பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ரவுடி வெள்ளை காளியை போலீசார் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்தறை டோல்கேட் அருகே உள்ள ஒரு உணவகத்தில் காவலர்கள் உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, திடீரென 10 பேர் கொண்ட மர்ம கும்பல் போலீஸ் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலீசார் தாக்குதல் நடத்திய கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.
நாட்டு வெடிகுண்டு தாக்குதலில், ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்திருந்த 2 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடி வெள்ளை காளி எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பாக, ரவுடி வெள்ளை காளி மீது ஏற்கனவே 9 கொலை வழக்குகள் மற்றும் 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒயின் ஷாப்பில் தகராறு…கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட ரவுடி…


