூமாவின் (Kwame Nkrumah) சிலைமீது மக்கள் ஏறிமிதிக்கும் புகைப்படத்தை முரசொலி ‘டைம் ஏட்டிலிருந்து மள்பிரசுரம் செய்திருந்தது. முரசொலி 29.05.1966 அன்று எழுப்பிய எதிர்ப்புக்கு, 1967ல் பதில் கிடைத்தது என்பது சுட்டத்தக்கது.

தன்னுடைய கருத்தியலை விமர்சித்த கேலிச்சித்திரங்களுக்கு மட்டும் முரசொலி பதிலளிக்கவில்லை; விளிம்புநிலை மக்களான சலவையாளர் சமூகத்தைக் கிண்டலடித்து, 03.04.1966 நாளிடப்பட்ட ஆனந்த விகடனில் கேலிச்சித்திரம் ஒன்று வெளிவந்தது. இதை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்று ‘முரசொலி ‘ முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. ‘முரசொலி’யின் கேலிச்சித்திரங்களில் சில அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தின.

அது, எதுவரை சென்றது என்றால், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் தி.மு.கழகத்தின் பொருளாளருமான கலைஞர் மு.கருணாநிதியைக் கைதுசெய்யுமளவுக்குச் சென்றது. 16.02.1965 அன்று கைதுசெய்யப்பட்ட கருணாநிதி, பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிடவிட் ஒன்றைத் தாக்கல் செய்தார். அது திராவிட இயக்க ஏடுகளால் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

‘ முரசொலியில் வெளியான கார்ட்டூன்கள் முதலமைச்சரை (பக்தவத்சலத்தை ஆத்திரமடையச் செய்திருக்க வேண்டுமென்று நான் கூறிக்கொள்கின்றேன். 19.01.1965 ‘முரசொலி’யில் வெளியான கார்ட்டூன், தமிழ்த்தாயை முதலமைச்சர் பக்தவத்சலம் சுட எத்தனிப்பதாகச் சித்திரிக்கிறது. 29.01.1963 ‘முரசொலி’ கார்ட்டூன் தமிழுக்காக இந்தித் திணிப்பை எதிர்த்து தியாகம் செய்துகொண்ட நால்வரது நரபலியில் முதலமைச்சர் பக்தவத்சல திருப்திபடுவதாகச் சித்திரிக்கின்றது. 05.02.1965 ‘முரசொலி’ கார்ட்டூன் முதலமைச்சர் பதவியைப் பக்தவத்சலம் கேலி செய்வதாகச் சித்திரிக்கின்றது 03.02.1965 கார்ட்டூன் பக்தவத்சலத்தை ஜெயிலராகச் சித்திரிக்கின்றது 07.02.1965 கார்ட்டூன் முதலமைச்சர் பக்தவத்சலம் பழைய இந்தி மதுவையே பரிமாறுவதாகக் காட்டுகின்றது. 12.02.1965 கார்ட்டூன் முதலமைச்சர் பக்தவச்சலம் ஒரு போலீஸ்காரராக சுடுவது போலவும் அதைப் பார்த்து, ‘ஜாலியன்வாலாபாக்’ புகழ் ஜெனரல் டயரின் ஆவி புகழ்வதாகவும் காட்டுகின்றது.

இராணுவம் வரவழைக்கப்பட்டதை ஒட்டி வெளியான இன்னொரு கார்ட்டூன், முதலமைச்சரை ஒரு மேஜர் ஜெனரலாகக் காட்டுகின்றது’ என்று அந்த அபிடவிட் விரிந்துசெல்லும். திராவிட இயக்க ஏடான முரசொலியின் கேலிச்சித்திரங்கள் ஒரு அரசாங்கத்தையே கோபப்படவைத்தன என்றால், கேலிச்சித்திரத்தின் திராவிட இயக்கத்தினரின் கேலிச்சித்திரங்கள் விவாதங்களுக்கும் வீரியம் எந்தளவு பாயும் என்று இப்போது விளங்கியிருக்கும். இவ்வாறு. எதிர்ப்புக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

பேரறிஞர் அண்ணா கேலிச்சித்திரங்களின் இரசிகர். அவருக்கு ஓவியங்களின் மீதும் ஆர்வம் இருந்தது. கேலிச்சித்திரங்கள் பற்றி அவர் எழுதிய ‘கார்ட்டூனாயணம்’ என்னும் கட்டுரை மிக முக்கியமானது. காங்கிரஸ் ஆதரவு ஏடுகளாலும் பார்ப்பன ஏடுகளாலும் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களில் பெரும்பாலானவை தி.மு.கழக எதிர்ப்புச் சித்திரங்களே ஆகும். இத்தகைய எதிர்ப்புச் சித்திரங்களின் கிண்டலைத் தி.மு.கழகத்தினர். எவ்வாறு எடுத்துக்கொண்டர் என்பதை “நானும், இராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோரும் ஒரு கழுதைமீது சவாரி செய்வதாக ‘விகடன்’ படம் போட்டுக் காட்டிற்று. நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். நான் சமாதானம் சொன்னேன்.

கழுதைமீது சவாரி செய்வதாகத்தானே படம்; கழுதையாகவே சித்திரிக்கவில்லையே என்று. இப்படி ஏதாவது ஒரு சமாதானம் சொல்லிவிட்டால் போதுமா என்று சலித்துக்கொண்டார்கள். விகடன் அதிபர் காங்கிரஸ்காரர்! ராஜ்யசபை உறுப்பினர். அவர் எதிர்க்கட்சிகளைக் கேலிப்படம்மூலம் கேவலப்படுத்துகின்றார். அது, பண்பு அல்ல என்றாலும் அது அவர் தம்முடைய கட்சிக்காகச் செய்யும் சேவை என்று கருதிக்கொள்ளக்கூடும். அவர் என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம் என்று கூறும்போது, அவரிடம் வேறு எதிர்பார்க்க நமக்கு எது உரிமை? மலக்குழி என்று போர்டு போடப்பட்டுள்ள இடத்தில் நின்றுகொண்டு, மல்லிகை மணம் வீசக் கூடாதா? என்று கூறுவதும் எதிர்பார்ப்பதும் மிகப் பெரிய தவறு” என்று பேரறிஞர் அண்ணா பதிவுசெய்திருக்கிறார். கேலிச்சித்திரங்கள் தொடர்பாக இப்படியொரு அரசியல் அறத்தை அண்ணா பின்பற்றினார். ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘நவசக்தி’ அண்ணாவைத் தலையிழந்த முண்டமாகக் கேலிச்சித்திரம் வரைந்தது.

என்னுடைய பள்ளி நாட்களில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் வீரியமாக நடந்துகொண்டிருந்தது. நாங்கள் பூர்வீகமாக இருந்த கோரிப்பாளையத்தில் இயங்கிவரும் அமெரிக்கன் கல்லூரி அப்போராட்டத்தில் பெரும் பங்காற்றியது. காந்தியின் வார்தா ஆசிரமத்தில் இருந்துவிட்டுத் திரும்பியபின், இலங்கையிலிருந்து தலைமறைவு வாழ்விற்காக வந்த கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.எம். பெரரைரா ஆகியோரின் தொடர்பால் டிராடஸ்கிஸ்ட்டாக மாறிய என் தந்தையார், எம்.ஆர்.மருதப்பன் இயல்பாகவே காங்கிரஸ் எதிர்ப்பாளர்.

அதனால் தமிழ்நாடு, ஆனந்த விகடன் மற்றும் சில பத்திரிகைகளோடு முரசொலியும் தொடர்ந்து எங்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. கூடவே, எங்களது கொட்டத்தில் குடியிருந்த மேகநாதன், கோரிப்பாளையத்தில் இப்போது இருக்கிற தேவர் ஹோட்டலுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருந்தார். அங்கு நான் சிலைக்கு அருகில் குமரன் நாயர் வைத்திருந்த ‘மீனாட்சி விலாஸ் மேகநாதன் கடைமுழுவதும் திராவிட இயக்கத் தலைவர்கள் நடத்தும் சேமித்த காசை வைத்து ‘கண்ணன்’ பத்திரிகை வாங்கச் செல்வேன் பத்திரிகைகள்தான் தொங்கும்.

பத்திரிகைகளுக்கு ஊடேதான் தலையைக் கொடுத்து அவரைப் பார்க்க முடியும். பெட்டிக்கடை உயரம்கூட அல்லாத என்னிடம், என் தந்தை கொடுத்துவிடச் சொன்னதாகப் பல பத்திரிகைகளை அவ்வப்போது கொடுத்து அனுப்புவார். என் தந்தையாரும் அப்பத்திரிகைகளில் வருகிற உலகச் செய்திகளையும் பெரும் சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகளையும் காட்டி, ‘இதைப் படிடா என்று எனக்கும் என் சகோதரர்களுக்கும் சொல்வார்.

என் தந்தையாருடைய சேகரிப்பில், ‘திராவிடநாடு’ இதழ்த் தொகுப்புகள் இருந்தன. திராவிடநாடு இதழ் தொகுப்பில் இருக்கிற, புராணங்களைக் கேலிசெய்யும் சித்திரத் தொகுப்பையும் பாரதிதாசனின் ‘குயில்’ சேகரிப்பில் இருக்கிற கே.மாதவனின் ஓவியங்களையும் நான் அந்தச் சிறு வயதில் வெகுவாக இரசிப்பேன். அப்போது, மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையின் முன்பு உள்ள குதிரைவண்டி லாயத்திற்கு அருகில் வரிசையாகப் பெட்டிக்கடைகள் இருக்கும். விதவிதமாகத் தமிழரின் வாழ்வை ஓவியமாக வரைந்த கே.மாதவனின் ஓவியப் படைப்பு தாங்கிய பொங்கல் வாழ்த்துக்களை ஒன்றுவிடாமல் ஓடி, ஓடிச் சேகரித்துவைத்து, யாருக்கும் அனுப்பாமல் இரசித்துக்கொண்டே இருப்பேன்.

தெளிவான அரசியல் பின்னணி கொண்டிருந்த என் தந்தை, எங்களுக்கு அளித்த நூல்கள், பார்க்கக் கொடுத்த உலக ஓவியங்கள், புகைப்படங்கள், பத்திரிகைகள் என்பனவோடு, தந்தை பெரியாரைப் பற்றியும் அறிந்துகொண்டேன். உலகப் பொதுவுடைமை இயக்க வரலாறு, திராவிட இயக்க வரலாறு தொடர்பான நூல்களும் ஓவியர் கே.மாதவன் அவருடைய சீடர் ஆர்.நடராஜன், முரசொலி கேலிச்சித்திரக்காரர் செல்லம் ஆகியோருடைய படைப்புகளும் பரவலாகக் கிடைக்கிற வாரப்பத்திரிகை ஓவியங்களோடு எனக்கு உரிய வயதிலேயே கிட்டியது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

பண்டைக்காலம் தொட்டு உயரிய ஓவிய வரலாறு, தமிழ் ஓவிய வரலாறு, அதிலும் கடந்த 150 ஆண்டுக்கால வளர்ச்சி அற்புதமானது காலனீய தொடர்பு நிலை ஒலியம், பின் அதன் பாதிப்பில் ராஜா ரவிவர்மா, அதன் பாதிப்பில் பம்பாய் திரைப்பட கர்த்தா தாதாசாகேப் பால்கே, பின் அவர் பார்வையின் பாதிப்பில் வெளிவந்த மராட்டிய சினிமா, மராட்டிய சினிமாவின் பாதிப்பில் தமிழ் சினிமா, இதன் ஊடே தென்னிந்தியாவில் முதலில் தோன்றிய ஓவியக் கல்லூரி, அதில் பணியாற்றிய ராய் சவுத்திரி, தமிழ் நாடகத்தில் ஓவியர்களின் பங்கு, சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து நாடகவழியில் சிவகாசி காலண்டர் ஓவியத்திற்குக் கொண்டையராஜூ, திருவிதாங்கூர் ஓவிய வழியிலிருந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் தமிழ்த்திரை உலகிற்கும் பின் திராவிட இயக்க வெளிப்பாட்டிற்கும் கே.மாதவன், இதன் ஊடே காலண்டர் ஓவியப் பதிப்பு, பத்திரிகைப் பதிப்புமூலம் ஒரு பத்திரிகை ஓவியப்பாணியாகத் தமிழகப் பத்திரிகையில் கோபுலு, மணியம் முதலியோர் இத்துடன் ஓவியக் கல்லூரி – சிற்பி தனபால், பாரதிதாசன், தோழர் ஜீவா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று வரலாறு நீண்டுகொண்டே செல்லும். ஒவியர்கள் ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரைத் தொடர்ந்து வரும் இன்றைய ஓவியர்களாகிய நாங்களும் இந்தக் கண்ணியில்தான் வருகின்றோம்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அப்போதைய நிகழ்வுகளை அரசியல் கார்ட்டூன்களில் மிகத் திறமையாக வெளிப்படுத்தியவர், ஓவியர் டேவிட் லோ’. அவருடைய பாணியின் பாதிப்பில் ஆர்.கே.லட்சுமண் வந்தார். இன்று, பெரும்பாலும் அப்பாணியிலேயே மாட்டிக்கொண்டு வேறு பரிட்சார்த்தமான ஸ்டைலுக்கு நகர்ந்துசெல்ல முடியாமல்தான் பெரும் பத்திரிகைகளின் கேலிச்சித்திரங்கள் இன்றும் இருக்கின்றன.

1967ஆம் ஆண்டு தேர்தலுக்கு நான் வரைந்த சுவர் ஓவியங்களும் தட்டிகளும் எழுநூறுக்கும் அதிகமானவை; சிறு வயதில் நான் ஒரு நட்சத்திரம்’ போலத்தான்; தி.மு.க.வினர் என்னை ஊர் ஊராக அழைத்து செல்வார்கள். என்னை நன்றாகக் கவனிப்பார்கள்; உடன் துணைக்கு வரும் என் மாமா முருகேசனையும் சேர்த்துத்தான்; நிலக்கோட்டை, சக்திரப்பட்டி என்று பல ஊர்; இருபது அடிக்கு பதினைந்து அடி உயரம்; அப்படி வரைந்தே அந்த வயதில் என் கை திருந்தியதாக நினைப்பேன்; (ஆனால், பணம் எதுவும் வாங்காமலேயே) “போய் வரை உனக்கு எப்போது அப்படி பெரிய சுவர் கிடைக்கப்போகிறது’ என்று -என் தந்தையும் என்னை ஊக்குவிப்பார்.

தெருக்களின் சுவர்களில் நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவார். காங்கிரசார் இரவு நேரங்களில் என்னை மறித்து, “எங்களுக்கும் வரைந்து கொடு காசு தருகிறோம்” என்பார்கள்; “வீட்டில் திட்டுவார்கள்” என்று வேகமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவேன். கோரிப்பாளையத்தில் தொடர் கண்காட்சி போல் என் படங்களைத் தெருக்களில் வரிசையாகத் கட்சிக்காரர்கள் காட்சிப்படுத்தினர். எனக்கு அவ்வளவு பெருமை அப்போது.

தேர்தல் வெற்றிக்குப் பின் என் பள்ளியிலேயே கட்சிக்காரர்களுக்கு விருந்து. மாவட்டச் செயலாளர் மதுரை எஸ்.முத்து என்னைக் கட்டிக்கொண்டு, வருபவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகச் சொன்னார். பிறகு, தி.மு.க. வெற்றிபெற்று ஆறு மாதம் கழித்து முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மதுரையில் அமைச்சர்களோடு அலங்காரவண்டியில் அழைத்துவரப்படுகிறார். அமெரிக்கன் கல்லூரி முன்பு இருக்கும் சாலையில் வரிசையாக கோரிப்பாளையம் தி.மு.க.வினரால் அமைக்கப்பட்டிருந்த எல்லா வளைவுகளின் மேலேயும் நான் வரைந்த அண்ணா படங்களே அலங்கரித்தன.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சித்திரங்கள் பேசிய திராவிடம்!

அந்த வழியாகத்தான் அண்ணா வந்தார். பள்ளி முடிக்காத அந்த வயதில், எனக்குப் பெரிய பெருமைதான். அன்று, திராவிட இயக்கப் பத்திரிகைகளில் வந்த சித்திரங்களும், செல்லத்தின் முரசொலி கேலிச்சித்திரங்களும், அப்போது எனக்குக் கிடைத்த ஐரோப்பிய ஓவியர்களின் ஓவியங்கள், ‘How to draw and paint’ நூல்கள், காமிக்ஸ்கள், திரைப்படங்கள், Animation என்பனவற்றை எல்லாம் தாண்டி மிதக்கின்ற என்னைத் தரையில் நடக்கும்படி செய்தது என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட திராவிட இயக்கம் கேலிச்சித்திரங்களாலும் கருத்துச் சித்திரங்களாலும் என்னை வளப்படுத்தியது போலவே தமிழ்ப்பெருங்குடி மக்களையும் வளப்படுத்தியது என்பதே வரலாறு.

 

MUST READ